ஜெல்லிமீன் என்பது ஒரு மீனா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ஜெல்லிமீன்...
ஜெல்லிமீன்...
Published on

ஜெல்லிமீன் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் இவை மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் அல்ல. ஜெல்லிமீன் முதுகெலும்பு இல்லாத ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இவை ஆழம் குறைவான கடற்கரைப் பகுதிகளில் கடலின் மேற்பகுதியில் மிதந்து கொண்டிருக்கின்றன. ஜெல்லி மீன்கள் உலகின் அனைத்து கடற்பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஜெல்லிமீன்கள் குழியுடலிகள் (Coelenterata) வகையைச் சேர்ந்தவை. ஜெல்லிமீனுக்கு தலை, மூளை, கண்கள், காதுகள், எலும்புகள்? சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல் என முக்கியமான உறுப்புகள் இல்லை.

இரண்டு படிவங்களால் ஆன ஜெல்லிமீனின் உடல் சுமார் 95 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. வெளிப்புறப்படிவம் மற்றும் உட்புறப்படிவம் என இந்த இரண்டு படிவங்களின் இடையில் பசை போன்ற ஒரு பொருள் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இந்த விநோத உயிரினம் ஜெல்லிமீன் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

பார்ப்பதற்கு ஒரு பெரிய காளானைப் போன்று காணப்படும் ஜெல்லிமீன், சுமார் 650 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன என்பதை ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுமார் 2000 வகையான ஜெல்லிமீன்கள் காணப் படுகின்றன. இவற்றில் சுமார் 70 வகைகளே விஷமுடையவைகளாக உள்ளன. கொடுக்கு போன்ற அமைப்பினால் சிறிய உயிர்களைக் கொட்டி அவற்றை கொன்றுவிடுகின்றன. ஆஸ்திரேலிய நாடுகளில் காணப்படும் பாக்ஸ் ஜெல்லிமீன்கள் ராஜநாகத்தின் விஷத்தைவிட அதிக விஷமுடையவைகளாக உள்ளன. இவை தீண்டினால் நிமிட நேரத்திற்குள் தீண்டப்பட்டவர் மரணத்தைத் தழுவ நேரிடும். ஜெல்லிமீன்கள் தீண்டிவிட்டால் உடனே வினிகரைக் கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

ஜெல்லிமீனுக்கு வாய் போன்ற ஒரு உறுப்பும் நீளமான கைகள் போன்ற உறுப்பும் அமைந்துள்ளன. கடலில் வாழும் நுண்ணுயிரிகனை இவை உண்ணுகின்றன. ஜெல்லிமீன்கள் தங்களுடைய உணவைத் தேடி மேலும் கீழும் நகர்ந்து நீந்தியபடியே இருக்கும். ஜெல்லிமீன்கள் மீன்களின் முட்டைகளையும் உணவாகக் கொள்ளுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒருவருடைய மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது தெரியுமா?
ஜெல்லிமீன்...

ஜெல்லிமீன் குட்டிகளை ஈனுவதில்லை. இவை கிட்டத்தட்ட நட்சத்திரமீன்களைப் போலவே இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் உடலில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இரண்டும் அமைந்துள்ளன. நன்கு வளர்ந்த ஒரு ஜெல்லிமீனானது முட்டைகளையும் விந்தணுக்களையும் இடும். இவை கடலின் மேற்பரப்பில் மிதந்தபடி இருக்கும். சில நாட்களில் இவை லார்வாவாக மாற்றமடையும். பின்னர் இந்த லார்வாக்கள் போலிப் எனும் பருவத்தை அடைகின்றன. மூன்றாவதாக இவை இபிரா எனும் பருவத்தை அடைகின்றன. கடைசியாக முதிர்ந்து மெடூசா எனும் கடைசி பருவத்தை அடைகின்றன. சில காலத்திற்குப் பின்னர் இவை சிறிய ஜெல்லிமீன்களாக மாற்றமடைந்து வளர்ந்து வாழ ஆரம்பிக்கின்றன.

ஜெல்லிமீன்களின் உடலில் காணப்படும் மிகச்சிறிய துளைகள் வாயிலாக தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி அதே துளைகள் வாயிலாக கரியமிலவாயுவை வெளியேற்றுகின்றன. குடை போன்ற அமைப்பை உடைய ஜெல்லிமீன்களின் நடுவில் நீளமான தண்டு போன்ற அமைப்பு காணப்படுகிறது. தண்டின் ஒரு முனைப்பகுதியில் வாய்ப்பகுதியும் மற்றொரு முனைப் பகுதியில் கழிவை நீக்கும் அமைப்பும் காணப்படுகிறது.

ஜெல்லிமீன்கள் ஒரு குண்டூசி அளவு முதல் மிகப்பெரிய அளவு என பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. ஜெல்லிமீன்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. இவை சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரையே உயிர் வாழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com