
செமஸ்டர் லீவுக்கு ஊருக்கு வந்தபோது ஓ.டி.டியில் மெய்யழகன் திரைப்படம் பார்த்தேன். பல இடங்களில் மனதை நெகிழ வைத்தது. படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி சீன் வரை ஒவ்வொரு பிரேமும் மனதை விட்டு அகலாத வண்ணம் மிக அழகாக எடுக்கப்பட்டிருந்தது.
நடிகர் கார்த்தியின் பெயர் தெரியாமல் அரவிந்த்சாமி தடுமாறும்போது நம்மையும் சேர்த்து தவிக்க வைத்து விடுகிறார். தற்கால நகரத்துத் திருமணங்களில் இருக்கும் வீண் ஆடம்பரமும், செயற்கைத் தன்மையும், துளியும் இல்லாத அசல் கிராமத்துத் திருமண நிகழ்வு மனதைக் கொள்ளை கொண்டது. அண்ணன் தங்கையின் பாசத்தில் மனம் கரைந்தது. அருள்மொழி கதாபாத்திரத்தின் மீது உறவினர்கள் காட்டும் பிரியமும் அன்பும், குறிப்பாக மெய்யழகனின் அதீத அன்பு ஆச்சர்யப் படவைத்தது.
தற்போதைய இளம் வயதினர் குறிப்பாக, டீன் ஏஜ் பிள்ளைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது என்று சொல்லுவேன். ஏனென்றால் தேவைக்கு மேலே எக்கச்சக்கமான பொருட்களை பெற்றோர் வாங்கி குவித்திருந்தாலும் அவை எல்லாவற்றிலும் ஒரு திருப்தி அடையாத மனப்பான்மை இன்றைய இளம் வயதினரிடையே நிரம்பி இருக்கிறது.
தம் தகுதிக்கு மீறி, பெற்றோர் ஐ ஃபோனே வாங்கித் தந்தாலும், இரண்டே நாளில், அப்ப்டியென்ன பெரிசா செஞ்சுட்டீங்க?” என குறை சொல்லும் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் "சிறு வயதில் எப்போதும் எனக்கு பழைய சட்டை தான் கிடைக்கும். நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் புதுச் சட்டையே போடுறேன்" என்று மெய்யழகன் சொல்வார். அதை அவர் ஒரு குறையாகவோ புகார் ஆகவோ இல்லாமல் மிக எதார்த்தமாக சொல்வார்.
அருள்மொழி பயன்படுத்திய பழைய சைக்கிளை கூட அவர் போற்றிப் பாதுகாத்து வருவதும், 'இது எனக்கு சாமி மாதிரி' என சொல்வதும், அதனால் அருள்மொழி மீது காட்டும் நன்றி உணர்வும் அவசியம் கற்றுத் கொள்ள வேண்டிய பாடங்கள். சிறு வயதில் அருள்மொழி தன் மீதும் தன்னைப் போன்ற பிற சிறுவர்கள், சிறுமியர் இடையே காட்டிய அன்பு, அக்கறை, கருணை போன்றவற்றை மனதில் தேக்கி வைத்து தானும் அதைப்போலவே ஆகவேண்டும் என்கிற மாதிரி பின்னாளில் அன்பே உருவாய் மனம் முழுக்க பாசத்தை நிரப்பி கொண்டு மெய்யழகன் உருமாறி இருப்பது மிகச் சிறப்பு.
இந்தப் படம் உறவினர்கள் இடையே உள்ள பாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று மேலோட்டமாக நினைத்தாலும் இரண்டு நல்ல உள்ளங்களின் தனித் தன்மையையும் சக மனிதனை நேசிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது. முதலில் தன்னிடம் சரியாக முகம் கொடுத்து பேசாத அரவிந்த் சாமியிடம் எந்தவித வேறுபாடும் காட்டாமல் தன்னை பேர் சொல்லிக் கூப்பிடாமல் இருந்தாலும் கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மெய்யழகன் அவர் மீது உண்மையான பாசத்தை பொழிவது யார் மனதையும் இளகச் செய்துவிடும்.
மெல்ல மெல்ல மெய்யழகன் மீது அருள்மொழிக்கு ஏற்படும் பாசமும், பிடிப்பும், அவர் குணத்தில் உண்டாகும் ட்ரான்ஸ்ஃபர்மேஷனையும் மிக அழகாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த ஆண்டு நான் பார்த்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த திரைப்படம் என்று மெய்யழகனைத்தான் சொல்வேன். மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அருமையான திரைப்படம் இது. அதிலும் கார்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது முக பாவங்களும் உடல் மொழியும் எத்தனை பாராட்டினாலும் தகும்.