Wolves
Wolves

9 கிலோமீட்டர் வரை கேட்கும் ஓநாய்களின் ஊளையிடும் சத்தம்!

Published on

ஹாய் குட்டீஸ்!

பார்த்தவுடன் நம்மை பயமுறுத்தக்கூடிய விலங்குகளில் ஒன்று தான் ஓநாய். இதன் ஊளையிடும் சத்தமே நமக்கு ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும். பார்ப்பதற்கு நாய்களைப் போன்றே இருக்கும் ஓநாய்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஓநாய்கள் உண்மையிலேயே நாய் குடும்பத்தை சேர்ந்தவை தான். ஆனால் இது வீட்டில் வளர்க்கப்படும் நாயை விட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

ஓநாய்கள் மிகவும் பாசமான விலங்கு. ஓநாய்கள் பெரும்பாலும் கூட்டமாகவே வாழும், கூட்டமாகவே வேட்டையாடும்.

ஓநாய்கள் பொதுவாக குகைகளிலே அதிகமாக வாழும்.

உருவத்தில் சிறியதாக இருந்தாலும் பார்க்கும்போதே பயத்தை உண்டு பண்ண கூடிய வகையில் இருப்பதற்கு அதன் கண்களும் ஒரு மிகப்பெரிய காரணம். இரவு நேரத்தில் ஓநாய்களால் நன்கு பார்க்க முடியும். கிட்டத்தட்ட 250 டிகிரி வரை அதன் கண்களை சுழற்றி ஓநாய்களால் பார்க்க முடியும்.

நன்கு வளர்ந்த  ஓநாய்கள் கிட்டத்தட்ட 35 முதல் 55 கிலோ வரை எடை இருக்கும். பெண் ஓநாய் ஆனது ஆண் ஓநாய் விட பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும்.

ஓநாய்கள் அதிகமாக இறைச்சி உணவுகளையே உட்கொள்ளும். உணவுக்காக ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யக் கூடியவை.

ஓநாய்கள் எப்போதும் தனித்து இருக்கும் விலங்குகளை பெரும்பாலும் வேட்டையாடாது. கூட்டமாக இருக்கும் விலங்குகளையே அதிகமாக வேட்டையாடும். அப்படி வேட்டையாடும் போது அந்த கூட்டத்திற்கு அருகில் சென்று வயதான மற்றும் வயதில் சிறிய, பலவீனமான விலங்குகளை நன்கு கவனித்து, கூட்டத்தை கலைத்து, ஓடவிட்டு, சோர்வடையச் செய்து, இரையை வேட்டையாடும். அப்படி வேட்டையாடும் போது கிட்டத்தட்ட 7ல் 1அல்லது 2 முறை தான் வேட்டையாடுதல் வெற்றிகரமாக அமையும். இரையை தேடும் போது ஏதேனும் ஒரு விலங்கு தனியாக நின்றால் அந்த விலங்கை பார்த்து சந்தேகம் அடைந்து வேட்டையாடாமல் விட்டு விடும்.

ஓநாய்கள் பொதுவாக முயல், காட்டுப்பன்றி, கோழி, ஆடு, மான், அணில், எலி போன்றவற்றை வேட்டையாடும். இவை தவிர ஓநாய்கள் சில நேரங்களில் பழங்களை கூட உண்ணும் இயல்புடையவை. பேரிக்காய், முலாம்பழம், அத்தி, ஆப்பிள் போன்ற பல வகைகளை உண்ணும். சில நேரங்களில் புற்களை கூட சாப்பிடும் தன்மை உடையவை. ஏனெனில் புற்களில் சிலவகை ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் மிகவும் அரிதாக அதையும் சாப்பிடும் தன்மை கொண்டவை.

ஓநாய்கள் ஊளையிடும் சத்தத்தை கேட்கும்போது மிகவும் பயமுறுத்தும் வகையில் இருக்கும். பிரிந்து போன தன்னுடைய இணையை ஒன்று சேர்ப்பதற்காகவும், பிரிந்து போன ஓநாய் கூட்டத்திற்கு இங்கும் ஒரு ஓநாய் கூட்டம் இருப்பதை  தெரிவிப்பதற்காகவும் ஓநாய்கள் ஊளையிடுகின்றன. இந்த ஊளையிடுதல் என்பது ஓநாய்களின் ஒரு வகை தகவல் பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது. அடர்ந்த காடுகளில் ஓநாய்கள் ஊளையிடும் போது அதன் சத்தம் கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் வரை கேட்கக்கூடும். அதுவே வெட்ட வெளியாக இருந்தால் 16 கிலோமீட்டர் தூரம் வரை கூட அதன் ஒலிகளை கேட்கும் அளவுக்கு அதிக சத்தம் உடையது.

இதையும் படியுங்கள்:
The Great Emu War: A Strange Battle in History!
Wolves

ஓநாய்கள் சாப்பிடும் இரையானது விரைவில் செரிமானம் ஆகும் தன்மை உடையது. அதனால் ஒரே நாளில் கூட நான்கு, ஐந்து முறை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். பனிப் பிரதேசங்களில் வாழும் சில வகை ஓநாய்கள் அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப உணவை கொழுப்புகளாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்கின்றன.

பனிப்பிரதேசங்களில் பொதுவாக 6 மாதங்களுக்கு கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால், குளிர் இல்லாத ஆறு மாதங்களில் தங்களுடைய உணவுகளை உண்டு வயிற்றுப் பகுதியில் அவற்றை கொழுப்புகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றன. பின்னர் வரும் 6 மாதங்களில் இரைதேடாமல் ஓய்வெடுத்துக் கொண்டு சேமித்த கொழுப்பை உணவாக  உட்கொண்டு  உயிர் வாழும் தன்மை உடையவை ஓநாய்கள்.

ஓநாய்கள் ஒருமுறை சாப்பிடும் போது 3ல் இருந்து 5 கிலோ வரையிலான உணவை உட்கொள்கின்றன. நன்கு வளர்ந்த ஓநாய் ஒரு முறை சாப்பிடும் போது 9 கிலோ இறைச்சியை கூட உட்கொள்ளும் தன்மை உடையது.

ஓநாய்கள் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் தன்மை உடையவை. தனது இரையை வாசனை மற்றும் கேட்கும் திறனை பயன்படுத்தி அறிந்து கொள்கிறது.

ஓநாயின் காதுகள் கூரிய கேட்கும் தன்மையை உடையவை. ஓநாய்களின் கேட்கும் திறன் மனிதனை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை; அமுதாவின் பிறந்தநாள்!
Wolves

ஒரு ஆண் ஓநாய் பெண் ஓநாயுடன் இணை சேர்ந்து விட்டால் கடைசி வரை அந்தப் பெண் ஓநாயுடனே வாழும். ஓநாய்களின் கர்ப்ப காலம் 63 லிருந்து 65 நாட்கள் வரை இருக்கும். ஒரு பெண் ஓநாயானது ஒரே பிரசவத்தில் 4 முதல் 7 குட்டிகள் வரை போடும். ஆனால் இவை அனைத்தும் சூழலுக்கு தாக்குப்பிடித்து வளருமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

ஓநாய்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 8 ல் இருந்து 10 ஆண்டுகள் ஆகும்.

மாறிவரும் சுற்றுப்புற சூழல்களால் ஓநாய்களும் தன்னுடைய இனத்தை தக்க வைத்துக் கொள்வதில் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன!

logo
Kalki Online
kalkionline.com