பிற மொழிகளில் தலை சிறந்து விளங்க வேண்டுமா?

proficiency to speak read and write in other languages
Proficiency in other languagesImg credit: pexels
Published on

“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பது தமிழ் மூதாட்டி ஓளவையின் கூற்று. நாம் செல்லும் இடங்களில் சிறந்து விளங்க அந்த இடத்தில் புழக்கத்தில் உள்ள மொழியை அறிந்துகொள்வதும் அவசியமான ஒன்று. ஏனெனில், மொழி என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சாதனம்.

ஒரு சிலருக்கு தாய்மொழியைத் தவிர பிற மொழிகளில் பேசுவதற்கு அச்சம், தயக்கம் இருக்கும். நம்மை சுற்றியுள்ள நபர்கள் பிறமொழியில் நன்கு பிழையில்லாமல் பேசும்போது நமக்கும் அவ்வாறு பேச வேண்டும் என்ற ஆசை எழும். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வரும். நாமும் அவர்களுடன் அவர்கள் மொழியில் பேச வேண்டும் என்ற உறுதியான எண்ணம் தோன்றும்.

ஒரு சிலருக்கு சில மொழிகளை புரிந்துகொள்ள முடியும். ஆனால், தெளிவாக அதற்கு பதில் சொல்ல முடியாது. சரளமாக பேச முடியாது. இன்னும், சிலருக்கு சில மொழிகளை புரிந்துகொள்ள முடியும். பேச முடியும். ஆனால், எழுத, படிக்கத் தெரியாது. வேலை, படிப்பு போன்ற வாழ்க்கைச் சூழ்நிலையால் ஒருவர், தன் தாய் மொழியைத் தாண்டி வேறு மொழியும் காற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்கிறது. ஒரு மொழியில் தலை சிறந்தவராக விளங்க வேண்டுமானால் அதைச் சரளமாக பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். அதற்கான பிரத்தேகமான பயிற்சி வகுப்புகளும் நிறைய வந்துவிட்டன.

ஒரு மொழியை எளிதாக,மிக குறைந்த செலவில் புரிந்துகொள்ள, சரளமாக பேச, படிக்க, எழுத கற்றுக்கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போமா?

ஒரு மொழியை கற்றுக்கொள்ள முதலில் செய்ய வேண்டியது, நமக்கு இருக்கும் தயக்கத்தையும், அச்சத்தையும் தவிர்க்க வேண்டும்.

பின்னர், அதைப் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் காற்றுக்கொள்ள விரும்பும் மொழித் தொடர்பான தொடர்கள், சினிமாக்கள், இசைகள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து, அவைகளில் பேசுவதை போல பேச முயற்சி செய்யுங்கள். அவர்களின் சரளமான தன்மை, உச்சரிப்பு மற்றும் ரிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நீங்கள் எங்கு பின்தங்குகிறீர்கள் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த மொழியை நன்கு அறிந்தவர்களிடம் சென்று உரையாடிப் பழகுங்கள். மனதிற்கு தோன்றியதை கண்ணாடி முன் நின்று, வேறு மொழி கலப்பிடமில்லாமல் உங்களுடன் கலந்துரையாடிப் பாருங்கள். இது உங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள voice typing to text போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, வார்த்தையை எவ்வளவு துல்லியமாகப் அது புரிந்துகொள்கிறது எனச் சோதித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த தூக்கத்திற்கு உத்திரவாதம் தரும் Cricket Feet டெக்னிக் பற்றி தெரியுமா?
proficiency to speak read and write in other languages

அடுத்ததாக, அந்த மொழியை எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மொழியில் உள்ள எழுத்துக்களைப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அகராதி (dictionary) அல்லது சொற்களஞ்சியம் (thesaurus) வைத்துக்கொள்ளுங்கள். பரிச்சயமில்லாத அல்லது புதிதாக வார்த்தைகளை பார்த்தால், அதற்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க இது உதவும். அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்கு இணையான வேறு சொற்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அகராதி இல்லையென்றால், இணையதளத்தை பயன்படுத்தி எளிதாக அறிந்துகொள்ளலாம். அந்த மொழியைப் படிப்பதில் தேர்ந்த பிறகு,

ஒரு குறிப்பிட்ட பத்தியை எடுத்துக்கொண்டு அதற்கான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதை உங்கள் சொந்த வார்த்தைகளால் சுருக்கிப் பாருங்கள். இந்த பயிற்சியானது நீங்கள் வாசித்ததை மனதில் நிறுத்திக்கொள்ள உதவுகிறது.

ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஈமெயில், லெட்டர் போன்ற வெவ்வேறு வடிவங்களில் அதைத் தொடர்ந்து எழுதிப் பார்க்க வேண்டும்.

விரிவான கேள்விகள் அல்லது தலைப்புகளை கண்டறிந்து அதற்குப் பதிலளிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். மனதில் தோன்றிய எண்ணங்களை எழுதிப் பழகுங்கள். இது எழுதும் வேகத்தையும் காலத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

நீங்கள் எழுதியதை முடிந்தவரை இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற்குறிகள் போன்றவற்றை நீங்களே சரி செய்து பாருங்கள் அல்லது தெரிந்தவர்களிடம் கொடுத்து திருத்திக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் எழுத்துக்களை மேன்மைப்படுத்த முடியும்.

ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமும் முயற்சியும் இருந்தால் போதும். அதை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். ஒரு மொழி என்பது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளாத் தேவையான ஒரு சாதனமே தவிர வாழ்வின் அங்கம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டு, மொழி தெரியவில்லையே என்று கவலை மற்றும் மன அழுத்தம் கொள்ளாமல் அதைக் கற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com