
கடலில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் மிகச் சிறிய விலங்குகள் முதல் பெரிய விலங்குகள் வரை உள்ளன. விஷம் அதிகம் உள்ள உயிரினங்களும் அதில் உண்டு. பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிகவும் விஷமுள்ள கடல் உயிரினங்கள் ஆகும்.
பழமையான விலங்குகள்:
பாக்ஸ் ஜெல்லி மீன்கள் பூமியின் மிகப் பழமையான விலங்குகளில் ஒன்றாகும். 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தியவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெட்டி ஜெல்லி மீன்கள் கடல் குளவிகள் என்றும் கடல் கொட்டும் மீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் 50 வகைகள் இருக்கின்றன. 43 வகையான பாக்ஸ் ஜெல்லி மீன்கள், கடல் பாம்புகள், சுறாக்களைவிட அதிக விஷமுள்ளவை. அதிகம் பேரைக் கடிக்கும் என்கிறார்கள்.
உடல் தோற்றம்:
ஜெல்லி மீன்கள் ஒரு வினோதமான உயிரினங்களாகும். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஆபத்தானவை. அவற்றுக்கு இரண்டு டஜன் கண்கள் உள்ளன. அவை பெரும்பாலும் லென்ஸ்கள், கார்னியாக்கள் மற்றும் கருவிழிகளைக் கொண்டுள்ளன. அவற்றால் நன்றாக பார்க்க முடியும். தங்கள் இரையைத் தேடும் போது வேகமாக நீந்தும். மழைக்காலத்தில் குடை போல தனது தலையைத் திறந்து மூடுவதால் மணிக்கு ஆறு கிலோமீட்டர் வேகத்தில் மிக வேகமாக தண்ணீரில் நீந்தும்.
விஷத்தன்மை:
பாக்ஸ் ஜெல்லி மீன்கள் உலகின் மிகவும் விஷமுள்ள கடல் உயிரினங்கள் ஆகும். இவற்றின் உடலில் 15 நீளமான நார் போன்ற இழைகள் உள்ளன. அவற்றில் ஐந்தாயிரம் கொட்டும் செல்கள் உள்ளன. அதை ஒரு நச்சுப்பொருளை வெளியிடுகின்றன. செல்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய கேப்ஸூல் உள்ளது. இது விஷத்தை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தும். இதனால் இந்த மீன்கள் கடித்த உடனே ரத்த அழுத்தம் அதிகரித்து இதயம் செயலிழந்து மரணம் நேரிடும்.
பொதுவாக ஜெல்லி மீன்கள் உணவுக்காக தங்களுடைய இரையைக் கொல்லும் போது விஷத்தை வெளியிடும். அதேபோல தன்னை தாக்க வரும் உயிரினங்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள விஷத்தை வெளியிடுகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெட்டி ஜெல்லி மீன் மிகவும் விஷமுள்ளது. அதனுடைய ஐந்தடி நீளமான இழை போன்ற பாகங்கள் மனிதர்கள் தொட்டால் அல்லது வேறு எந்த உயிரினத்தை தொட்டாலும் சில நிமிடங்களிலேயே இறப்பு நிச்சயம்.
லில்லி புட்டியன் ஜெல்லி என்கிற ஒரு வகை ஜெல்லி மீன் கடிக்கும் போது உடல் வலி, வாந்தி, தலைவலி, பதட்டம் ஆகியவை ஏற்பட்டு சிறிது நேரத்தில் மரணம் நிகழலாம். உடனடியாக சிகிச்சை அளித்தால் காப்பாற்றி விடலாம். பிலிப்பைன்ஸில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 40 பேர் பாக்ஸ் ஜெல்லி மீன் கடித்து இறக்கிறார்கள்.
வசிக்கும் இடம்:
பாக்ஸ் ஜெல்லி மீன்கள் இந்தோ பாசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்தின் வெதுவெதுப்பான நீரிலும் வாழ்கின்றன. ஹவாய் தீவை சுற்றியும், வளைகுடாக் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள வெதுவெதுப்பான கடலோர நீரிலும் வசிக்கின்றன.
அதிகரித்து வரும் பெட்டி ஜெல்லி மீன்கள்:
பெட்டி ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடல்கள் வெப்பமடைவதாலும் ஆக்சிஜன் குறைவதாலும் உரங்கள், ரசாயனங்கள், சாயக்கழிவு நீர் கடல் நீரில் கலப்பதாலும் இவை அதிகரித்து வருகிறது.
நவம்பரில் இருந்து ஏப்ரல் மாதம் வரை ஜெல்லி மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.