
1. ‘சபாஷ் சரியான போட்டி…!’ ( பழைய கதை - புதிய பாடல்)
வானில் திரியும் காற்றுக்கும்
வருத்தி எடுக்கும் பரிதிக்கும்
வீணில் ஒருநாள் சண்டையாம்!
வீரர் யாரெனச் சண்டையாம்!
சாலை தன்னில் நடந்தஓர்
சப்பையான மனிதன்மேல்
சக்தி தன்னைக் காட்டிட
சண்டை போட நினைத்தன!
சப்பையான மனிதன்மேல்
சால்வையொன்று இருந்தது
சால்வை தன்னைக் கழற்றித்தம்
சக்தி காட்ட நினைத்தன!
சப்பையான மனிதனின்
சால்வை கழற்றக் காற்றுமே
குப்பென அடித்து வீசியே
சால்வை தன்னை ஈர்த்தது!
மனிதன் தனது கைகளால்
மார்பிலிருந்த சால்வையை
பிணைத்துக்கொண்டு இறுக்கமாய்
விரைந்து நடக்க லாயினன்!
கண்ட பரிதி கடுமையாய்
கதிரை வீசிக் கொடுமையாய்
வியர்வை வடிக்க வைத்தது
வெம்மை தன்னைக் கொடுத்தது.
மனிதன் அந்தச் சால்வையை
மார்பிலிருந்து வேகமாய்
கழற்றிக் மடித்துக் கக்கத்தில்
இறுக்கிக் கொண்டு நடந்தனன்.
கண்ட காற்றுதன் தோல்வியை
கதிரிடம் ஒப்புக் கொண்டது!
சண்டை போட்டோம் வீணில்நாம்
கண்டேன் எனது சக்தியை..!
சூடும், காற்றும் மனிதனைச்
சுகத்தில் வைக்க மட்டுமே
போடும் சண்டை தன்னிலே
போர்க்களமாகும் உலகமே!
உலகில் உள்ள யாவரும்
ஒருவருகொருவர் உதவியே
உண்மையாக வாழ்ந்திடில்
என்றும் துன்பம் இல்லையே!
‘நானே!’ என்னும் எண்ணமே
நாட்டில் தீமை பண்ணுமே!
ஏனோ சண்டை நமக்குள்ளே?!
இருப்போம் ஒன்றாய் என்றைக்கும்!
என்றே இரண்டும் நட்பாக
இனிதே சென்றன அன்பாக
நன்று இதைநாம் நெஞ்சத்தில்
நாளும் பதித்து உயர்வோமே!
2. ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..! (கதைப்பாடல்)
குதிரை ஒன்றில் ஏறியே
தந்தை அவரின் மகனுமே
அதிவிரைவில் சாலையில்
சந்தை சென்று திரும்பினர்!
குதிரை மிகவும் மெலியது
குட்டி வடிவில் சிறியது
அதிலமர்ந்த இருவரை
சுமக்கச் சிரமப் பட்டது!
சாலைப் பாலம் வழியிலே
சவாரி செய்து போகையில்
ஆளுகொருவராகவே
அரட்டையடித்துக் கொண்டனர்
‘பாவமய்யா குதிரையும்,
இருவரையும் சுமக்குமோ?
ஒருவர் இறங்கி போதலே
இரக்கம்!’ என்று பேசினர்.
தந்தை மகனை குதிரைமேல்
குந்தி இருக்கச் சொல்லியே
தான்நடந்து சென்றிட,
ஆளுகொன்றாய்ப் பேசினர்.
‘வயது முதிர்ந்த பெரியவர்
வருந்தி நடத்தல் நியாயமோ?
இளைஞன் நடந்து போவதே
எவர்க்கும் நல்ல தென்றனர்!’.
தந்தை தன்னை இறுத்தியே
தனையன் நடந்து போகையில்
விந்தை இந்த முதியவர்
குந்தி அமர்ந்து செல்வது
குதிரை தன்னைத் தூக்கியே
கொண்டு போதல் அல்லவோ
குதிரை மீது அன்பினைக்
காட்டும் செயல் என்றதும்
குதிரை தன்னைத் தூக்கியே
தோளில் வைத்து நடக்கையில்
உந்தி அந்தக் குதிரையும்
உயரக் குதித்து பாலத்தில்
ஓடும் நீரில் விழுந்தது
உயிரை மாய்த்து விட்டது!
ஊருக்கென்ன ஆயிரம்
ஒன்று ஒன்றாய்ச் சொல்லிடும்
நமக்கு நல்லது எதுவென
நாமே தெளிதல் அல்லவோ…
உண்மையான் ஞானமாம்!
உணர்ந்து வாழ்தல் மேன்மையாம்!
அன்பு காட்டல் தேவைதான்
அதில் அழிதல் நியாமோ!??