
குட்டித் தம்பி, "நதியில் வேகமாக இறங்கி தண்ணீர் குடிக்காதே" என்றது தாய் பசு.
"எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது" என்று கன்று கூறியது.
"எனக்கும் தாகமாத்தான் இருக்கு. அந்த அளவுக்கு வெயில் காட்டுலயே கொளுத்துதே. ஆனா நீ நினைக்கிற மாதிரி சடசடன்னு இறங்கி தண்ணீர் குடிக்க முடியாது" என்றது தாய் பசு.
"ஏம்மா, ஆத்துல நிறைய தண்ணீர் ஓடுது. எனக்கோ ரொம்ப தாகமா இருக்கு. தண்ணீர் குடிச்சா என்ன தப்பு?"
"இங்கதான் உன் அவசரம் உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிரும், புரிஞ்சிக்கோ," என்று தாய் எச்சரித்தது.
"அம்மா, எனக்கு புரியலியே. அப்படி என்னம்மா ஆபத்து இருக்கு?"
"தம்பி, நீ இப்பத்தான் பிறந்திருக்கே. இந்த காடு, இந்த உலகம், இந்த விலங்குகள் பற்றி எல்லாம் உனக்கு தெரியாது. நீ ஆத்துல தண்ணி ஓடுதுன்னு இறங்கினியோ இல்லையோ, எங்கிருந்து வரும்னு தெரியாது, அவ்வளவு வேகமா ஒரு முதலை வந்து அப்படியே உன்னை விழுங்கி கொண்டு போய்விடும்."
"அய்யோ என்னம்மா சொல்றே?"
"ஆமாம் குட்டி."
"இந்த ஆத்துல நான் எத்தினி வாட்டி தண்ணீர் குடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் குடிச்சிட்டு கரை ஏறுவது என்பது புது பிறவி எடுத்தமாதிரிதான்."
"அய்யோ அந்த அளவுக்கு அந்த முதலை மோசமானதா?"
"அதன் படைப்பு அப்படி. ஆம், நம்மைப்போல் தெரியாமல் நீரில் இறங்குபவர்களை இரையாக்கிக்கொள்வதுதான் முதலையின் உணவே."
"அப்ப என் தாகத்துக்கு தண்ணி? இப்படியே வறண்டு சாக வேண்டியதுதானா? அதற்கு அந்த முதலையிடமே நான் உயிர் துறக்கிறேன். என்னால் இனியும் ஒரு நொடி தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது" என்ற கன்று குட்டி உடன் நீரில் இறங்கியது.
இதை மரத்தில் இருந்த ஒரு பெரும் குரங்கு கவனித்து கொண்டிருந்தது. கன்று குட்டி நீரில் வாய் வைக்கும் போதே ஒரு இடத்தில் நீரின் சுழற்சி அதிகமாக இருந்தது. அந்த இடமே அதிர்வால் நீரை அலைபோல் அடிக்க செய்தது.
அப்போதுதான் தாய் கவனித்தது. "அய்யோ ஆபத்து. நம் குட்டி சிக்கியது. இனி அது அந்த பெரும் முதலைக்கு இரையாகப்போகிறது" என்று நினைத்தபோதே பெரும் முதலை வேகமாக குட்டியை நோக்கி வரவும் தாய் பசு "மா... மா..." என்று அலறியபடியே முதலை கன்று குட்டியை கவ்வும் முன் தான் போய் ஓடும் ஆற்றில் விழுந்தது.
அவ்வளவுதான், குட்டியை நோக்கி வந்த முதலை தனக்கு பெரும் இரை கிடைத்த திருப்தியில் அந்த தாய் பசுவை பிடிக்க சென்றது. குட்டி முழுவதும் நீர் உண்டு தாகம் தணித்து கரை ஏறியபோது அம்மா இல்லை.
"அம்மா, அம்மா" என்று குட்டி அழுதபடி நதியை கவனித்தது. தாய் பசுவை கவ்வியபடி முதலை இருக்க, தாய் பசு அதனுடன் போராட, குட்டி "யாராச்சும் வாங்க என் அம்மாவை காப்பாத்துங்க"ன்னு குரல் கொடுத்து அழுதது.
