
பட்டம் விடும் காலம் வந்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். பேப்பர்களில் விதவிதமாக பட்டம் செய்து பறக்க விடும்பொழுது அவர்களே ஆகாயத்தில் பறப்பது போன்று உற்சாகமடைவார்கள், குதூகலம் கொள்வார்கள். எதிராளியின் காற்றாடியை நம் காற்றாடி நூலால் அறுத்துவிட்டால் உண்டாகும் வெற்றி கொண்டாட்ட கோஷங்கள் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.
சர்வதேச காற்றாடி திருவிழா அகமதாபாத்தில் எப்போதும் ஜனவரி 14 அன்று நடைபெறுகிறது. குளிர்காலத்தின் முடிவை கொண்டாடும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது. என்றாலும் டிசம்பர் மாதம் ஆரம்பித்துவிட்டால் அதிலிருந்து குழந்தைகள் மனதிற்கு பிடித்த வண்ணங்களில் ,அளவுகளில் காற்றாடிகள் செய்து பறக்க விட்டு ஒத்திகைப் பார்ப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
குடும்பம் குடும்பமாக சேர்ந்து தெருக்களிலும் அவரவர் வீட்டு மொட்டை மாடிகளிலுமாக காற்றாடிகள் விடுவார்கள் ஒவ்வொரு காற்றாடியும் ஒவ்வொரு வகையாக காணப்படும். அவற்றின் வண்ணச் சேர்க்கைகளும் வடிவமைப்பும் மனதை கொள்ளை கொள்ளக்கூடியதாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நாமும் சிறுவர்களோடு சிறுவராக சேர்ந்து காற்றாடி விடுவதில் ஆனந்தம் அடைவோம்.
மோட்டாரில் இயங்கும் காற்றாடியிலிருந்து ஃபைபர் கிளாஸ் காற்றாடிவரை அறிமுகம் ஆகி இருக்கின்றன என்றாலும் காகிதத்தில் செய்யப்பட்ட காற்றாடிகளின் மவுசு இன்னமும் குறையவே இல்லை. இதில் செய்வது விலையும் குறைவு. அதற்கான மூலப்பொருட்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் தென்னங்குச்சிகளும், நியூஸ் பேப்பர்களுமே போதுமானதாக இருக்கும். சேமித்து வைத்திருக்கும் நூலும் போதுமே.
இவ்விழா ஒரு விளையாட்டு போட்டியாவும் இருக்கும். ஒருவருடைய காற்றாடி மற்றொருவருடைய காற்றாடியை அறுத்தால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்படும். நம் தமிழகத்திலும் கிராமப்புறங்களில் பொங்கல் சமயங்களில் எல்லாவிதமான போட்டிகள் நடக்கும் பொழுது, இந்தப் போட்டிக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசு வழங்குகிறார்கள். இதனால் சிறுவர்கள் உற்சாகமடைகிறார்கள்.
குஜராத் மாநில சுற்றுலா கழகம் சர்வதேச காற்றாடி திருவிழாவை ஆண்டுதோறும் இந்த நாளில் ஏற்பாடு செய்கிறது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானம் அல்லது போலீஸ் மைதானத்தில் இது நடைபெறுகிறது. பிற நாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளூர் சாம்பியன்களும் போட்டி போட்டுக்கொண்டு காற்றாடி விடும் அழகே தனி அழகுதான். அன்று இரவு இருளில் ஒளிரும் காற்றாடிகளை வானில் பார்ப்பது ஒரு தனி அழகு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் காற்றாடி வியாபாரிகள் இங்கு தாங்கள் உருவாக்கிய காற்றாடிகளோடு படையெடுப்பது வழக்கம்.
அன்று 'காற்றாடி அங்காடி' என்றே ஒரு கடைத்தெரு திறக்கப்பட்டிருக்கும். உள்ளூர் அருங்காட்சியகத்தில் காற்றாடியின் வரலாறு குறித்து அன்று சிறப்பாக குறிப்பிடுவார்கள் 1989 இல் இருந்தே காற்றாடி திருவிழா கொண்டாடப்படுகிறது சூரத், ஜாமு, உதியூ, கதிய வாடி பானு போன்ற குஜராத்தி உணவு வகைகள் அன்று கட்டாயம் சமைக்கப்படும். ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளிலும் ஆங்காங்கே காற்றாடித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் சிறியவர் முதல் பெரியவர்வரை கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பலவிதமான வர்ணங்களில் மனதிற்கு புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக காணப்படும் அத்தனையும் காற்றாடிகளே ஆகும். வானில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருள்தான் பட்டம். அப்படி ஒரு வாலுடன் பறக்கும் சதுர வடிவ பட்டத்தை பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. அதைப் பறக்க விடுவதில் தான் மனிதர்களுக்குள் எத்தனை எத்தனை ஆனந்தம்.
செல்லங்களே! சீசனுக்கு ஏற்ப பட்டம் விடுவீர்; பரவசம் அடைவீர்!