

குழந்தைகளுக்கு காக்கா, குருவி, கிளி, குயில், மயில், புறா, கொக்கு, வாத்து என முக்கால்வாசிப் பறவைகளைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால், ஆந்தைகளைப் பற்றித் தெரியுமா என்று கேட்டால், ஆந்தை போல முழிக்கத்தான் செய்வார்கள். காரணம், ஆந்தைகள் பொதுவாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தான் புழங்குகின்றன. ஆந்தைகளைப் பற்றிக் குழந்தைகள் அறிவதற்கு நிறைய அசத்தலான விஷயங்கள் உள்ளன.
ஆந்தை என்றால் நம் கண்முன்னால் முதலில் வருவது அதன் பெரிய வட்ட வடிவக் கண்கள் தான். ஆந்தைக்கு இருக்கும் பெரிய கண்கள்தான் சிறந்த பைனாகுலர்கள். அவற்றின் தீட்சண்யம் அதாவது பார்வை சக்தி, மனிதரின் கண்களின் பார்வை சக்தியைவிட ஐம்பது மடங்கு அதிகம் என்று கணித்திருக்கிறார்கள். அதற்கு இருக்கும் நைட் விஷன் அபாரமானதாகும்.
நூறடி தூரத்தில் ஒரு சுண்டெலியைத் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை ஆந்தையின் கண்கள். ஆந்தையின் கண்கள் பக்கவாட்டிலும் மேலும் கீழும் நம் கண்களைப் போல அசையாது. இதன் காரணமாக அதன் கழுத்தை 270 டிகிரி கலங்கரை விளக்கம் போலச் சுற்றும் படி கடவுள் படைத்துள்ளார். ஆந்தைக்குக் கிட்டே இருக்கும் பொருட்கள் மங்கலாகத்தான் தெரியுமாம்.
எல்லா ஜீவன்களும் இரையை அல்லது உணவை மென்று தின்கிறது. ஆனால், ஆந்தையால் அது முடியாது. இரையைத் துண்டு துண்டாய் அப்படியே விழுங்கிப் பின் வேண்டாத, ஜீரணிக்க முடியாத எலும்பு போன்றவற்றை வாய் வழியே துப்பி விடும். இப்படித் துப்பப்பட்ட கழிவுகளை அவை வாழும் கூடுகளின் கீழே பார்க்கலாம்.
மற்ற பறவைகள் பறக்கும் போது அவற்றின் இறக்கைகள் ஒவ்வொரு விதமாகச் சத்தம் ஏற்படுத்தும். ஆனால், ஆந்தை பறக்கும் போது துளிக் கூட சத்தம் வராது. இதன் சிறகுகள் சீப்பு போல இருப்பதால் காற்றுக்கு வழிவிட்டுச் சத்தம் ஏற்படாமல் செய்து விடும். சைலன்சர் பொருத்திய என்ஜின் போல இதன் இறக்கைகள் செயல்படுவதால் ஆந்தை வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.
ஆந்தை ஒரு வண்ணப் பறவை இல்லை. அதன் இறகுகளின் நிறம் வெறும் சாம்பல் தான். ஆனால், ஆந்தைகள் பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் ஒரு கருப்பு வெள்ளை பறவை தான். சந்தேகமே இல்லை. பத்தோடு பதினொன்று என்று சொல்லக்கூடிய பறவை இல்லை இது. ஆந்தை ஆயிரத்தில் ஒரு பறவை என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு தனிப்பிறவிப் பறவை.
ஆந்தை ஒரு அப்பாவிப் பறவை. அமானுஷ்யத்திற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அப்படி நினைத்தால் அது அனாவசியம்.