
விநாயகர் சதுர்த்தி என்றாலே கோவிலுக்குச் சென்று விநாயகரை வழிபட்டதும், அம்மாவிற்கு கொழுக்கட்டைகளை பிடித்துக் கொடுத்து உதவி செய்ததும், கொழுக்கட்டைகளை வயிறு முட்ட சாப்பிட்டதும், விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு இறுதியில் விநாயகரை நீர்நிலைகளில் கரைப்பதும் என்று இப்படி பல விஷயங்கள்தான் நமக்கு முதலில் தோன்றும்.
ஆனால், எனக்கு மேலே கூறிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம் நான் எனது நண்பர்களோடு சேர்ந்து களிமண்ணாலான சிறிய அளவிலான விநாயகர் சிலையை செய்து வீடு வீடாக விநாயகரை எடுத்துக்கொண்டு சென்றதுதான் முதலில் நினைவுக்கு வரும்.
விநாயகர் சதுர்த்தி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பண்டிகைக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்கிற அந்த ஆரவாரமும், ஐநா சபை பொதுக்கூட்டமும் எங்கள் நண்பர்களுக்குள் ஆரம்பித்து விடும்.
பண்டிகைக்கு முதல் நாள் பள்ளிக்கூடமே இருந்தாலும், விநாயகர் சிலையைச் செய்வதற்காக, நண்பர்கள் அனைவரும் ஒன்றாக லீவு போட்டுவிடுவோம்! முதலில் கட்டி கட்டியான பெரிய களிமண் கட்டிகளை தோளில் சுமந்துகொண்டு, என் வீட்டிற்கு பின்புறம் வந்து கட்டிகளை உடைத்து, களிமண்ணிலுள்ள கற்கள், தூசிகளை எடுத்துவிட்டு, களிமண்ணை மலைபோல் குவித்து வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி அனைத்து பேரும் இரண்டு கைகளைக் கொண்டு நன்கு குழப்பி எடுப்போம்.
அப்போது, கையைப் பார்த்தால் களிமண் பிடித்துப்போய் கருப்பாக இருக்கும். உருண்டை உருட்டும் அளவிற்கு களிமண்ணை பிசைந்து கொள்வோம். முதலில் ஒருவன் தலையை செய்வதற்காக களிமண் மாவை உருண்டையாக உருட்டுவான். அதேபோல், மற்றவர்கள் உடம்பு, கை, கால்கள், காதுகள், தும்பிக்கை என்று ஆர்வமாய் செய்ய ஆரம்பிப்போம்! உருண்டை வடிவமாக செய்த உடம்பிற்கு மேல் ஒரு தென்னங்குச்சியை சொருகி, குச்சியின் மேல் தலையானது உடம்போடு ஒட்டுமாறு சொருகுவோம். அதற்குப் பிறகு மாவில் பிசைந்து ஒழுங்கான வடிவமுள்ள தும்பிக்கை, கால்கள், கைகள், காதுகளை இணைப்போம்.
இரண்டு உளுந்தம் பருப்பை எடுத்து விநாயகருக்கு கண்ணிற்கு பதிலாக ஒட்டுவோம். கடைசியாக அனைவரின் கூட்டு முயற்சியால் அழகான குட்டி களிமண் பிள்ளையாரை செய்து முடிப்போம். அப்போது ஒருவரை ஒருவர் பார்க்கும்போது களிமண் கரையானது பனியன், டவுசர் எல்லாம் படிந்து காணப்படும். செய்த பிள்ளையாரை காலண்டர் அட்டையில் வைத்து, என் வீட்டு பூஜை அறைக்கு பக்கத்தில் வைத்துவிடுவோம்.
சட்டையில் படிந்துள்ள கரைக்காக அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை, வருடா வருடம் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் செய்வதை மட்டும் நானும் என் நண்பர்களும் கைவிட்டதில்லை!
மறுநாள் விநாயகர் சதுர்த்தியன்று, நானும் என் நண்பர்களும் விநாயகருக்கு தலையில் பூ வைத்து, நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு திலகமிட்டு, பிள்ளையாரை ஊர்வலமாக கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வோம். சிறிய தட்டில் சூடத்தை வைத்து விநாயகருக்கு காட்டிய தீபாராதனையை ஒவ்வொருவருக்கும் காட்டுவோம்.
அதேபோல் திருநீரையும் பிரசாதமாக வழங்குவோம். பிறகு சாமியை கும்பிட்டு அவரவர்கள் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று போடுவார்கள். ஒரு சில வீடுகளில் ஐம்பது ரூபாய் வரை கூட போட்டு இருக்கிறார்கள். இப்படியே ஊர் முழுவதும் ஊர்வலமாக சுற்றி முடித்து, விநாயகரை என் வீட்டிற்கு கொண்டு வந்து, வசூலான சில்லறைகளையும், பணங்களையும் எண்ண ஆரம்பிப்போம். ₹200, ₹300 என்று வசூலாகியிருக்கும்.
அந்த பணத்தை அனைவரும் சமமாக பிரித்துக் கொள்வோம். கடைசியில் சாயங்காலத்தில், விநாயகரை கரைக்க கிணற்றில் போடச் செல்வோம். வசூலான பணத்தில், கடைக்குச் சென்று பிடித்த தின்பண்டங்களை நண்பர்கள் அனைவரும் வாங்கி சந்தோஷமாக தின்போம்!
இப்படித்தான் எனது நண்பர்களோடு நான் சிறுவயதில் இருந்தபோது சந்தோஷமாக கழிந்தது இந்த விநாயகர் சதுர்த்தி! நீங்கள் சிறுவயதில் இருந்தபோது விநாயகர் சதுர்த்தி எப்படி போனது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!