
கண்ணாமூச்சி விளையாட்டை சின்ன குழந்தைகளோடு நாம் விளையாடுவது சகஜம். ஆறு மாத குழந்தைகிட்ட முகத்தை மூடிக் கொண்டு குட்டி எங்க? பாப்பா எங்க?... 'இதோ' என்று சொல்வோம்.
அதைப் போல் குழந்தைகளின் கண்களையும் மூடி விட்டு நம்மை தேடச் சொல்வோம். இதை ஒரு விளையாட்டாகத் தான் நாம் கருதிக் கொண்டிருந்தோம்.
ஆனால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டை பற்றி தெரிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் கூட்டு குடும்பத்தில் இருப்பதில்லை. அம்மா அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். குழந்தைகளை வீட்டில் ஆயாவுடன் விட்டு செல்கிறார்கள் அல்லது குழந்தைகள் காப்பகத்தில் விட்டு செல்கிறார்கள். அப்படி இருக்கையில் இதைப் போல் குழந்தைகளோடு அழகான இந்த கண்ணாமூச்சி விளையாட்டை யார் விளையாடுவார்கள்?
சமீபகாலமாக குழந்தைகளுக்கு மனவளர்ச்சி குறைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி போய் கொண்டே இருக்கிறது.
சமீப காலத்து குழந்தைகள் மிகவும் மனநிலை குன்றி இருப்பதற்கான காரணம் தான் என்ன? தெரியுமா? இதைப் பற்றி உளவியல் டாக்டர்களின் கருத்துக்கள் என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால் மிக அதிர்ச்சிக்குள்ளாவீர்கள்.
New york ல் உள்ள புகழ் பெற்ற Developmental psychologist Dr. Aliza Pressman இந்த கண்ணாமூச்சி விளையாட்டிற்கும் குழந்தைகள் நலனுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்பதை பற்றி என்ன கூறி இருக்கிறார் என்று பார்க்கலாமா....
Peekaboo (கண்ணாமூச்சி) என்கிற இந்த விளையாட்டு குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு நிலைத் தன்மையை உணர்த்துகிறது.
பார்வையிலிருந்து விலகி இருந்தாலும் நமக்கு வேண்டியவை திரும்பவும் நமக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு உருவாகிறது.
மேலும் இந்த விளையாட்டு நினைவு, கவனம் போன்ற திறன் கொண்ட மூளைப் பகுதிகளை தூண்டுகிறது. உணர்ச்சி நுண்ணறிவுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.
இந்த peekaboo என்ற விளையாட்டின் மையப் பொருள் நிலைத் தன்மை என்பதே ஆகும். 9 முதல் 12 மாததிற்குள் குழந்தைகளுக்கு இந்த நிலைத்தன்மை வளர்ச்சி அடையத் தொடங்கும். இந்த பருவத்தில் இருக்கும் போது குழந்தைகள் தான் பார்த்த பொருட்களை மறந்து விடுகின்றன. மீண்டும் அதை பார்க்கும் போது தான் ஞாபக சக்தி வளர ஆரம்பிக்கிறது. அத்தருணத்தில் இந்த விளையாட்டை விளையாடும் போது நாம் அவர்களை விட்டு போய் விட்டோம் காணவில்லை என்று தேட ஆரம்பிக்கும்.
பிறகு நம்மை பார்த்தவுடன் குழந்தைகளுக்கு ஒரு பலமான நம்பிக்கை வருகிறது. நம்மை சார்ந்தவர்கள் காணாமல் போனாலும் திரும்பவும் வந்து விடுவார்கள், நம்மை விட்டு எப்போதும் பிரிய மாட்டார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பிறக்கிறது. பழக்கமான முகம் மறைந்து பின்பு திடீரென தோன்றும் போது குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
peekaboo விளையாட்டின் ஆழமான முக்கியத்துவம் அதன் உணர்ச்சிபூர்வமான செய்தியில் உள்ளது, “நான் போய் விட்டேன், ஆனால் நான் திரும்பி வருவேன்” என்பதாகும். இது மனித இணைப்பின் சிக்கல்களை கடந்து செல்லும் ஒரு குழந்தைக்கு நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கான அடிப்படை பாடமாகும் என்று கூறுகிறார் Dr. Aliza Pressman.
இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு வெறும் பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல், இருப்பு, இல்லாமை மற்றும் திரும்ப கிடைப்பதால் ஏற்படும் ஆறுதல் போன்ற உணர்ச்சிகளின் வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைகிறது என்பதே இந்த நிபுணரின் கருத்தாகும்.
ஆகவே மறைந்து போன இவ்விளையாட்டை குழந்தைகளிடம் விளையாடத் தொடங்கினால் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
நம் முன்னோர்கள் செய்த எந்த செயலும் சொன்ன வார்த்தைகளும் அறிவுரைகளும் ஒருபோதும் தவறாகாது என்பதற்கு இந்த கண்ணாமூச்சி விளையாட்டும் மிகப் பெரிய உதாரணம்!