"குதிரை, என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். குதிரை சவாரி என்றாலே வயது வரம்பின்றி மக்கள் குதுகலமாகிவிடுவர். குதிரைகள் மனிதர்களிடம் நட்புடன் பழகக்கூடியவை. அந்நிய நாடுகளைப்போல், இந்தியாவிலும் பலர் குதிரை வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே, குதிரைகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு. மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும், இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாகும். குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.
குதிரைகளின் பருவத்திற்கு ஏற்ப ஃபோல் (Foal) அல்லது குட்டிக்குதிரை, யார்லிங் (Yearling), கோல்ட் (Colt), ஃபில்லி(Filly), மேர்(Mare), பொலிக்குதிரை (Stallion), கேல்டிங் (Gelding) என அழைக்கப்படும்.
இனம், மேலாண்மை மற்றும் சூழலைப் பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட உயிர் வாழ்ந்துள்ளன.
குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடும். ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.
கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. அதிகபட்ச வேகம், குதிரையின் முக்கிய குணங்களில் ஒன்று. 88கிமீ வேகத்தில் ஓடும்.
ஒரு சராசரிக் குதிரையின் உயரமானது அதன் கழுத்தும் உடலும் சேரும் பகுதியின் அதிக பட்ச உயரப்பகுதியைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும்.
குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால் குதிரைகளுக்கு காறையெலும்பு இல்லை என்பது மட்டும்தான்.
இரை விலங்குகளாக இருப்பதால் கால்களும் குளம்புகளும் ஒரு குதிரையின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். குதிரைகளில் குளம்புகள் தேய்ந்துவிடாமல் இருக்க இரும்பிலான லாடங்களைப் பொருத்துவர். குதிரையின் பயன்பாட்டினைப் பொறுத்து லாடங்கள் அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான ஒரு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும். ஒரு குதிரையானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.9 மணி நேரம் தூங்குகிறது.
கூட்டமாக இருக்கும் போது குதிரைகள் நன்கு தூங்கும். ஏனெனில் பெரும்பாலான குதிரைகள் உறங்குகையில் சில குதிரைகள் விழித்திருந்து இரைகொல்லிகள் வருகின்றனவா என்று பார்த்திருக்கும். இதனால் தனித்திருக்கும் குதிரைகள் இந்த அச்ச உள்ளுணர்வினால் நன்கு தூங்காது.
ஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். மனிதனுடன் ஒப்பிடுகையில் குதிரையின் இரைப்பை சிறிதாகவும் பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துக்கள் சீராகக் கிடைக்கின்றன.
நன்கு வளர்ந்த 450 கிலோ எடையுள்ள ஒரு குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும். முக்கியமான விஷயம் என்னவென்றால், குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை சாப்பிட்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாக நேரிடும்.
குதிரைகள் சிறப்பான பார்வைத்திறனைக் கொண்டது. இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும். இவற்றால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும். எனினும் குதிரைகளுக்கு நிறக்குருடு இருப்பதால் இரு நிறங்கள் மட்டுமே தெரியும்.
குதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும். குதிரையின் தொடுதிறனும் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை.
குதிரைகளுக்கு புல் வகை உணவைத் தவிர தானியங்களையும் தரலாம். எனினும் வல்லுனர்கள் குதிரையின் உணவில் பாதிக்கு மேல் புல் உணவையே தரவேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இவை குடிப்பதற்கு நாளொன்றுக்கு 38 முதல் 45 லிட்டர் தூய குடிநீர் தேவை.
நோய்த் தடுப்புக்காக தடுப்பூசிகள் போட வேண்டும். பற்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். தானியக் களஞ்சியம் போன்ற அடைபட்ட இடங்களில் இருக்கும் குதிரைகள் அவ்வப்போது அவற்றின் உடல், மன நலனுக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமாகும்.