
தமிழ்க்கடவுள் முருகந்தான்
அய்யமில்லை நமக்கெல்லாம்!
தம்பி தமிழின் நேசத்தை
விஞ்சியதோ விநாயகர்!
அன்று அவ்வைப் பாட்டிக்கு
அரிய நாவல் கனியினைத்
தந்து காத்த தெய்வமோ..
தமிழ்க்கடவுள் முருகந்தான்!
வயது முதிர்ந்த பேர்கள்மேல்
வாஞ்சை காட்டல் முதற்கடன்.
அதனால் தானே அறுமுகன்
அவ்வை தனக்கு உதவினான்?
கைலயமாம் பெரும்பதி
கண்டு தொழச் சென்றனர்;
காவலனாம் சேரனும்,
சுந்தரராம் கவிஞரும்!
இந்திரனின் தேரிலே
இருவர் ஏறிப் போகையில்
இனிய காட்சி ஒன்றினை
இந்த மண்ணில் கண்டனர்.
அந்த நேரம் அவ்வையும்
ஆனை முகனைத் தொழுதிட
வந்த இருவர் பாட்டியை
'வருக வேகம்!' என்றனர்.
பூஜை தன்னை வேகமாய்
பாட்டி முடிக்க நினைக்கையில்
அங்கு வந்த பிள்ளையார்
அவளிடத்துச் சொன்னது:
'பதற்றமின்றிப் பூஜையை
பாங்குடனே செய்குவாய்!
வியக்கும் வண்ணம் உனக்குநான்
விரைந்து அருளைப் பொழிகுவேன்!'
என்று சொல்லிப் பாட்டியை
எடுத்து இருவர் முன்னமே
கைலை இருவர் செல்லும்முன்
கைகக் தொழவே வைத்தனன்!
பாட்டி தனக்கு அருள்வதில்
அண்ணன் தம்பி இருவரும்
போட்டி போட்டி உதவிடும்
பெருமை வாழ்த்திப் போற்றுவோம்!
அமிழ்தத் தமிழின் நேசத்தில்
அன்பு காட்டும் தன்மையில்
அண்ணன் தம்பி இருவரும்
அணைகடந்த வெள்ளம்தான்!