
வீட்டுத் தோட்டங்கள், மரங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் அடிக்கடி நம் கண்களுக்குப் புலப்படும் அணில்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
மிகவும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் இருக்கும் இவை கொறித்துண்ணி வகையைச் சார்ந்தவை.
பெரும்பாலும் அணில்கள் மரங்களில் வசிக்கின்றன. இவை சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அணில்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா என ஐந்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
உலகம் முழுக்க கிட்டத்தட்ட 285 வகையான அணில்கள் உள்ளன. அவற்றில் 44 வகை பறக்கும் அணில்களாம்.
இந்தியாவில் காணப்படும் அணில்களுக்கு அதன் முதுகில் மூன்று கோடுகள் அமைந்திருக்கும். தற்போது, ஐந்து கோடுகள் கொண்ட அணில்களும் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகவே, அணில்கள் உணவிற்காக விதைகள் மற்றும் கொட்டைகளைச் சேகரித்து அவற்றை ஒரு இடத்தில் பத்திரமாக புதைத்துவைத்துக் கொள்ளுமாம். அவ்வாறு புதைத்த கொட்டைகள் மற்றும் விதைகளை மறந்து விடுவது அணில்களின் தனித்துவமான பண்பாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அணில்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மரங்களை நடுகின்றனவாம்.
அணில்கள் நான்கு முன்பற்களைக் கொண்டுள்ளன. இந்த முன்பற்கள் நீளமாகவும் மிக கூர்மையாகவும் இருக்குமாம். அதோடு, இவை தொடர்ந்து வளரக் கூடியதாம். ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஆறு அங்குலம் வரை வளருமாம். இதனாலேயே அணில்கள் கையில் கிடைப்பதைத் தொடர்ந்து கொறித்துக் கொண்டே இருக்குமாம். அவ்வாறு, அணில்கள் கொறிப்பதை நிறுத்திவிட்டால், முன்பற்கள் அதன் வாயை அசைக்க முடியாத அளவிற்குப் பெரிதாக வளர்ந்துவிடுமாம்.
அணில்களால், பொதுவாக மணிக்கு 16 கிலோமீட்டர்கள் வரை ஓட முடியும். அவற்றின் உடல் நீளத்தைப் போல சுமார் பத்து மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.
அணில்கள் 180° வரை அதன் உடலை வளைத்து பார்க்கும் திறனுடையவை. மேலும், இவை அதன் உடல் எடைக்கு நிகராக உணவுகளை உட்கொள்ளும். சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தாலும், அணில்களால் உயிர் பிழைத்துக் கொள்ள முடியும்.
அணில்கள் பெரும்பாலும் தங்கள் வாலின் மூலமாக தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுமாம். இவற்றின் வால்கள் குளிர்காலங்களில் உடலை சூடாக வைத்துக்கொள்ளவும், மரத்திற்கு மரம் தாவும்போது சமநிலையுடன் இருக்கவும் உதவுகின்றன.
உலகில் உள்ள அணில்களில் மிகச்சிறிய அணில் ஆப்பிரிக்க பிக்மி அணில் (African pygmy squirrels) ஆகும்.
உலகின் மிகப்பெரிய அணில் இந்திய ராட்சத அணிலாகும் (Indian giant squirrel).
உலகில் மிகவும் அரிதாக காணப்படும் அணில் அல்பினோ சாம்பல் அணிலாகும். ஒரு அல்பினோ பெண் சாம்பல் அணில், அதன் சந்ததியைப் பெற்றெடுக்கும் சாத்தியக்கூறுகள் லட்சத்தில் ஒன்றாக இருக்கும் என்று பாலூட்டி நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
அணில்கள் ஒரு கர்ப்பகாலத்தில், இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை ஈனக்கூடியவை. புதிதாக பிறந்த ஒரு அணில்குட்டியின் நீளம் சுமார் 1 இன்ச் வரை இருக்கும். ஒரு ஆண் அணில், அதன் இணையான பெண் அணிலை அதன் உடம்பில் இருந்து வரும் வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடும்.
பொதுவாக, அணில் கூட்டத்தில் உள்ள ஒரு தாய் அணில் இறந்துவிட்டால், அதன் குட்டிகளை மற்றொரு தாய் அணில் தத்தெடுத்து வளர்க்கும் தன்மை கொண்டவை.