மின்மினி மின்மினி மின்மினி! சின்ன பொன்மணி பொன்மணி பொன்மணி!

மின்மினிப் பூச்சி...
மின்மினிப் பூச்சி...

நாம் சிறுவயதில் இருக்கும்போது மின்மினிப் பூச்சிகளை பல்வேறு இடங்களில் பார்த்து ரசித்து இருப்போம். இது எவ்வாறு மின்னுகிறது என்று ஆச்சரியமாகப் பார்ப்போம்.

இப்போது உள்ள குழந்தைகளுக்கு இந்த மின்மினிப் பூச்சிகளைக் காண்பிக்க முடியவில்லையே என்று சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

நெருப்பில்லாமல் வெளிச்சமா! மின்சாரம் இல்லாமல் லைட்டா! என்று ஆச்சரியப்படக்கூடிய இயற்கையின் படைப்புதான் இந்த வெளிச்சப்பூச்சி.

மினுங்குவதால் இதை மினு மினு பூச்சி என்றும், வெளிச்சம் காட்டுவதால் லைட்டா பூச்சி என்றும், திடீரென்று மறைந்து திரும்பவும் வருவதால் கண்ணாம் பூச்சி என்றும் அழைப்பர்.

முட்டையிலிருந்து வெளிவந்து லார்வாக்கள்போல இருக்கும்போதே மின்ன ஆரம்பித்து விடுகின்றன இப்பூச்சிகள்! இந்த மின்மினிப் பூச்சிகள் மின்னுவதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் இந்தப் பூச்சியின் வயிற்றுப் பகுதியில் நடக்கும் வேதி மாற்றம் ஆகும்.

மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளி பகுதியில் இருந்து உட்புற செல்களுக்கு 'ட்ராக்கியோல்கள்' எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்சிஜனை பெறுகின்றன. மின்மினிப் பூச்சியின் மூச்சுக் குழாய் அவற்றின் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. அதேபோல அவற்றின் வயிற்று பகுதியில் காணப்படும் என்சைம்களான லூசிபெரேன், லூசிபெரேஸ். இந்த என்சைம்கள் மீதுதான் ஆக்சிஜன் படும்போது மின்மினிப் பூச்சி மின்னுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

மின் மினி தன் இரையைப் பிடித்து தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்த உடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக்கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளைச் செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளைச் செலுத்திடும். சில மணி நேரத்தில் இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினிப் பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். அப்போது அதன் உடலில் அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும்.

இது தன் துணையை ஈர்க்கவும் இந்த ஒளியை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
சுருளிமலை சுருளி ஆண்டவர் பற்றி தெரியுமா?
மின்மினிப் பூச்சி...

விவசாயிகளின் நண்பன்

மின்மினிப் பூச்சிகள் நத்தைகளை அழிப்பதால் விவசாயிகளின்  நண்பர்களாக மதிக்கப்படுகின்றன. இவை நத்தையின் மேல் அமர்ந்து தனது உமிழ் நீரால் நத்தையின் சதைப்பகுதியை கரைத்து உறிஞ்சிக் குடித்துவிடும். மேலும், வேளாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் அழிக்கிறது. மண் புழுவையும் உணவாகக் கொள்கிறது.

தூக்கணாங்குருவி தன் குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து அதில் மின்மினிப் பூச்சியைப் பொதிந்து வைக்குமாம். ஏனென்றால் மின்மினிப் பூச்சியும், தூக்கணாங்குருவியும், மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களை வாழிடங்களாகக் கொண்டவை. மின்மினிப் பூச்சிகள் காணப்படும் இடங்களை நீர் மாசுபாடு இல்லாத வளமான உயிர்ச்சூழலுக்கு அறிகுறியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மாசுபாட்டைக் குறைத்து இயற்கை தந்த இந்த இனிய உயிரை நம் சந்ததியினருக்குக் காண்பிக்க பாடுபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com