
வருகிற ஆகஸ்ட் 15, 2025 அன்று நாம் 79வது சுதந்திர நாளைக் கொண்டாடும் சமயத்தில், ஏன் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்படுகிறது? அதன் தாத்பரியம் (பொருள்) பற்றித் தெரிந்துகொள்வோம்.
1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம், இந்திய சரித்திரத்தில் இணையற்ற முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். பல ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம், அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று.
அப்போது இருந்த 40 கோடி இந்திய மக்கள் விடுதலை அடைந்தார்கள். அதே சமயத்தில், அவர்களில் 34 கோடி பேர் இந்திய யூனியன் என்னும் சுதந்திர நாட்டினராகவும், மீதி உள்ள ஆறு கோடி பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள்.
சுதந்திரத் திருநாள் அன்று மாலை, டெல்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல், அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்திலேயே கூடப் பார்த்திருக்க முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. அந்த நாளில் மின்சார வசதி ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்திற்குத் தான் இடம் ஏது?
முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான சாந்தினி சவுக் என்னும் வெளிவீதியும், அந்த வீதியில் உள்ள மணிக்கூண்டும், டவுன்ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும் அற்புதமான தீப அலங்காரங்களுடன் ஜெகஜோதியாகப் பிரகாசித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோதிலும், சமஸ்தானங்களாக விளங்கிய ஹைதராபாத், காஷ்மீர், மைசூர், திருவனந்தபுரம், பரோடா போன்ற பகுதிகள் அவரவர் விருப்பப்படி இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்துகொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.
சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிராமத்தில் நாங்கள் படித்த பள்ளிக்கூடம் அமைந்துள்ள கட்டிடத்தின் சொந்தக்காரர், அன்றைய தினம் எல்லா வயதினருக்கும் பிஸ்கட்டும், ஆரஞ்சு மிட்டாயும் கொடுத்தார்.
தலைமை ஆசிரியர் முன்னிலையில், அந்தப் பள்ளிக் கட்டிடத்தின் சொந்தக்காரர் கொடி ஏற்றிவிட்டு, “குழந்தைகளே! இந்தக் கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன. அதற்கான விளக்கம் தெரியுமா?” என்றார். அன்றைய தினம் கொடியில் அமைந்த மூன்று வண்ணங்களுக்கு அவர் சொன்ன விளக்கம் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது, இன்றளவும்.
கொடியில் அமைந்துள்ள காவி வண்ணம் சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்தோரின் குருதியையும், வெண்மை நிறம் தூய்மையையும், அதன் கீழே அமைந்துள்ள பச்சை நிறம் பசுமையையும் குறிப்பிடுகின்றன. கொடியின் நடுவில் அமைந்துள்ள அசோக சக்கரம் இந்தியாவின் இறையாண்மையையும் குறிப்பதாக விளக்கம் கொடுத்தார்.
அன்று சிறுவர்களாக இருந்த நாங்கள், கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆசையில் எங்கள் வீட்டின் வாசலில் சுமார் மூன்று ரூபாய் பணம் திரட்டி, உள்ளூர் தியாகி அவர்களிடம் கொடியும் கயிறும் வாங்குவதற்காகக் கொடுத்திருந்தோம்.
கிராமத்தில் வீட்டில் இருந்த நீண்ட மூங்கில் ஒன்றினை வாசலில் குழிப்பறித்துக் கொடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால், இதைக் கண்ட எனது தாயார் அப்போது தடுத்து நிறுத்தினார். “உனக்கு நாட்டுப்பற்று இல்லை” என்று என் அம்மாவை கோபித்துக்கொண்டேன்.
அரசு அலுவலகங்களில் மட்டுமே கொடி ஏற்றும் பழக்கம் இருந்தது. மத்திய அரசு உத்தரவின்படி, வீடுகளிலும் கொடி ஏற்ற அனுமதி உண்டு என்கிற செய்தி கேட்டு ஆனந்தம் அடைந்தேன். அப்போது நிறைவேறாத ஆசை, இப்பொழுது எங்கள் வீட்டுப் பால்கனியில் தேசிய கொடி ஏற்றி நாட்டுக்கு மரியாதை அளிக்கிறோம்.