
மர கங்காரு ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா பகுதிகளில் உள்ள காடுகளின் மிக உயர்ந்த மரங்களின் உச்சிகளில் வசிக்கின்றன. இவை மார்சுபியல் குழுக்களைச் சார்ந்தவை.
மர கங்காருகளால் சுமார் 9 மீட்டர் வரை மரத்திற்கு மரம் தாவ முடியும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் உயிரினம். தரையில் வாழுகின்ற கங்காருகளைக் காட்டிலும், இவை சிறியதாகவும், சற்று பருமனாகவும் காணப்படுகின்றன. இவற்றின் உடல் பகுதியானது பஞ்சு போன்று காணப்படும். கூர்மையான நகங்களைக் கொண்டுள்ளன. நீண்ட முன்கைகள், குட்டையான வால் மற்றும் குறுகிய பின்னங்கால்களையும் இவைக் கொண்டுள்ளன.
மரங்களில் இருந்து கீழே இறங்கும்போது தங்கள் பின்னகால்களைப் பயன்படுத்தி பின்னோக்கி இறங்குகின்றன. பின்னங்கால்களை தனித்தனியே இயக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.
மரங்களில் ஏறும்போதும், இறக்கும்போதும், தாவும்போதும், இவற்றின் வால்சமநிலையைப் பராமரிக்கப் பயன்படுகிறது.
மர கங்காருகள் தாவர உண்ணியாகும். இவை இலைகள், பழங்கள், தானியங்கள், மரப் பட்டைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்கின்றன. சில நேரங்களில் இவை அதிக உணவுகளைத் தேடுவதற்காக தரையிலும் (நிலத்திலும்) காணப்படுகின்றன.
மர கங்காருகள் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள உயரமான மரங்களில் ஏறி அதன் உச்சியில் காணப்படும் கிளைகளில் அமர்ந்தபடியே உறங்குகின்றன.
பெரும்பாலும் மர கங்காருகள் தனியாக வாழ்வதையை விரும்புகின்றன. ஆண் மற்றும் பெண் கங்காருகள் தனியாக சுதந்திரமாக வாழ்கின்றன. இவை இனப்பெருக்க காலங்களில் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கும். மேலும், ஆண் கங்காருகள் பலவிதமான பெண் கங்காருகளுடன் இனப்பெருக்கம் செய்கின்றன.
பெண் மர கங்காருவின் கர்ப்பகாலம் 44 நாட்கள் ஆகும். இவற்றின் குட்டிகளை வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பில் சுமார் 9 மாதங்கள் வரை சுமக்கின்றன. குட்டிகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவிற்கு வளரும் வரை பெண் மர கங்காருகள் தங்களுடன் வைத்துக் கொள்கின்றன.
இவை சுற்றுப்புறச் சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்களுக்கு மரம் தாவும்போது மகரந்தச்சேர்க்கைக்கு பங்காற்றுகின்றன. பழங்கள் தானியங்கள் வழியாக விதைப் பரவலுக்கும் உதவி புரிகின்றன.
மர கங்காருகள் அழியும் நிலையில் உள்ளன. குறிப்பாக, வாழ்விடங்களின் அழிப்பு, காடுகள் அழிப்பு, மனித ஆக்கிரமிப்புகள் மற்றும் வேட்டையாடுதல் போன்ற பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன.