பலருக்கும் தூக்கப் பிரச்னை உள்ளது. மொபைல் பயன்பாடு காரணமாக சிறுவர், சிறுமியர் கூட தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள். பெரியவர்களுக்கு படுத்த உடனேயே உறக்கம் வருவதில்லை. ‘கிரிக்கெட் ஃபீட்’ என்கிற டெக்னிக்கை பயன்படுத்தி நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிரிக்கெட் ஃபீட் என்றால் என்ன?
கிரிக்கெட் விளையாட்டிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனிதர்கள் தம் பாதங்களை ஒன்றன் மீது ஒன்றாக தேய்க்கும் உடல் இயக்கம் கிரிக்கெட் ஃ பீட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் கிரிக்கெட் என்கிற பூச்சிகளிடமிருந்து வந்தது. அவை தங்கள் நீண்ட பின்னங்கால்களை இறக்கைகளில் ஒன்றோடு ஒன்றாக தேய்த்துக்கொள்ளுமாம். அதனால் மனிதர்கள் தங்கள் பாதங்களை ஒன்றோடு ஒன்றாகத் தேய்த்துக் கொள்வதற்கு அந்தப் பூச்சியின் பெயரான கிரிக்கெட்டை வைத்து விட்டனர்.
உளவியலாளர் கருத்து: இது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் இந்த அமைதியான சுய செயல்பாடு மனிதர்களை மனப்பதற்றத்தில் இருந்து ஆறுதல் அளிக்கிறது. கவலைகளை மறக்கச் செய்கிறது. அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள் பிசியோதெரபிஸ்ட்கள்.
இதனால் உடல் அசைவுகள் குறைந்து உடல் ஓய்வெடுக்கத் தொடங்குகிறது. சிலருக்கு மன இறுக்கம், கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி கோளாறு போன்ற தூக்க சம்பந்தப்பட்ட நரம்பியல் கோளாறுகள் குணமாக உதவுகிறது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கிரிக்கெட் ஃபீட் டெக்னிக்கின் பயன்கள்:
1. ஒரு பாதத்தை மற்றொன்றுக்கு எதிராகத் தேய்ப்பது போன்ற தொடர்ச்சியான அசைவுகள் ஆக்ஸிடாசின் மற்றும் எண்டார்ஃபின் போன்ற நல்ல ஹார்மோன்களை தூண்டுகிறது. உடலுக்கு அமைதியான விளைவை சேர்க்கிறது. மனம் அமைதி பெறும்போது தூக்கத்தை நாடுகிறது.
2. அமைதியற்ற கால்கள். நோய்க்குறி உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் எந்தத் தீங்குகளும் ஏற்படுவதில்லை. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.
3. கால்களை தேய்க்கும்போது இந்த தொடர்ச்சியான இயக்கம் தசைகளை தளர்த்தி உடலை தூக்கத்திற்கு தயார் செய்ய உதவுகிறது.
4. பாதங்களைத் தேய்ப்பது இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. கால்களை சூடேற்ற உதவுவதோடு. தளர்வும் ஏற்பட்டு உடல் ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறது.
5. பாதங்களைத் தேய்ப்பதால் மென்மையான உணர்ச்சித் தூண்டுதல் ஏற்படுகிறது. மனமும் உடலும் அமைதி அடைகிறது. அது உடனே தூக்கத்தை வரவழைக்கிறது.
6. இந்த எளிமையான திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயலால் மனம் அழுத்தமான எண்ணங்களில் இருந்து விடுபட்டு தூக்கத்தை நோக்கிச் செல்கிறது.
7. பாதங்களைத் தேய்த்துக்கொள்வதன் மூலம் உடல் விழிப்புணர்வு பெற்று தற்போதைய தருணத்தில் எண்ணங்களை நிறுத்துகிறது. தேவையில்லாத எண்ணங்களில் இருந்து மனதை விலக்கி வைப்பதால், மனம் ஒருநிலைப்பட்டு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும். இது உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும், தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது இதில் உள்ள பெரிய நன்மையாகும்.