அப்பாவின் மிதிவண்டி!

The Magic of Appa’s Old Bicycle
The Magic of Appa’s Old BicycleAI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on

முதன்முதலில் குரங்கு

பெடல் அடித்துக் குப்புற

விழுந்ததும், அதில் தான்!

நின்று கொண்டிருக்கும்போது கையால் பெடலை வேகமாகச்

சுற்றி, சக்கரக் கம்பிகளுக்கு இடையில்

துடைப்பக் குச்சியை விட்டு ‘கடகட’

சத்தத்தைக் கேட்டுச் சந்தோஷப்பட்டதும், அதில் தான்!

அப்பாவோடு பின்னாடி உட்கார்ந்து இரண்டு கால்களை

ஆட்டியபடி பஜாருக்குப்

போனதும், அதில் தான்!

ரேஷன் கடை அரிசி மூட்டையைப்

பின்புறம் வைத்து வீட்டுக்குக்

கொண்டு வந்ததும், அதில் தான்!

ஆயுத பூஜைக்குச் சந்தனம், குங்குமத்தை மூலை

முடுக்கெங்கிலும் ஒன்று விடாமல்

வைத்ததும், அதில் தான்!

தங்கையைப் பின்னாடி

உட்கார வைத்து

ஊர் சுற்றியதும், அதில் தான்!

சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு

வென்றதும், அதில் தான்!

தினமும் அப்பா வேலைக்குச்

செல்வதும், அதில் தான்!

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 2
The Magic of Appa’s Old Bicycle

ஆர்வமாகப் போட்டி போட்டுக்கொண்டு நானும் தங்கையும்

முன்பக்கக் கைப்பிடியில் மாட்டியிருந்த, அப்பா வாங்கி வந்த

தின்பண்டங்களை எடுக்கச்

சென்றதும், அதில் தான்!

பக்கத்து வீட்டுக்கிழமியை

வெறுப்பேத்தத் தெருவில்

வேகமாக ஓட்டி,

பெல்லை ஓயாமல் அடித்து

ஒலி எழுப்பியதும், அதில் தான்!

பயந்து பயந்து ஏறிய அம்மாவைப்

பக்குவமாய்க் கடைக்கு அழைத்துப்போனதும், அதில் தான்!

கிணற்றுக்குக் குளிக்கப் போகும்போது நண்பர்களை முன்பக்கக்

கம்பியிலும் பின்பக்கத்திலும் ஏற்றிச்

சென்றதும், அதில் தான்!

அப்பா ஓட்ட, பின்னாடி உட்கார்ந்து, அப்பாவின் முதுகில் தலை

சாய்த்தபடி காது வலியோடு மருத்துவமனைக்குப்

போனதும், அதில் தான்!

குடும்பத்தைத் தோளில் சுமந்து,

வலிகளை மனதில் தாங்கி,

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கக் கால் கடுக்க

அப்பா மிதித்துச் சென்றதும், அதில் தான்!

இன்றும் அந்தப் பழைய நினைவுகளைச் சுமந்தபடி, வீட்டின் முன்புறம் எனது மகிழுந்துக்கு அருகில் தான் நின்று கொண்டிருக்கிறது அப்பாவின் மிதிவண்டி..!

logo
Kalki Online
kalkionline.com