
வீட்டினுள் அமர்ந்து சுவாரசியமாக கூடி விளையாடும் சில பழமையான விளையாட்டுக்களில், ஒருப்பட்டை மற்றும் ஒரு குத்து ஆகிய இரண்டும் சேர்ந்தவைகளாகும். இவ்விளையாட்டுக்களுக்கென பாடல்களும் உண்டு.
ஒருப்பட்டை மற்றும் ஒரு குத்து போன்ற விளையாட்டுக்களை என்னுடைய பேத்திகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது விடுமுறை நாட்களில் மகன், மகள் மற்றும் நானும் விளையாடுவதுண்டு. வீட்டிற்கு வரும் பிறமொழி பேசும் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுகையில், அவர்களுக்கு ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்
தாயக்கட்டம், பரமபதம், ஆடு-புலி, பல்லாங்குழி போன்ற ஆட்டங்களிலிருந்து மாறுபட்டவைகள். குழந்தைகளுக்கு டைம்பாஸ் பண்ண, சுவாரசியமாக கூடி விளையாடும் ஒரு சில பழமையான விளையாட்டுக்களைப் பற்றிய விபரங்கள்...
எங்கள் தாயாரும், தாய்வழிப் பாட்டியும் சொல்லிக் கொடுத்த 'ஒருப்பட்டை,' விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இத்துடன் "ஒரு குத்து" மற்றொரு விளையாட்டு.
"ஒரு குத்து" என்பது குத்துச்சண்டை விளையாட்டு இல்லை. பயப்படவேண்டாம்.
பள்ளி விடுமுறை நாட்களில், தாயக்கட்டம், பல்லாங்குழி, ஆடுபுலி, பரமபதம் போன்ற விளையாட்டுக்களுடன், ஒருப்பட்டை, ஒரு குத்து, கிள்ளாப்பரண்டி - கீப்பரண்டி ஆகிய விளையாட்டுக்களும், விளையாட ஜாலியாக இருக்கும்.
சிறுசுகளின் விளையாட்டு என்றாலும், அவர்களுக்கு நடுவே சண்டை வராமலிருக்கவும், விளையாட்டை சுவாரசியமாக நடத்திச் செல்லவும், ஒன்றிரண்டு பெரியவர்கள் கூட அமர்ந்திருப்பார்கள். சில சமயங்களில், அவர்களும் சேர்ந்து விளையாடுவதுண்டு.
வித-விதமான மெட்டில் பாடி விளையாடும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
ஒருப்பட்டை:
ஒருப்பட்டை விளையாட்டிற்கு, வட்ட வடிவமாக அனைவரும் கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். நடுவில் அமர்ந்திருக்கும் லீடர் மாதிரி ஒருவர், அல்லது பாட்டி, அல்லது அம்மா, கீழ்க்கண்ட பாட்டைப் பாடியவாறு, ஒவ்வொருவர் கால் அல்லது தொடையில் லேசாகத் தட்டி - தட்டி வரிசையாகச் செல்வார்கள்.
ஒருப்பட்டை - இருப்பட்டை!
ஓராம் மாசம்!
சுக்கும் திப்பிலி !
செவந்திய மாலை!
பூவாம் - பூவாம் பட்டணமாம்!
பூச்சொரிந்த பட்டணமாம்"
காவேரியம்மா - கஸ்தூரியம்மா!
காலை மடக்கடி காமாட்சி;
மீனாட்சி; கல்யாணி! "
கல்யாணி என்கிற கடைசி வார்த்தையை, க...ல்..யா..ணி என்று ஒவ்வொரு எழுத்தாக நீட்டி முழக்கிச் சொல்வார்கள். மிகவும் பரபரப்பாக இருக்கும். "ணி" என்ற எழுத்து முடிகையில், யாருடைய தொடையை, லீடரின் கை தொடுகிறதோ அவன் அல்லது அவள் அந்த ஒரு காலை மடக்கிக் கொள்ளவேண்டும்.
மறுபடியும் சுற்றிச்சுற்றி 'ஒருப்பட்டை, இருப்பட்டை' என்று இதே மாதிரி பாடி விளையாடி வருகையில், மறு காலையும் மடக்க வைப்பார்கள். முதலாவதாக, இரண்டு கால்களையும் யார் மடக்கிக் கொள்கிறார்களோ, அவர்களே ஜெயித்தவர்கள் ஆவார்கள். ஜெயித்த சிறுசுகளின் முகங்கள் பூப்போல மலர்ந்து காணப்படும். சில சமயம், இதில் கோல்மால் செய்வதும் உண்டு.
சிரிப்பும், களிப்புமாக பக்கத்தில் சீடை, முறுக்கு, தட்டை என்று நொறுக்குத் தீனி சாப்பிட்டவாறே ஒருப்பட்டை விளையாட்டை விளையாடுகையில், நேரம் போவதே தெரியாது.
ஒரு குத்து :-
ஒரு குத்து விளையாட்டில், சிறிசு ஒன்று கீழே அமர்ந்து தரையில் தனது ஒரு உள்ளங்கையை திருப்பி கவிழ்த்து வைத்து கொள்ள, எதிரில் அமர்ந்திருக்கும் இன்னொரு வாண்டு தன்னுடைய ஒரு கை விரல்களை முட்டி போல நன்கு மடக்கி, கவிழ்த்து வைத்து இருக்கும் கையின் இந்தப் பக்கம், அந்தப் பக்கம், எதிர் பக்கம் "ஒரு குத்து - இரு குத்து-முக்குத்து" என்று மெதுவாக சொல்லி, திடீரென "நாக்குத்து" என கவிழ்த்த உள்ளங்கை பின்புறம் குத்துகையில், சிறிசு சடக்கென கையை எடுத்துவிட, எதிரில் இருக்கும் வாண்டுவின் "நாக்குத்து" தரையில் பட, மஜாவாக இருக்கும்.
வாண்டு பையன் 'ஆ'" என அலறும். சில சமயங்களில் 'நாக்குத்து' சிறுசின் கையில் விழுகையில் ஏதோ முதல் பரிசு வாங்கியதைப் போல அந்த வாண்டு சிரிக்கும். அப்போது சீட்டிங்! சீட்டிங்! என்று சொல்லி சிறிசு ஆர்ப்பாட்டம் செய்யும். இவர்களைச் சுற்றி மற்ற குழந்தைகள் அமர்ந்து ஒருவிதமான பரபரப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள். அலறும் வாண்டை, பெரியவர்கள் சமாதானப் படுத்துவார்கள்.
விடுமுறை நாட்களில், கம்ப்யூட்டர், மொபைல் என்று விளையாடும் குழந்தைகளுக்கு, 'ஒருப்பட்டை' மற்றும் 'ஒரு குத்து' விளையாட்டுக்கள் மாறுதலாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே மாதிரி, சில நேரங்களில், வயதானவர்களும் இவ்விளையாட்டுக்களை நினைவு படுத்தி விளையாடுவதுண்டு.
வாய் விட்டு சிரிக்கவும், கூடி விளையாடவும், இந்த மாதிரி பழமையான, சுவாரசியமான விளையாட்டுக்கள் உதவும். சரிதானே!
ஆர்.மீனலதா