
ஹாய் குட்டீஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையை எல்லோரும் பரவலாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள். தெரியாதவர் களுக்கு அந்த பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள சில செய்திகள் இதோ:
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஸ்டார், மாட்டுத்தொழுவம், குழந்தைகளுக்கு பரிசுகளை வாரி வழங்கும் கிறிஸ்மஸ் தாத்தா, வகை வகையான கேக்குகள், நள்ளிரவில் தேவாலயங்களில் கேட்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் பாடல்கள் மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ, போன்றவைகள்தான்.
மக்கள் அறியாமையில் உழன்று பாவங்களை செய்து கொண்டிருந்தபோது அவர்களை மீட்க இயேசு பிரான் அவதரித்தார். இயேசு பெத்தலகேம் நகரில் சூசையப்பருக்கும் கன்னி மரியாளுக்கும் திருமகனாகப் பிறந்து நல்வழிக்காட்டினார். இந்த நன்னாளையே உலக மக்கள் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இறை மகனாகிய இயேசு கிறிஸ்து மிகவும் எளிய இடமாகிய அனைவரும் அருவெறுக்கும் இடமாகிய மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
அப்பொழுது வானில் வால் நட்சத்திரம் தோன்றியது. யூதர்களின் அரசன் தோன்றியுள்ளார் என்று சோதிடர்கள் கூறியதால் கீழ்த்தசை மன்னர்களும், சான்றோர்களும் வந்து குழந்தையை வாழ்த்திச் சென்றனர்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கிறிஸ்துமஸ் திருவிழா ஜனவரி 6, மார்ச் 25, டிசம்பர் 25 என்னும் நாட்களில் கொண்டாடப்பட்டது. பின்னர் உலக கிறிஸ்துவ சபையினர் அனைவரும் ஒன்று கூடி டிசம்பர் 25ஆம் நாளை கிறிஸ்துமஸ் நாளாக அறிவித்தனர். ஆதலால் கி.பி 354 முதல் டிசம்பர் 25ஆம் தேதியே கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் நாளில் வீடுகளில் குடில்கள் போன்ற அமைப்பு, இயேசு பிறந்த மாட்டுத்தொழுவம் போன்ற காட்சி ,கிறிஸ்துமஸ் மரத்துடன் அழகான காட்சி என பல்வேறு வகையான அலங்காரங்களைச் செய்வர்.
இயேசு கிறிஸ்து பிறந்தபோது விண்மீன் தோன்றியது போல் வீடுகள் தோறும் காகிதங்களால் ஆன நட்சத்திரங்களை தொங்கவிடுவர். இயேசு கிறிஸ்து பிறந்த நேரம் நள்ளிரவு என்பதால் இரவு 12 மணிக்கு ஆலயங்களுக்குச் சென்று மதகுருமார்கள் நடத்தும் திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்வார்கள்.
பின்னர் தம் வீடு திரும்பி பல்வகை பண்டங்களை உறவினரோடு கூடி அமர்ந்து உண்டு மகிழ்வர். ஏழைகளுக்கும் மற்ற மதத்தை சார்ந்த நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்வர்.
இவ்வுலகை அன்பால் ஆளவந்தவர் இயேசுபிரான். அவர் காட்டிய சமாதான வழியில் அனைவருமே சென்று நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக!