ஒரு சமயம் தேவரிஷியான நாரதர் தம்மை விடவும் பக்தியில் மிஞ்சியவர் யாருமே கிடையாது என்று நினைத்து கர்வம் கொண்டார். எல்லாம் அறிந்தவராகிய பகவான் நாரதருடைய மனப்போக்கை அறிந்து அவரைத் திருத்தி நல்வழிப்படுத்த திருவுளம் கொண்டார். ஆகவே நாரதரிடம் அவர், “நாரதரே! இன்ன இடத்தில் என் பக்தனாகிய ஒரு வன் வாழ்ந்து வருகிறான். அவனிடம் சென்று உறவாடி நட்புக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
பகவான் சொன்னபடியே நாரதர் அந்த இடத்திற்கு சென்றார். அங்கே ஒரு குடியானவன் இருப்பதைப் பார்த்தார்.
குடியானவன் அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது, ‘ஸ்ரீ ஹரி' என்று பகவானுடைய பெயரை ஒருமுறை சொன்னான். பிறகு கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குபோய் நாள் முழுவதும் உழுதான். கடமை தவறாது ஒவ்வொரு வேலையையும் செய்து முடித்துவிட்டு மிகவும் களைப்பாக மாலை சாய்ந்தபோது வீடு திரும்பினான். இரவு அவன் படுக்கைக்கு போகும்போது மீண்டும் ஒருமுறை “ஸ்ரீ ஹரி” என்று பகவானின் பெயரைச் சொன்னான்.
நாரதர் அவனுடைய வாழ்க்கையை ஒரு நாள் முழுவதும் இருந்து கவனித்தார். பிறகு அவர், “இந்த பட்டிக் காட்டான் எப்படி பக்திமானாக இருக்கமுடியும்? நாள் முழுவதும் அவன் தன் உலகக் காரியங்களையே கவனித்து கொண்டிருக்கிறான். பெரிய பக்திமான் என்பதற்கு உரிய எந்த அடையாளமும் இவனிடம் காணப்படவில்லையே! இவனை எப்படி பக்தன் என்று சொல்ல முடியும்?” என்று தமக்குத் தாமே நினைத்து கொண்டார்.
பிறகு நாரதர் பரந்தாமனிடம் திரும்பிச் சென்று குடியானவன் பற்றிய தமது அபிப்பிராயத்தைச் சொன்னார்.
நாரதர் தமது கருத்தைச் சொன்னதும் பகவான் அவரிடம், “நாரதரே! எண்ணெய் நிரம்பியுள்ள இந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்த பட்டணத்தை ஒருமுறை சுற்றி விட்டு வாருங்கள். ஆனால் ஒரே ஒரு துளி எண்ணெய் கூடக் கீழே சிந்தி விடாமல் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சொல்லி நாரதரை அனுப்பி வைத்தார்.
நாரதர் பகவான் சொன்னபடியே ஒரு துளி எண்ணெய் கூடக் கீழே சிந்தி விடாமல் பட்டணத்தை சுற்றி வந்தார். . பின்னர் பகவானிடம் வந்தார். பகவான் நாரதரிடம், “நாரதரே! ஊரைச் சுற்றி வரும்போது தாங்கள் எத்தனை முறை என்னை நினைத்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு நாரதர், “பிரபோ, ஒரே ஒருமுறை கூட நினைக்க வில்லை, கிண்ணத்தில் இருந்த எண்ணெய் சிந்தி விடக்கூடாது என்பதற்காக நான் கவனமாக இருக்கும் போது, எப்படி உங்களை நினைக்க முடியும்? அப்போது எனக்கு வேறு எந்த ஞாபகமும் வரவில்லை” என்று நாரதர் பதில் சொன்னார்.
அதற்கு பகவான், “நல்லது நாரதரே, இந்த ஒரு கிண்ணத்தில் உங்கள் கவனம் பதிந்ததினால், என்னை அடியோடு முற்றிலும் மறந்து போய்விட்டீர்கள். ஆனால் அந்த குடியானவனைப் பாரும். பாரமான தன் குடும்ப சுமையை தாங்கி கொண்டிருந்தாலும், தினந்தோறும் தவறாமல் இரண்டு முறை என்னை அவன் நினைக்கிறான்” என்று கூறி யருளினார். நாரதரும் தன் கர்வத்தை நினைத்து மனம் வருந்தினார்.