இந்திய தேசியக்கொடி... சில சுவாரஸ்யங்கள்!

ஜூலை 22- இந்திய தேசியக்கொடி தினம்!
தேசியக்கொடி..
தேசியக்கொடி..
Published on

மது தேசியக்கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன, அதில் குங்குமப்பூ நிறம் நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தை குறிக்கிறது. மையத்தில் உள்ள வெள்ளை அமைதி மற்றும் உண்மையை உள்ளடக்கியது. கீழே உள்ள பச்சை நிறம் நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களம் ஆகியவற்றைக் காட்டுகிறது. என்பது பலருக்கு தெரிந்திருக்கும். அந்த தேசியக்கொடியான மூவர்ணக் கொடி ஒரே நேரத்தில்  வடிவமைக்கப்பட்டது இல்லை. நம் தேசியக்கொடி பலவிதமான மாறுபாடுகள் செய்யப்பட்ட பின் உருவாக்கப்பட்டது.

தற்போதுள்ள நம்முடைய தேசியக்கொடியை 1921 ஆம் ஆண்டு ஆந்திர மாநில மஞ்சிலிப்பட்டியைச் சேர்ந்த பிங்கலி வெங்கையா என்பவர் உருவாக்கினார்.1947 ம் ஆண்டு ஜூலை 22 ம்தேதிதான். தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது. அதற்கு முன்பு  வரை அது தேசிய காங்கிரஸ் கொடியாக இருந்தது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் சுதந்திர நாளன்று நாடு முழுவதும் தேசிய கொடியை பறக்க விட முடிவு செய்தனர். அதற்காக கொடிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் அனுப்பிய கொடிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வெங்கடாசலம் என்பவரின் "இந்துஸ்தான் பேப்ரிக்ஸ் நிறுவனம் தயாரித்து அனுப்பிய மூன்று தேசிய கொடிகளில் ஒன்றை செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று ஏற்ற தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது.

சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் தமிழகத்தில் முதன்முதலாக இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று 1947 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.05 மணிக்கு இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று கொடிகளில் ஒன்று. இந்த தேசியக்கொடி தற்போது கோட்டை மியூசியத்தில் உள்ளது. இந்த ஒரு தேசியக்கொடி மட்டும்தான் சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்றப்பட்ட கொடிகளில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது மற்றவைகள் காணமல் போய்விட்டது.  இந்தியாவிலேயே முதன் முதலாக மிக உயரத்தில் பறந்த தேசியக்கொடி சென்னை ஜார்ஜ் கோட்டையில் பறந்த தேசியக்கொடிதான். அப்போது 150  அடி உயரத்தில் தேசியக்கொடி பறந்தது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் சுதந்திர தின தேசியக்கொடியை 1947 ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையின் லா கோரி வாயிலுக்கு மேலே தேசியக்கொடியை ஏற்றினார்.21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடி முதல் முறையாக பறக்க விடப்பட்டது. அதன் பின்னர் ஆண்டு தோறும் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிக முறை சுதந்திர தின உரையாற்றியவர் பிரதமர் நேருதான்.

தேசியக்கொடியை நாம் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பறக்க விடுகிறோம் ஏன் தெரியுமா? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாம் சுதந்திரம் பெற்றால் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவோம்  என்று அறிவித்தார். இந்தக்காரணத்திற்காகவே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்டில் இங்கே தேசியக்கொடியை ஏற்றுவித்தார்.

இந்தியா குடியரசான பிறகு 1951 ல் இந்திய தரக்கட்டுப்பாட்டு துறையால் தேசியக்கொடிக்கு முதல் முறையாக கொடியின் நீளம், அகலம், நிறங்களின் அளவு, அடர்த்தி, பரப்பளவு, துணியின் தரம், கொடிக் கயிற்றின் தரம் ஆகியவை நிர்ணயக்கப்பட்டது.

நமது தேசியக்கொடியை மாலை 6 மணிக்கு மேல் பறக்க விடக்கூடாது என்பது விதி. 2022ம் ஆண்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை இரவிலும் பறக்க விடலாம் என்ற அனுமதியை அளித்தது மத்திய அரசு. 75 வது சுதந்திர தினத்தன்று முதன்முதலாக இந்தியாவில் செய்யப்பட்ட பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்கச்செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்:
சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
தேசியக்கொடி..

பொதுவாக தேசியக்கொடியை மூன்று வண்ணங்களில் துணியை தனித்தனியாகத் தயாரித்து பின்னர் அதை ஒன்றாக தைத்து முழு வடிவம் தருவார்கள். ஆனால் மூன்று வண்ணங்களில் துணிகளை தைக்காமல் ஒரே துணியாக நெய்து மூன்று வண்ணங்களில் மூவர்ணக்கொடியை  2018ல் உருவாக்கினார். ஆந்திர பிரதேசத்தைச்சேர்ந்த ஆர். சத்திய நாராயணன் எனும் கைத்தறி நெசவாளர்.

இந்திய குடிமக்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதியில்லை. தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் 10 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 23, 2004 அன்று உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பில் மக்களும் எல்லா நிகழ்வுகளின்போதும் கொடி ஏற்றலாம் என்ற அனுமதி பெற்றார்.

2014 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய். எம. சி. ஏ மைதானத்தில் 50 ஆயிரம் பேரைக்கொண்டு மனித தேசியக்கொடியை வடிவமைத்தனர் . இந்த மனித தேசியக்கொடியின் நீளம் 480 அடி, அகலம் 320 அடி. இது ஒரு கின்னஸ் சாதனை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com