
மார்ஷ்மெல்லோஸ் பஞ்சு போன்று மிருதுவாகவும், இனிப்பு சுவையும் கொண்ட பாரம்பரிய மிட்டாய் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இனிப்புதான் இந்த மார்ஷ்மெல்லோஸ்.
மார்ஷ்மெல்லோஸ் முதன்முதலில் எகிப்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மார்ஷ்மெல்லோவின் வரலாற்றில் மல்லோ செடியின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களால் முதன்முதலில் இந்தச் செடியின் வேர், சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைய எகிப்தியர்கள் மார்ஷ்மெல்லோஸ் செய்ய மல்லோ செடியின் வேர்த் துண்டுகளை தேனுடன் வேகவைத்து அதனை கடவுள்களுக்குப் படைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின், 1800 களில் பிரெஞ்சுக்காரர்கள் இந்த செடியின் பயன்பாட்டை, குறிப்பாக, மருந்து பயன்பாட்டிலிருந்து பெரியவர்கள் உண்ணும் மிட்டாய்களாக மாற்றினர். இங்குதான், தற்போது நாம் அறிந்திருக்கும் மார்ஷ்மெல்லோ பிறந்ததாக கருதப்படுகிறது. மார்ஷ்மெல்லோ சாறை முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கார்ன் சிரப் சேர்த்து சமைக்கும் முறையை பிரெஞ்சு கடை உரிமையாளர்கள் கண்டுபிடித்தனர். மருத்துவர்கள் இதனை மருந்து மிட்டாய்களாகவும் பரிந்துரைத்துள்ளனர்.
1800 களின் நடுப்பகுதி வரை, மார்ஷ்மெல்லோ மிட்டாய் மல்லோ தாவரத்தின் சாறைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.
ஆனால், நவீன மார்ஷ்மெல்லோ சர்க்கரை, பிரக்டோஸ் அல்லது குளுக்கோஸ் சிரப், கார்ன் சிரப், தண்ணீர் மற்றும் ஜெலட்டின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இது பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கேம்ப் ஃபயரின் போது, முக்கியத்துவம் பெறுகிறது. வறுக்கப்பட்ட மார்ஷ்மெல்லோ மிட்டாய்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு முதன்முதலில் வித்திட்டது அமெரிக்கா. எனவே, இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தேசிய வறுக்கப்பட்ட மார்ஷ்மெல்லோ தினமாகக் (National Toasted Marshmallow Day) கொண்டாடப்படுகிறது.
மிட்டாய் மட்டுமில்லாமல், மார்ஷ்மெல்லோ சாண்ட்விச்கள் முதல் மார்ஷ்மெல்லோ கேக்குகள் வரை விதவிதமான இனிப்புகள் மார்ஷ்மல்லோவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
மார்ஷ்மெல்லோவில் தானிய மார்ஷ்மல்லோ (cereal treat marshmallows), மார்ஷ்மெல்லோ ஃபட்ஜ் (marshmallow fudge) மற்றும் சைவ மார்ஷ்மெல்லோக்கள் (vegetarian marshmallows) எனப் பல வகைகள் உள்ளன.
லிகோனியர், உலகின் மார்ஷ்மெல்லோ தலைநகரமாக விளங்குகிறது. இது அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இங்கு மார்ஷ்மெல்லோ உற்பத்தி மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. ஆகையால், இந்நகரில் ஆண்டுதோறும் மார்ஷ்மெல்லோ திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.