
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது . இது உலகப் புலிகளின் எண்ணிக்கையில் 75% ஆகும். அழிந்து வரும் புலிகளை பாதுகாக்கக் கோரி, ஜூலை 29-ல் உலகப் புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, சீனா, ரஷ்யா உட்பட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள் தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால், காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துகிறது; காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கின்றன.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது. இது உலகப் புலிகளின் எண்ணிக்கையில் 75% ஆகும்.
புலிகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான பண்புகளை கொண்டு உள்ளன.
பொதுவாக வங்காளப் புலிகள், சைபீரியன் புலிகள், சுமத்ரான், புலிகள் மற்றும் மலாயன் புலிகள் போன்றவை, நன்கு அறியப்பட்டவை. வெள்ளைப் புலிகள் / கருப்பு புலிகள் போன்ற நிறம் மாற்றங்களும் புலிகளில் காணப்படுகின்றன.
வங்காளப் புலி (Bengal Tiger):
இது இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் ஒரு பிரபலமான புலிவகை. இவை வலுவான உடல் மற்றும் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் கருப்பு வரிகளுடன் காணப்படும்.
சுபத்ரான் புலி (Sumatran Tiger)
இந்தப் புலி சுமத்ரா தீவில் காணப்படுகிறது. இவை சிறியதாக இருக்கும். மேலும் மற்ற புலிகளை விட அடர்ந்த கருப்பு நிற கோடுகளைக் கொண்டிருக்கும்.
மலாயன் புலி (Malayan Tiger)
மலேசியாவில் காணப்படும் இந்த புலி தெற்கு சீன புலியுடன் தொடர்புடையது.
வெள்ளைப் புலி ( White Tiger)
ஒரே ஒரு மரபணு மாற்றத்தின் காரணமாக மஞ்சள் நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் காணப்படும். இவை இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றன.
கருப்பு புலி (Black Tiger)
இவை கருப்பு நிற கோடுகளை கொண்ட புலிகள் ஆகும் சில புலிகள் மரபணு மாற்றத்தால் இப்படி காணப்படும்.
புலிகள் பலவிதமான இடங்களில் வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள், காடுகள், மலைப்பாங்கான பகுதிகள் போன்ற இடங்களில் வசிக்கின்றன. காட்டில் வாழும் புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடும். ஒரு நாளில் சராசரியாக 40 கிலோ வரை மாமிசத்தை உணவாக எடுத்துக் கொள்ளும்.
புலிகள் காட்டில் தனித்து வாழ்கின்ற ஒரு விலங்கு. அவை தனக்கென்று சில கிலோமீட்டர் தூரத்தை தன்னுடைய வாழ்விடமாக வைத்திருக்கும். புலிகள் தங்களுடைய வாழ்விட எல்லைகளை சிறுநீர் கழித்தும், மரங்களில் நகரங்களால் கீறியும் நிர்ணயித்துக் கொள்ளும். ஒரு ஆண் புலியின் எல்லைக்குள் மற்றொரு ஆண் புலி வராது.
புலிகள் பண்டைய புராணங்களிலும், கலாச்சாரங்களில், நாட்டுப்புறக் கதைகளிலும் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.
மேலும் இவை கொடிகள், விளையாட்டு அணிகளுக்கான சின்னங்கள், நவீன திரைப்படங்கள், இலக்கியங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. புலியானது இந்தியா, வங்கதேசம், மலேசியா, தென்கொரியாவின் தேசிய விலங்காகவும் உள்ளது.