

குழந்தைகளே!
ஐ.எஸ்.டி (Indian standard time) என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனால், அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரிந்து இருக்காது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எந்த ஒரு வேலையும் குறிப்பிட்ட சமயத்திற்குள் செய்து முடிப்பதற்கு நேரம் அவசியம். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு, அலுவலகத்திற்கு பெரியவர்கள் செல்வதற்கு, எல்லா விதமான பணிகளையும் செய்து முடிப்பதற்கு நேரம் தான் முக்கியம். எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதற்கும் கணக்கீடு வைத்துக் கொள்வதற்கு நேரம் அவசியமாகும். அப்படி நேரத்தோட உழைத்தால்தான் அதற்கான கூலியை சரிவர தர முடியும். இத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் இருந்தால் தான் அனைவரும் அத்தனை மணி நேரம் வேலை செய்வார்கள். எல்லா வேலைகளையும் அவரவரும் ஒழுங்காகச் செய்து முடிப்பதற்கு நேரம் தான் சரியான வழிகாட்டி.
ஐ.எஸ்.டி IST என்பது இந்தியாவின் பொதுவான நேரத்தைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் இது இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் என்று கூறப்படுகிறது. அதன் சுருக்கமே ஐ.எஸ்.டி என்பதாகும்.
பூமி சுழல்வதால் சூரிய உதயமும், அஸ்தமனமும் ஏற்படுகின்றன. சூரியன் நம் தலை உச்சிக்கு நேராக வரும் பொழுது உச்சிப் பொழுது. அதாவது பகல் 12 மணி என்று கூறுகிறோம். ஆனால், இந்தியாவில் கிழக்கே உள்ள பகுதிகளில் உச்சிப் பொழுது வந்த கொஞ்சம் அல்லது நீண்ட நேரத்துக்கு பிறகு தான் மேலே உள்ள பகுதிகளில் உச்சிப் பொழுது ஏற்படுகிறது. இது பூமி சுழல்வதால் ஏற்படும் மாற்றம்.
இந்தியாவின் கிழக்குக் கோடியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான கார்நிகோபார் தீவில் புவியியல் படி பகல் 12 மணி ஆகி சுமார் 100 நிமிடங்களுக்குப் பிறகு தான் மேற்கு ஓரத்தில் உள்ள குஜராத்தின் துவாரகா நகரில் 12 மணி ஆகும். ஆக, பகல் 12 மணி என்பது ஊரின் பன்னிரண்டு மணி என்று சொல்கிறோம்.
ஆனால், நமது அன்றாட அலுவல்களுக்கு, அரசின் காரியங்களுக்கு, வானொலி ஒளிபரப்பு, டிவி ஒளிபரப்பு, ரயில், பஸ், விமான பயணநேரம் இப்படியான பலவற்றுக்கு அந்தந்த ஊர்களின் 12 மணியைப் பயன்படுத்த முடியாது.
இதனால் தான் இந்தியா 82.5° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் மேலாக சூரியன் இருக்கும் போது உள்ள நேரம் இந்தியா மொத்தத்துக்கும் 12 மணி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழப்பத்தைத் தவிர்க்கக் கருதி இப்படி இந்தியாவில் பொதுநேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
என்ன குட்டீஸ் இப்பொழுது ஐ.எஸ்.டி என்றால் என்னவென்று நன்றாக புரிந்திருக்கிறது இல்லையா?