
ஊரின் சாலை ஓரத்தில்,
உயர்ந்த பாம்புப் புற்றொன்றில்,
கரிய நாகப் பாம்பொன்று,
கொத்தி வந்ததாம் மக்களை!
போவோர் வருவோர் யாவரும்,
போக வரவே அஞ்சினர்.
சாவைக் கொடுக்கும் பாம்பினை,
சாகடிக்க எண்ணினர்.
கொல்லும் முன்னர் ஊரிலே,
உள்ள ஞானி ஒருவரைக்,
கலந்து பேசிக் கேட்டிட,
கருதி அவரை அணுகினர்.
‘கொல்ல வேண்டாம் பாம்பினை!
நல்ல புத்தி அதற்குமே!
நானே சொல்வேன்!’ என்றந்த,
ஞானி பாம்பை அணுகியே...
‘தீது செய்தல் பாவமே!
தீண்ட வேண்டாம்! யாரையும்,
நீதிப் படிநீ வாழென!’
நெருங்கிச் சொல்லித் திரும்பினார்.
அன்று முதல் நாகமும்,
அண்டவில்லை யாரையும்.
தீண்டிடாது அமைதியாய்,
தெருவில் ஒதுங்கிக் கிடந்தது!
போவோர் வருவோர் யாவரும்,
பாம்பு தீண்டாச் செய்கையால்,
அச்சம் நீங்கிப் போனதால்,
அதனைத் தாக்கி வந்தனர்.
ஞானி தானும் அவ்வழி,
நடந்து வந்த போதிலே,
மேனி எங்கும் காயத்தால்,
மெலிந்து வதங்கி இருந்தது!
‘என்ன ஆச்சு உனக்கென?’
ஞானி கேட்க, பாம்புமே,
‘தீண்ட வேண்டாம்!’ என்றீர்நீர்!
தீமை எனக்கு வந்தது!’
என்று வருந்திக் கதறிட,
‘நன்று நீயும் நடந்தது...
ஞானம் சிறிதும் இல்லையோ?!
தீண்ட வேண்டாம்! என்றுதான்,
உனக்குச் சொன்னேன் அன்றுநான்.
‘சீற வேண்டாம்!’ என்றுனக்குச்,
செப்பவில்லை! அல்லவோ?!’
“சீறுவோர் சீறுதல் சிறுமைஅல்ல!
என்றன்று செந்தமிழில் பாரதி,
செப்பியதை நீயுமே,
சிந்தனையிலே கொள்!”ளென்றார்!
அன்று முதல் பாம்புமே,
தீண்டவில்லை யாரையும்.
சென்றருகே நின்றிடில்,
சீறி விரட்டி வந்ததாம்!