எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முட்டைகளின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அதிசய பறவைகள் பற்றித் தெரியுமா குட்டீஸ்?
நாம் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பறவைகளை பார்க்கிறோம்! வண்ணங்களில், வடிவங்களில் பல்வேறு வேறுபாடுகள் பறவைகளிடம் இருப்பதைப் போலவே அவற்றின் குணாதிசயங்களிலும் செயல்பாடுகளிலும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வரிசையில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தான் இடும் முட்டையின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அதிசய பறவையைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கரிசல் நிலங்கள், நீர்நிலைகள், சமவெளிப் பகுதிகள், தரிசு நிலங்கள் என அனைத்து வகையான நிலப் பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒரு பறவை தான் ஆட்காட்டி பறவை (Lapwing bird). ஆள்காட்டி பறவைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
1. மஞ்சள் மூக்கு ஆட் காட்டி 2. செமூக்கு ஆட்காட்டி.
இந்த ஆட்காட்டி பறவைகள் முட்டை இட்டு அடைகாக்கும் போது ஏதேனும் ஆபத்துக்கள் அருகில் நெருங்கி வரும் சமயம், அவை சத்தமாக குரல் எழுப்பி எதிரியின் கவனத்தை திசைதிருப்புமாம். இதனாலேயே இப்பறவைக்கு ஆட்காட்டி பறவை என்று பெயர் வந்ததாம். இந்த ஆட்காட்டி பறவைகள் பெரும்பாலும் தரையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இயல்புடையவை.
தரைப் பகுதியில் புற்களுக்கு இடையேயும், தாழ்வான இடங்களிலும் இவை கூடுகட்டும். கூடுகள் தரைப்பகுதியில் இருப்பதால், அதை மற்ற விலங்குகள் அல்லது மனிதர்கள் எளிதில் அடையாளம் காண முடியாத வகையில், அங்கு இருக்கும் மண்ணின் நிறத்தை ஒட்டி முட்டைகள் நிறத்தை மாற்றிக் கொள்ளுமாம்.
உதாரணமாக செம்மண் நிலப் பகுதியில் முட்டையிடும் போது இவற்றின் முட்டை சிவப்பு கலந்த செம்மை நிறத்தில் காணப்படும். அதுவே கரிசல்மன் நிறைந்த வயல்வெளி பகுதிகளில் முட்டை இடும்போது இதன் முட்டை சாம்பல் கலந்த கருப்பு நிறத்திலும், கற்கள் நிறைந்த காடுகளில் சாம்பல் நிறத்திலும் இதன் முட்டைகள் காணப்படும். மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு முட்டையின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு இப்பறவைகளின் முட்டைகளுக்கு மரபணு ரீதியாகவே உள்ளதாம்.
ஆட்காட்டி பறவையானது மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அப்பருவத்தில் ஒரு ஆள்காட்டி பறவையானது மூன்று முதல் நான்கு முட்டைகளை இடும். முட்டைகளை அடைகாக்கும் பணியை ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் இணைந்தே செய்கின்றன. ஒரு பறவை அடைகாக்கும் போது மற்றொரு பறவை அருகில் உள்ள உயரமான இடங்களில் அமர்ந்து எதிரிகளின் வருகையை கண்காணித்துக் கொண்டே இருக்குமாம். ஏதேனும் ஆபத்து நெருங்கினால் சத்தமாக குரல் எழுப்பி கத்த தொடங்குமாம். இதன் மூலம் எதிரியின் கவனத்தை திசை திருப்பி அதன் முட்டைகளை தற்காத்துக் கொள்ளும்.
ஆட்காட்டி பறவைகள் பொதுவாக பூச்சிகள், நத்தைகள், சிறிய நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். தென்மேற்கு பருவமழை கால கட்டங்களில் சிலவகை மரங்களில் கம்பளிப் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அத்தகைய கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் ஆட்காட்டி பறவைகளின் பங்களிப்பு மிகவும் அதிகம். இரவு நேர பறவைகளைத் தவிர மற்ற பறவைகள் அனைத்தும் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதில்லை. ஆனால் ஆட்காட்டி பறவை மட்டும் நள்ளிரவு நிலவொளியில் சத்தமாக குரல் எழுப்புவதோடு வேட்டையாடவும் செய்கின்றன.
நாம் இப்பறவைக்கு ஆட்காட்டி பறவை என்ற பெயர் வைத்துள்ளதை போல ஆங்கிலேயர்கள் இந்த பறவைக்கு 'did you do it bird' என்று பெயர் வைத்துள்ளனர். ஏனெனில் இந்த பறவை கத்தும் போது அதன் ஒலி இந்த சொற்களின் உச்சரிப்பை ஒத்த வகையில் இருப்பதால் அதற்கு இப்பெயரை சூட்டி உள்ளனர்.
ஆழ்ந்த காடுகளில் கூட எதிரிகளின் வருகையை அறிந்து அதனை மற்றவர்களுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்வதில் ஆட்காட்டி பறவைகளின் பங்களிப்பு மிகவும் அதிகம். சில நேரங்களில் சத்தமில்லாமல் புதர்களுக்குள் மறைந்து வரும் புலிகளை கூட ஆட்காட்டி பறவைகள் எளிதில் அடையாளம் கண்டு குரல் எழுப்பி எச்சரிக்கை செய்து விடுமாம்!
இத்தகைய பல சிறப்பு வாய்ந்த உடற்கூறு அமைப்புகளை பெற்றுள்ள இப்பறவைகளை நேரில் பார்த்தால் அதன் ஓசையை நீங்களும் கவனித்து மகிழுங்கள் குட்டீஸ்!