

குரங்குகளை நீங்கள் அடிக்கடி பார்ப்பீர்கள். வீதிகளில் அலையும்; மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மரங்களில் தாவி தாவி செல்லும் அழகை ரசிப்பீர்கள். குற்றாலம் போன்ற ஊர்களில் அருவியில் குளிக்க செல்லும் பொழுது அங்கு நம்முடன் அதுவும் கூடவே நடக்கும் அழகையும் ரசித்துப் பார்ப்போம்.
குரங்குகள் பொதுவாக ஒரு பாலூட்டி விலங்காகும். வாலோட நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்கு வரை குரங்குகளில் பல வகைகள் இருக்கின்றன. குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.
நிறைய குரங்குகள் இருந்தாலும், 'மர்மோசெட்' என்ற குரங்குக்கு மட்டும் தனி மரியாதை தான். ஏனென்றால், இதுதான் உலகின் குட்டி குரங்கு; அதுவும் அரிய வகை குரங்கு. தென் அமெரிக்கா கண்டத்தில் தான் இந்த குரங்குகள் காணப்படுகின்றன. இந்த குட்டி குரங்குகள் சாவிக்கொத்து போல உள்ளங்கையில் அடங்கி விடுகின்றன. இந்த குரங்குகள் அதிகபட்சமே 20 சென்டிமீட்டர் உயரம் தான் வளருமாம்.
இப்பொழுது ஒரு குட்டி குரங்கை பற்றி சுவாரசியமான தகவல்களை கூறுகிறேன். ஜப்பான் மக்காக்கு பழுப்பு சாம்பல் ரோமங்கள், சிவப்பு முகம் மற்றும் பிட்டம் மற்றும் ஒரு குறுகிய வால் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது ஜப்பானிய தீவுக் கூட்டத்தில் வடக்கு ஹொக்கைடோவைத் தவிர, அனைத்து தீவுகளிலும் வாழ்கிறது.
ஜப்பானிய மக்காக்கு பனி குரங்கு என்று அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் அவை பனிக் குரங்குகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
தாயால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பொம்மையை தனது உலகமாக கருதி தழுவிக் கொள்ளும் ஜப்பான் குட்டி குரங்கு தான் இப்பொழுது பிரபலமாகியுள்ளது.
ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் அந்த குரங்கு பிறந்த சில நாளிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது. குரங்கு இனத்தைப் பொறுத்தவரை தாயின் அரவணைப்பு என்பது குட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மனநலத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அன்பு கிடைக்காததால் பூங்கா ஊழியர்களே இந்த குரங்கை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
பஞ்ச் குன் மற்ற குட்டி குரங்குகளுடன் விளையாட முயற்சிப்பதும், ஆனால், அவை தவிர்ப்பதும் இதயத்தை உருக்குகிறது. ஒரு கட்டத்தில் மற்றொரு குட்டியுடன் பேச முயன்ற பஞ்ச் குன்னை அந்த குட்டியின் தாய் குரங்கு ஆக்ரோஷமாக இழுத்துச் சென்று கண்டித்து உள்ளது.
இவ்வாறு மற்ற குரங்குகளால் தொடர்ந்து விரட்டப்படும் பஞ்ச் குன் ஓடிப் போய் தனது ஒரே ஆறுதலான ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையை கட்டியணைத்துக் கொள்கிறது.
அந்த ஆரஞ்சு நிற ஓராங்குட்டான் பொம்மையை பஞ்ச் குட்டியிடம் கொடுத்துள்ளார்கள். ஓரா- மாமா என்று பெயரிடப்பட்ட அந்த பொம்மையை தன் தாயாக பஞ்ச் நினைத்துக் கொண்டது. அந்த பொம்மையை இறுக கட்டிப்பிடிப்பதும் பயப்படும் போது அதன் மடியில் முகம் புதைப்பதும் என பஞ்ச் அந்த பொம்மையுடனேயே தன் உலகத்தை சுருக்கிக் கொண்டு உள்ளது.
எங்கு சென்றாலும் அதை விடாமல் தன்னோடு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்ச் குன் மிகவும் மன உறுதி கொண்டது. எவ்வளவு முறை விரட்டப்பட்டாலும் சிறிது நேரத்திலேயே பொம்மையை வைத்துவிட்டு மீண்டும் மற்ற குரங்குகளுடன் பழக துணிச்சலுடன் முயற்சி செய்கிறது. பஞ்ச் குன் மீது பரிதாபப்படுவதை விட ஒரு பெரிய கூட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள அந்த குரங்கு எடுக்கும் வீரமான முயற்சியை நாம் ஆதரித்து பாராட்ட வேண்டும்.
உறவுகளால் காயப்பட்டாலும் ஒரு பொம்மையின் துணையோடு மீண்டும் மீண்டும் முயலும் பஞ்ச் குன்னின் தன்னம்பிக்கை மனிதர்களாகிய நமக்கும் ஒரு சிறந்த பாடம் தானே..!
என்ன குட்டீஸ்களா? பஞ்ச் குன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா.. ஜப்பான் போனால் தான் பார்க்க முடியும். இப்போதைக்கு கல்கி ஆன்லைனில் பாருங்கள்!