பூமியில் உள்ள காடுகள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் என மனிதன் காலடி படாத இடமே கிடையாது. ஆனால், இன்றைக்கும் மனிதனுக்கு சவால் விடும் வகையில் காலடி படாத இடங்கள் ஆழ்கடல்தான். எங்கோ கண்ணுக்கு எட்டாத் தொலைவிலிருக்கும் கோள்களைப் பற்றி விண்வெளி ஆராய்ச்சியின்மூலம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற மனிதன் பூமியின் அங்கமாக விளங்கும் ஆழ்கடல் விஷயத்தில் இன்னும் முழுமையான வெற்றியை அடையவில்லை.
ஏனெனில், விண்வெளிப் பயணத்தைவிட மிகவும் கடினமானது ஆழ்கடல் பயணம்தான். நீர் மூழ்கிக் கப்பல்கள்கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே பயணிக்க இயலாத மிகமிக அதிகமான அழுத்தம் நிறைந்த நீரால் சூழ்ந்த பகுதியாகும் ஆழ்கடல். வளிமண்டல அழுத்தத்தை(Pressure)விட ஆழ்கடலில் கிட்டத்தட்ட 1100 மடங்கு அதிக அழுத்தம் காணப்படுகிறது.
மனிதன் மேற்கொண்ட தொடராய்வுகளால் விண்வெளியைப்போல ஆழ்கடலும் நமக்குப் பலவிதமான ஆச்சரியங்களை அளிக்க வல்லது என்பது புலனாயிற்று. கடலின் அடிப்பகுதியில் நாம் இதுவரை அறிந்திராத எண்ணற்ற உயிரினங்கள், மலைத்தொடர்கள், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் எனப் பலவும் இருக்கின்றன.
இவ்வாறு, எண்ணற்ற ஆச்சரியங்கள் நிறைந்த ஆழ்கடலில் புதைந்திருக்கும் எண்ணிலடங்கா இரகசியங்களில் ஒன்றுதான் - மரியானா அகழி.
மரியானா அகழி:
உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத்தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இதன் நீளம் 2550 கிலோ மீட்டர், அகலம் 69 கிலோ மீட்டர், ஆழம் 36000 அடி ஆகும். அதாவது 11000 மீட்டர்கள்.
கடலின் மிகமிக ஆழமான பகுதி பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கேயுள்ள மரியானாஅகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம்தான்.
உலகிலேயே மிகவும் உயர்ந்த சிகரமான (8848 மீ) எவரெஸ்ட்டே இதனுள் அடங்கிவிடும், என்றால் இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதா?
உலகிலேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம்தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது, மரியானா அகழி.
மரியானா அகழியில் அழுத்தம் சுமார் 15750 psi (8 tons per Square inch) ஆகும். இது கடலின் மேற்பரப்பு வளிமண்டல அழுத்தத்தைவிட 1100 மடங்கு அதிகமாகும்.
மரியானா அகழியின் அடிமட்டத்தில் சூரியஒளி பட்டு பல மில்லியன் ஆண்டுகள் ஆனதால் அங்கு வெப்பநிலை கிட்டத்தட்ட பூஜ்ஜியமே.
மரியானா அகழியின் ஆழப்பகுதி வரை சென்று இதுவரை திரும்பியவர்கள் மூன்று பேர் - அமெரிக்கக் கடற் படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜேக்குஸ் பிக்கார்டு மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.