விட்டு பிரிந்து போன குருவி வீடு திரும்புமா? 

sparrow and grandfather and grand daughter
home sparrows
Updated on

சமீபத்தில் என் நான்கு வயது பேத்தி என்னிடம் தன் கலர் அடிக்கும் புத்தகத்திலிருந்து ஒரு சிட்டு குருவியின் படத்தை காண்பித்து, "இந்த பறவையை காட்ட முடியுமா தாத்தா..?" என்று கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.. சென்னை மாநகரில் சிட்டு குருவிக்கு நான் எங்கு போவது? zoo க்கு போனால் கூட சிட்டு குருவியை பார்க்க முடியாதே! 

ட்விட்டரின் தயவில் சிட்டு குருவியின் படத்தை பார்த்து சற்று ஆறுதல் அடைந்து வந்தோம். ஆனால் அதையும் அமெரிக்க கழுகு எலான் மஸ்க் தின்று  விட்டார். க்யூட் குருவி இருந்த  இடத்தில் இப்போது இருப்பது பெரிய X. 

அந்த காலத்தில் நகரங்களில் கூட சிட்டு குருவி கூடில்லாத வீடுகளை பார்க்க முடியாது. நாங்கள் வெகு நாட்கள் முன் குடியிருந்த போது, சிட்டு குருவி குடும்பம் ஒன்று தலைமுறை தலைமுறையாக எங்கள் வீட்டின் உத்திரத்தில் வாழ்ந்து வந்தது. ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கும்.

அப்போதெல்லாம் வீடுகளில் அரிசியை கோணி மூட்டையில் வைத்திருப்போம். அதில் அமர்ந்து கொத்தி கொத்தி குருவிகள் சாப்பிடும் அழகே அழகு.

ஒருநாள் எங்கள் அப்பா ஒரு மர்பி ரேடியோ வாங்கி வந்தார். அதை குருவி கூட்டின் கீழ் ஒரு ஷெல்ப்  அடித்து அதன் மேல் வைத்தார். அதிலிருந்து வந்த ஒலி எங்களுக்கு இசையாக இருந்தது. ஆனால் அதுவே குருவிகளுக்கு இரைச்சலாகவும் இம்சயாகவும் தோன்றி இருக்க வேண்டும்.

ஏன் என்றால் தாய் குருவியும் தந்தை குருவியும் கோபப்பட்டு ரேடியோவை போர் விமானங்கள் போல தாக்க துவங்கின. இக்குருவிகள் மிகவும் வெறுத்தது எங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் காமண்டரி. நாங்கள் ஒட்டடை கொம்பை  வைத்து எவ்வளவு துரத்தியும் விடாமல் குருவிகள் விடாப்பிடியாக ரேடியோவை ரவுண்டு கட்டி அட்டாக் செய்தன.

இதையும் படியுங்கள்:
மரணமே இல்லாத மெக்சிகோவின் சிரிக்கும் மீன்: இதயத்தையும் மூளையையும் மீண்டும் வளர்க்கும் மர்மம்!
sparrow and grandfather and grand daughter

வேறு வழி இல்லாமல் ரேடியோவை வேறு இடத்திற்கு மாற்றிய பின் தான் அமைதி திரும்பியது. இந்த காலத்தில் சகோதரர்கள் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ்வதில்லை. அந்த காலத்தில் காக்கை குருவிகளுக்கும் கூட விட்டு கொடுத்து வாழ்ந்தோம். அதெல்லாம் வாழ்வோம்; வாழ விடுவோம் நாட்கள்....  

கடவுள்கள் குடியிருக்கும் கோவில்களில் பறவைகள் தஞ்சம் அடைந்து அக்கடான்னு வாழ்கின்றன. ஆனால் தற்போது ஆங்காங்கு ராக்ஷஸர்கள் போல நின்று கொண்டிருக்கும் செல்போன் கோபுரங்கள் பறவைகளை குறிப்பாக சிட்டு குருவிகளை விரட்டி விட்டன.

சிட்டு குருவிகள் நம்மை விட்டு பிரிந்து போனதற்கு மற்றொரு காரணம் உண்டு. அது தான் நமது  தற்போதைய வீடுகளின் அமைப்பு. கதவுகள் உண்டு ஜன்னல்களும் உண்டு. ஆனால், அவை எப்போதும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. குருவிகள் எப்படி வரும்.. போகும்..?

மேலும், Home Sparrow என்று அழைக்கப்படும் சிட்டு குருவிகள் மனிதர்களோடு அந்யோன்யமாக வாழும் உயிரினம். அவை மேல் நமக்கிருந்த அக்கறை போய்விட்ட நிலையில், அவை மறைந்து  விட்டன. 

இப்போது சில நல்ல உள்ளங்கள் சிட்டு குருவிகளுக்காக பொம்மை வீடுகள் உண்டாக்கி அவற்றை வீடுகளில் அமைத்து  அவற்றின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். 

விட்டு பிரிந்து போன குருவி வீடு திரும்புமா? 

logo
Kalki Online
kalkionline.com