பெருங்கடலின் வட முனையில் உள்ள நாடு ஐஸ்லாந்து. இங்குள்ளது ரெய்க் ஹேன்ஸ் தீபகற்பம்!
டிசம்பர்-20ஆம் தேதி இங்கு ஒரு எரிமலை வெடித்தது. நிலநடுக்கம் தொடர்ந்து நடக்கும்போது எரிமலை வெடிப்பு சகஜம். சமீப வெடிப்புகூட அந்த ரகத்தை சேர்ந்ததுதான். இரண்டு மைல் பள்ளத்தில் இருந்து இது தொடர்ந்து எரிந்து வருகிறது.
ஐஸ்லாந்தைப் பற்றி ஒரு விஞ்ஞானி கூறும்போது ஒரே நிலப்பரப்பில் அது முற்றிலும் எரிமலை பூமி என்கிறார். டெக்டானிக் மேடு பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது. இங்கு டெக்டோனிக் தட்டுகள் எதிர் எதிர் திசைகளில் நகர்கின்றன. இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருந்து மாக்மா உயர்ந்து இடைவெளியை நிரப்புகிறது. இங்கு கண்டத்திட்டு அடுக்குகள் விரிகின்றன அல்லது குவிகின்றன. இந்த இடத்தில் எரிமலைகள் வெப்பப் பாறைகள் மேல் நோக்கி எறிவதாலும் எரிமலைகள் உருவாகும்.
இனி லேட்டஸ்ட் வெடிப்புக்கு போவோம். இதன் தாக்கம் 2010ல் வெடித்ததின் தாக்கம்போல் இருக்காது என நம்புகின்றனர், காரணம் வேகம் குறைந்துள்ளது. இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர்.
சரி...2010ல் என்ன நடந்தது?!
இது வெடித்தபோது வளி மண்டலத்தில் பெரும் தூசி எழுந்தது. இதனால் வட ஐரோப்பிய பகுதிகளில் பல வாரங்களுக்கு விமானங்கள் பறக்க இயலவில்லை. ஆனால், இந்த முறை 100 மீட்டர் உயரத்துக்கு மட்டுமே எரிமலை புகையை கக்கியது. இருந்தாலும் 4000 பேர் அந்த பகுதியிலிருந்து நகர்த்தப்பட்டனர். ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. அவற்றில் 24 ஆக்டிவ்.
5 வருடங்களுக்கு ஒரு முறை எரிமலை வெடிப்பு நிச்சயம்.
2021ல்கூட ஒரு எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், பாதிப்பு அதிகமில்லை. இங்கு வாழும் மக்கள் நார்வே நாட்டிலிருந்து சுமார் 1200 வருடங்களுக்கு முன் குடியேறியவர்கள். எரிமலை வெடிப்பு என கேள்விப் பட்டதும் வேடிக்கை பார்க்க செல்வர். ஆபத்தை அறியாமல் அருகில் நெருங்கி கடும் ஆபத்தில் சிக்கி உதவி கேட்டு அலறுவதும் உண்டு.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் ஏழு எரிமலைகள் உள்ளன. அவற்றில் ஒரே ஆக்டிவ் எரிமலை பாரன் தீவில் (அந்தமான்) உள்ளது.