
இளைஞர்களின் தன்னம்பிக்கை வகுப்பு அது. சில முன்னுதாரண இளைஞர்களை பேசுவதற்காக அழைத்து இருந்தனர். அதில் சிலர் என் தந்தையின் விருப்பப்படி மருத்துவரானேன், தாயின் விருப்பப்படி ஆசிரியை ஆனேன், நான் விரும்பியபடி விஞ்ஞானியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறி தங்கள் வெற்றிகளை பறைசாற்றிக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு இளைஞன் பேச ஆரம்பித்தார். "நான் படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். படித்து முடித்தபின் வேலை இன்றி இருந்தபோது சமூகவலைத்தளங்கள் என்னைக் கவர்ந்தது. அதில் விளையாட்டாக நான் எழுதினேன். விளையாட்டாக எழுதிய பதிவுகள் ஆயிரக்கணக்கானவரின் பார்வைக்கு சென்றது. அப்போது நான் யோசித்தேன். எனது எழுத்தில் வெற்றி இருக்கிறது என்று. வேலையை தேடுவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க எழுதும் பணியை தொடர்ந்தேன்.
அதற்காகவே நூலகம் சென்றேன். நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன் புத்தகங்களை தொட்டுப் பார்த்ததில்லை. ஆனால் எழுதவேண்டும் என்ற விருப்பம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து அதற்கான முன்னேற்பாடுகளை கடைபிடித்தேன்.
இப்போது நான் ஒரு பிரபலமான வெப்சைட்டில் தினம் 10 பத்து கட்டுரைகள் தந்து அது வெற்றி பெறும் அளவுக்கு முன்னேறி உள்ளேன். நான் நினைத்ததைவிட அதிக வருமானமும் பெயரும் பெற்றுள்ளேன். இதற்கு காரணம் நான் படித்தது ஒரு துறை என்றாலும் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த எழுத்துப்பணி. அதாவது நான் விரும்பிய பணியில் நான் செலுத்திய ஈடுபாடுதான். எந்த ஒரு பணியையும் நீங்கள் விரும்பி செய்தீர்கள் என்றால் அதுவே உங்கள் வெற்றியின் அஸ்திவாரம்" என்ற கூறி அமர்ந்தார். அங்கிருந்த இளைஞர்களிடையே அவருக்கு கிடைத்தது மிகப்பெரிய அப்ளாஸ்.
ஒரு பழம்பெரும் நடிகை தான் விமான பணிப்பெண் ஆகவேண்டும் என ஆசைப்பட்டு சந்தர்ப்பவசத்தால் நடிப்புத் துறையில் இறங்கி பின் அதை நேசித்து சிறந்த நடிகை என அனைவராலும் பாராட்டுப் பெற்றதை அறிவோம். அவர் நினைத்த பணி இல்லை எனினும் கிடைத்த நடிப்பு பணியை விரும்பி செய்ததாலேயே அவரை மக்கள் விரும்பினர்.
பல வெற்றியாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் சிறு வயது கனவு ஒன்றாகவும் வளர்ந்த பின் அவர்கள் நிர்ணயித்துக் கொண்ட இலக்கு வேறு ஒன்றாகவும் அல்லது அவர்களின் சூழலுக்கு தக்கவாறு அவர்களின் விருப்பம் மாறியதும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அதை முழு விருப்பத்துடன் செயலாற்றியதால் மட்டுமே சாதனையாளர்கள் ஆக முடிந்தது.
சிலருக்கு தான் அவர்கள் விரும்பிய துறை விரும்பிய இலக்கு எவ்வித தடைகளும் இன்றி எளிதில் கிடைத்து விடுகிறது. காரணம் அவர்கள் பெற்றோர்கள் அல்லது வசதி வாய்ப்புகள் ஆக இருக்கலாம். ஆனால் அது வெற்றி ஆகுமா என்றால் சற்று யோசிக்க வேண்டிய விஷயம். ஏனெனில் முயற்சியும் தடைகளின்றியும் பெரும் வெற்றி என்பது இனிப்பற்ற பலகாரம் போல் சுவாரசியமற்றது.
நீங்கள் எந்தப் பணியில் இருந்தாலும் அதை முழு விருப்பத்துடன் ஏற்று செய்யும்போது மனநிறைவுடன் வருமானம் தரும் வெற்றியாகவும் அமையும் என்பது உறுதி.