தாய் குரங்கு இரக்கப்பட்டு உடன் தாவி ஆற்றில் குதித்து முதலையின் முதுகில் அமர்ந்தது. "அடே முதலையே, ஒரு நல்ல செய்தி" என்றது.
"என்ன செய்தி? உடன் சொல்."
"உன் மனைவி கேட்டாள் என்று என்னிடம் ஈரல் கேட்டாய் அல்லவா?"
"ஆமாம். அதற்கென்ன இப்போ?"
"சுடச்சுட அதை உனக்காக வைத்திருக்கிறேன்."
"உடனே வந்தால் கிடைக்கும். அதை உன் மனைவிக்கு கொடுத்து மகிழச்செய். நாழி ஆக ஆக பருந்துகளும் கோட்டான்களும் கழுகுகளும் அதை எடுத்து சென்று விடும். அது யாருக்கும் கிடைக்காத ஒரு சுவையுள்ள இரைச்சி. இதை நழுவ விட்டால் இனி உனக்கு சுவையான ஈரலே கிடைக்காது" என்றது குரங்கு குட்டியை வயிற்றில் சுமந்தபடி.
"சரி, வருகிறேன்" என்ற முதலை பசுவை விட்டு குரங்கை முதுகில் ஏற்றியபடி ஆற்றுக் கரைக்கு வந்தது. அதற்குள் பசு அங்கும் இங்கும் நீரில் சென்று தப்பித்து ஒரு வழியாக ஏதோ ஒரு கரையில் ஏறியது. முதலையின் முதுகில் வந்த குரங்கு தன் குட்டியுடன் கரை வந்ததும் ஒரே தாவலில் ஏறி தப்பித்து அழுது கொண்டிருந்த கன்று குட்டியிடம் வந்தது.
"தம்பி அழாதேடா."
"இது நாடு அல்லடா. காடு. இங்கு சமயோசிதமும் புத்திசாலித்தனமுமே முக்கியம். அதுவும் தாய் சொல்லை கேட்கனும்டா. என் குட்டியை பார்த்தியா. அதை நான் சுமக்கலேடா. அதுதான் தன் உசிருக்காக என் வயிற்றை இறுக பிடித்து இருக்கிறது. இப்ப நான் முதலையின் முட்டாள் தனத்தையும் என் பழைய காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து உத்தியை கையாண்டேன். முதலைக்கு மூளை இல்லை. நான் சொன்னதை நம்பி வந்து விட்டது. எப்படியோ உன் தாய் தப்பித்தாள். இனியாவது தாய் சொல்லை தட்டாதே. ஒவ்வொரு நிமிடமும் காட்டில் சுதந்திர காற்றும் இருக்கும் உயிரை பறிக்கும் ஆபத்தும் நடக்கும். எனவே அம்மா சொல் கேட்டு நட. அவசரம் பொறுமையின்மை ஆபத்தை தான் கொடுக்கும் என்பதை புரிந்து கொள்" என்று அறிவுரை கூறும் போதே தாய் பசு பெரும் சிரமத்துடன் வந்து சேர்ந்தது.
"குரங்காரே, ரொம்ப நன்றி. உயிர் போய் உயிர் பிழைத்து வந்தேன்."
"அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் தாய் சொல்லை தட்ட மாட்டேன். அதே போல் இந்த குரங்கு குட்டியாக இருப்பேன்" என்று கூறி தாயை நக்கி தன் அன்பை வெளிப்படுத்தியது.
"குட்டித்தம்பி, உனக்கு தாகம்னா தண்ணீரும் இருக்கணும், அங்கே முதலையும் இருக்க கூடாது. அந்த மாதிரியான இடம் எதுன்னு அனுபவத்தில் உன் தாய்க்கு தெரியும். எனவே தாகம் எடுத்தால் ஆற்றில் நீர் ஓடுகிறதே என்று சட்டென இறங்கிவிடாதே" என்ற குரங்கு தாய் பசுவுக்கும் குட்டிக்கும் டாடா காட்டிவிட்டு மரம் ஏறி சென்றது.
முதலை இன்னமும் கரையில் காத்துக்கொண்டு நின்றது.