

டெலஸ்கோப்பை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், ஹப்பிள் டெலஸ்கோப் (Hubble telescope) பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?
ஹப்பிள் என்பது 1990-இல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவினால் பூமியிலிருந்து 340 மைல்கள் உயரத்தில், வானில் மிதக்க விடப்பட்ட ஒரு ராட்சச டெலஸ்கோப்பாகும். இதை நாசா, விண்ணுக்கும் மண்ணுக்கும் சென்று வரும் டிஸ்கவரி என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலைநிறுத்தியது.
இதனை ஒரு பெரிய ஸ்கூல் பஸ்ஸிற்கு ஒப்பிடலாம்.
இது மணிக்கு 17,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
இதன் வேலை, நமது சூரிய மண்டலத்தையும், அதை தன்னுள் அடக்கிய பிரபஞ்சத்தையும் தெளிவாக படம் எடுத்து ஆராய்வதாகும்.
பூமியில் பெரிய பெரிய டெலஸ்கோப்புகள் இருக்க, விண்வெளியில் ஒரு டெலஸ்கோப் தேவையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி நீங்கள் கேட்கும் பட்சத்தில் இது தான் பதில்:
என்னதான் சக்தி உள்ளதாக இருந்தாலும், பூமியில் இருக்கும் டெலஸ்கோப்புகளால் மிகத் தெளிவாக கோள்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் படம் எடுக்க முடியாது. காரணம், பூமியின் வளிமண்டலம் (Atmosphere) அப்படி எடுக்கப்படும் படங்களைச் சற்று மங்கலாக்கி விடும். இது தவிர்க்க முடியாத ஒன்று.
விண்வெளியில் இயங்கும் இந்த ஹப்பிள் டெலஸ்கோப், பூமியின் வளிமண்டலதிற்கு வெளியே இருப்பதால், அதன் மூலம் விண்ணுலகைத் துல்லியமாகப் பார்க்கவும், படம் எடுக்கவும் முடியும். இந்த ஹப்பிள் மூலம் உயர் தீர்மான (அதாவது, High Resolution) படங்களை புறஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி அசத்தலாக எடுத்து ஆராய முடியும்.
இந்த டெலஸ்கோப் தாங்கிய செயற்கைக்கோளுக்கு பூமியிலிருந்து விண்வெளி வீரர்கள் அப்போதைக்கப்போது சென்று பராமரிப்பு மற்றும் சீர் செய்து வருகிறார்கள்.
இந்த ஹப்பிள் டெலஸ்கோப் வானியல் ஆராய்ச்சியை வெகு தூரத்திற்கு முன்னேற்றி விட்டது என்று சொல்லலாம். முன்பைவிட, வெகு தூரத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களையும், கிரகங்களையும் பற்றி இந்த டெலஸ்கோப் மூலம் நாம் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த டெலஸ்கோப்பிற்கு ஹப்பிள் என்ற பெயர் வரக் காரணம், இதைக் கண்டுபிடித்து அமைத்தவர் எட்வின் பவல் ஹப்பிள் (Edwin Powell Hubble) என்ற விண்வெளி விஞ்ஞானியே ஆவார்.