கடல் தூய்மை காப்பது நம் கடமை!

Sea
Sea
Published on

நமது பூமி அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக், ஆர்க்டிக் ஆகிய ஐந்து 'பெருங்கடல்கள்' அடங்கும். இவற்றுள் பரப்பளவில் பசிபிக் முதல் இடத்திலும் அட்லாண்டிக் இரண்டாவது இடத்திலும் இந்தியப் பெருங்கடல்  மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் மேற்குக் கரையோரமாக அரபிக் கடலும் தென்கோடியில் இந்தியப் பெருங்கடலும் கிழக்கில் வங்கக்கடலும் அமைந்துள்ளன. அவை நம் நாட்டு பாதுகாப்புக்கு அரணாகவும் அமைந்துள்ளன.

அனைத்து உயிரினங்களின் வாழ்வாதரத்திற்கும் முக்கியமான இக்கடல் பரப்பு பூமியின் மேற்பரப்பில் 70%க்கும் அதிகமாக பரவியுள்ளது. இப்பெருங்கடல்கள் நமக்குத் தேவையான 50% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருகின்றன. மேலும், வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, குடிநீர், மீன் பிடிப்பு போன்றவற்றின் மூலம் நம் அன்றாட வாழ்வில் பேருதவியாகவும் இருக்கின்றன.

உலகின் மேற்பரப்பில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் கடல் பாசிதான். சுமார் 25 மில்லியின் உயிரினங்கள் கடலுக்குள்ளே வாழ்வதாக கூறப்படுகிறது. அவற்றுக்கெல்லாம் பெயர் கொடுத்து முடிக்கவே இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும். நாம் வாழும் உலகின் தரைப் பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒரு விழுக்காடு மட்டுமே. மீதம் 99 விழுக்காடு உயிரினங்கள் கடலில்தான் வாழுகின்றன.  

கடலில் 4 கிலோ மீட்டர் ஆழம் வரையிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கே, ஒளிரும் மீன்கள் கூட இருப்பதாக கூறப்படுகின்றது. நமக்கு கடலின் மூலம் பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள், சுண்ணாம்பு, மணல், சரளை, பல்வேறு கனிமங்கள், கச்சா எண்ணெய், எரிவாயு, உப்பு போன்றவை கிடைக்கின்றன.

கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட்ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன. இவைகளிலிருந்து கிடைக்கும் முத்தை அணிந்தால் உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடலின் மேல்மட்டம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதனால்தான் ‘கடல் மட்டம்’ என்ற அளவை நமது இரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கடல்களில் நீர் மட்டமும் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருப்பதில்லை. காரணம் காற்று காரணமாக அலைகளும் புயல்கள் காரணமாக ராட்சஸ அலைகளும் தோன்றுகின்றன.

இவையல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு காரணமாகமும் கடல் நீர் பொங்குகிறது. பின்னர் உள்வாங்குகிறது. இது மாறி, மாறி தொடர்ந்து நடைபெறுகிறது. பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழ்கின்றது. இதை ஓத ஏற்றம் என்றும் ஓத இறக்கம் என்றும் அழைப்பதுண்டு. ஓத ஏற்றத்தின் போது கடல் நீர் கரையைத் தாண்டி வெளியே வரும். ஓத இறக்கத்தின் போது கடல் நீர் உள்ளே சென்றுவிடும்.

கடலில் ஏற்படும் நிலநடுக்கம், காற்றழுத்த தாழ்வு நிலை, புயல், எங்கோ தொலைதூரத்தில் வீசும் பலத்த காற்றின் ஆற்றலால் உண்டாகும் அலைகள்  ஆகியவற்றால் கடல் சீற்றம் ஏற்படுகின்றது. இப்போதெல்லாம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை அவ்வப்போது விடுக்கப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் எச்சரிக்கையையும் மீறி கடல் அருகில் சென்று திடீரென வரும் பெரும் அலைகளில் சிக்கி மக்கள் உயிரிழக்கின்றனர். 

2012ஆம் ஆண்டில்தான் 'கள்ளக்கடல்' என்னும் சொல் ’யுணஸ்கோ’வால் அறிமுகப்படுத்தப்பட்டது. மலையாள மொழியில் ’கள்ளன்’ என்றால் திருடன். திருடன் போல எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீருக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்கடல் சீற்றம் குறித்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையமும் வானிலை ஆய்வு மையமும் பொது மக்களுக்கு அளிக்கும் எச்சரிக்கைகளை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
9 கிலோமீட்டர் வரை கேட்கும் ஓநாய்களின் ஊளையிடும் சத்தம்!
Sea

அதிவேகத்தோடும் பெரும் வேகத்தோடும் கள்ளக்கடல் சீற்ற அலைகள் கரையை அடைகின்றன. அவ்வாறான அலைகள்  பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. இத்தகைய கள்ளக்கடல் அலைகளில் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட சிக்கிக்கொண்டால் தப்பிப்பது கடினம். அந்த அலைகளில் சிக்கியவர்களின் நுரையீரலில் வண்டல் மண் நிறைந்து விடுகிறது. அதனால். மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்லாது பெரும் வேகத்தோடும், ஆற்றலோடும் இந்த அலைகள் வீசுவதால், இதில் சிக்குபவர்கள் கரைகளில் இருக்கும் பாறைகளில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே கள்ளக்கடல் எச்சரிக்கைகளை பொது மக்கள் அலட்சியம் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நாம் நமது உணவுக்காகவும், வியாபாரத்திற்காகவும் கடலில் இருந்து பிடிக்கின்ற மீன்களைப் போல பல மடங்கிலான கழிவுகளைக் கடலில் கொட்டுகிறோம். மழை நீரையும் சாக்கடை நீரையும் கடலில்தான் கொண்டு கலக்கிறோம். சென்னை நகரில் ஓடிக் கொண்டு இருக்கும் கூவம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி நிரப்புகிறோம். இதே நிலைதான் நாட்டில் பாயும் கங்கை போன்ற பிற ஆறுகளின் நிலையும். அவைகளிலும் அன்றாடம் மக்களால் கழிவு நீர் கலக்கப்படுகின்றது. இதனால், கடல்களில் குப்பைகள் மேலும், மேலும் சேருகின்றன. எனவே, மனிதர்கள் நிலத்தில் உருவாகின்ற  குப்பைகளை அழிப்பதற்கான மாற்று வழிகளைத் தேட வேண்டும். அவற்றை கடலில் கொண்டு கலப்பதை தவிர்க்க வேண்டும். கடலில் மழை நீர் சென்று வீணாவதை தடுக்க வேண்டும்.

மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னும் நம்மிடையே சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்:
The Great Emu War: A Strange Battle in History!
Sea

காலநிலை மாற்றம், மாசுபாடு, கடல்நீர் அமிலமயமாகுதல் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவை கடலின் தூய்மைத்தன்மையை உலகளாவிய அளவில் பெரிதும் பாதிக்கின்றன. பூமிப்பந்தின் உயிர்நாடியான பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும். கடலினை தூய்மையாக வைத்திருப்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் முன் உள்ள பெரிய பொறுப்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இது ஓர் உலகளாவிய சவால் என்பதால், ஐக்கிய நாடுகள் சபை இது விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com