

வதன், சுதன் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கும் நண்பர்கள். வதன் பெரும் பணக்காரன்; சுதன் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்து நாட்களாகப் பள்ளிக்கு வராத வதன், உடல்நலம் தேறி ஒருநாள் காரில் பள்ளிக்கு வந்தான். விஷக்காய்ச்சலால் தான் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகப் பெருமையுடன் சுதனிடம் கூறினான்.
சுதன் கலங்கிய கண்களுடன், “என் அம்மாவுக்கு இரண்டு நாளா காய்ச்சல் குறையலடா. நீ சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் என் அம்மாவைச் சேர்க்க உதவ முடியுமா?” என்று கேட்டான். இதைக் கேட்ட வதன் ஏளனமாகச் சிரித்தான். “சுதன், நீ வாடகை வீட்டில் வாழ்பவன், நானோ பங்களாவாசி.
அந்த மருத்துவமனையில் அட்மிஷன் போடவே பத்தாயிரம் கேட்பாங்க, சிகிச்சை பல லட்சம் ஆகும். இதெல்லாம் உங்க அப்பாவால் சாத்தியமா? உன்னைப் போன்றவர்கள் அந்த மருத்துவமனை பற்றி யோசிக்கவே கூடாது!” என்று கேலியாகப் பேசி சுதனின் மனதைப் புண்படுத்தினான்.
மறுநாள், வதன் அதே மருத்துவமனையில் வி.ஐ.பி அறை எண் 300-இல் காத்திருந்தான். அப்போது கையில் பிளாஸ்க்குடன் வந்த சுதனைப் பார்த்து, “படிப்பை விட்டுட்டு இங்க ஆபிஸ் பாய் வேலைக்கு வந்துட்டியா?” என்று மீண்டும் கிண்டல் செய்தான். சிறிது நேரத்தில், தலைமை மருத்துவர் குழுவினர் வதனின் அறையைக் கடந்து, பக்கத்து அறை எண் 301-க்குள் நுழைந்தனர். வதன் திகைப்புடன் பின்னாடியே சென்றபோது, அங்கு தன் அம்மாவின் பக்கத்தில் சுதன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
“இவனுக்கு எப்படி இந்த வி.ஐ.பி அறையில் இடம் கிடைத்தது?” என்று வதன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, சுதன் வெளியே வந்து வதனுக்குக் காபி கொடுத்துப் பேசினான். வதன் தயக்கத்துடன், “சுதன், எப்படி உங்க அம்மாவுக்கு இங்கே அட்மிஷன் கிடைச்சது?” என்று கேட்டான்.
சுதன் விளக்கினான்: “எல்லாம் என் அப்பாவால்தான். இந்த மருத்துவமனையின் எம்.டி (MD) பங்களாவுக்கு கடந்த 25 வருஷமா என் அப்பாதான் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறார். அப்பா மீது எம்.டி-க்கு அவ்வளவு நம்பிக்கை. அப்பா கேட்ட உடனேயே, எம்.டி போன் செய்து அம்மாவுக்கு வி.ஐ.பி அறையும், இலவச சிகிச்சையும் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.”
“ஏன்டா, உங்க அப்பா இந்த எம்.டி வீட்டு எலக்ட்ரீஷியன்னு நீ சொல்லவே இல்லையே?” என்று வதன் கேட்க, “அப்பா காலையிலேயே வேலைக்குக் கிளம்பிடுவாரு. அவர் எங்கே போறார்னு எனக்கே இப்பதான் தெரிந்தது,” என்றான் சுதன் அமைதியாக. வதனின் கர்வம், ஆணவம் மற்றும் கிண்டல் செய்யும் குணம் அனைத்தும் அந்த இடத்திலேயே மறைந்து போயின.
நீதி: பணத்தால் அடைய முடியாத ஒன்றை, ஒருவர் தன் உண்மையான உழைப்பாலும் நற்பண்பாலும் அடைய முடியும்.