ஆபிரகாம் லிங்கன் ஏன் தாடி வளர்த்தார்? பின்னணியில் இருக்கும் ஒரு குட்டிப் பெண்!

Abraham lincoln andgrace bedell
Abraham lincoln and grace bedell Img credit: AI Image
Published on

அந்தச் சிறுமியின் பெயர் கிரேஸ் பெடல். இவளுக்கு வயது பதினொன்றே ஆகியிருந்தது. நியூயார்க்கைச் சேர்ந்த வெஸ்டு பீல்டு என்ற ஊரில் அவள் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். இவளது தந்தையார் புகைப்படம் ஒன்றை கொண்டு வந்து இவள் கையில் கொடுத்தார்.

கிரேஸ் பார்த்த முதல் புகைப்படமே இதுதான். படத்தில் லிங்கன் காய்ந்து வறண்ட முகத்தோடு காணப்பட்டார். அவரது தோற்றம் மிகவும் மெலிந்து தெரிந்தது. கிரேஸ்க்கு லிங்கன் மீது இரக்கம் தோன்றியது. 'பாவம் எவ்வளவு ஒல்லியான மனிதர்'.

அப்போது லிங்கன் ஜனாதிபதி தேர்தலுக்கு நின்றிருந்தார். ஊர்கள்தோறும் சென்று தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருந்தார். தேர்தலில் லிங்கன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கிரேஸ்க்கு. ஆனால், இவ்வளவு மெலிந்து ஒல்லியான மனிதருக்கு மக்கள் தங்கள் வாக்கை அளிப்பார்களா? இப்படி ஒரு ஐயம் அவர்களுக்கு ஏற்பட்டது. 'அவர் தாடி வளர்த்துக் கொண்டால், அந்த முகம் கொஞ்சம் அழகாக இருக்குமே' என்று அவளுக்குப் பட்டது. 

தனது இந்த கருத்தை அவரிடம் யார் சொல்லப்போகிறார்கள். நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதுவது என கிரேசி தீர்மானித்தாள். அவ்வாறே அவள் லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதவும் செய்தாள். அதில் அவள்,

"மதிப்பிற்குரிய பெரியீர்! நான் பதினோரு வயதுடைய ஒரு சிறுமி. தங்களுக்கு மிகத் துணிச்சலாக கடிதம் எழுதும் என்னை தவறாக கருத மாட்டீர்கள் என எண்ணுகிறேன். என்னைப் போன்ற பெண்கள் தங்களுக்கு இருந்தால் அவர்களுக்கு என் அன்பை தெரிவியுங்கள். எனக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர்.  தேர்தலில் அவர்களை தங்களுக்கே வாக்களிக்கும் படி செய்வேன்.

இதையும் படியுங்கள்:
இந்தியக்கடலோர காவல்படை பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்?
Abraham lincoln andgrace bedell

இன்னொன்று தங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். தங்கள் முகத்துக்கு தாடி வளர்த்துக் கொண்டால், நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அப்போது தங்கள் முகம் அழகு பொருந்தியும் பெருமிதம் நிரம்பியும் விளங்கும். பெண்கள் அனைவரும் தங்களுக்கே வாக்களிப்பார்கள். அவர்கள் தம் தம் கணவன்மார்களையும் தங்களுக்கே வாக்களிக்க வைப்பார்கள்.

பின்னர், நீங்களே இந்த நாட்டின் தலைவர். இந்த கடிதத்துக்கு தாங்கள் பதில் எழுதப் பொழுது இல்லை என்றால் தங்கள் குழந்தையை கொண்டாவது பதில் எழுதச் சொல்லுங்கள்,"

என தெரிவித்திருந்தாள்.

இந்த கடிதம் லிங்கனின் அந்தரங்க காரியதரிசிகளிடம் வந்து சேர்ந்தது. பிரித்துப் பார்த்து அவர்கள் தேர்தல் வெற்றிக்கு சிறு பெண்களும் ஆலோசனை சொல்லத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லி நையாண்டி செய்தார்கள்.

அந்த கடிதத்தை குப்பைத் தொட்டியில் போட இருந்த வேளையில் எதிர்பாராத நிலையில் அங்கே வந்து லிங்கனின் கையில் அந்த கடிதம் கிடைத்தது. கடிதத்தை பார்த்து அவர் கிரேசிக்கு தம் கைப்படவே பதிலும் அனுப்பினார்.

பின்னர் தேர்தலில் மிகுந்த வாக்குகளோடு லிங்கன் வெற்றி பெற்றார். எனவே அவர் தலை நகரான வாஷிங்டனுக்கு விரைந்து கொண்டு இருந்தார். வெஸ்டு பீல்டில் வண்டி நிற்கும் என்ற செய்தி திடீரென வந்தது. வெஸ்ட் பீல்டு மக்கள் தங்கள் தலைவரை ஸ்டேஷனில் வந்து பெருந்திரளாக கூடியிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பாம்பை ஏமாற்றிய தவளைகள்!
Abraham lincoln andgrace bedell

கிரேஸ் பெடலும் தனது பெற்றோருடன் லிங்கனை பார்க்க அங்கே வந்திருந்தாள். தமது வெற்றிக்கு ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் லிங்கன். குறிப்பாக, பெண்களிடம் தமக்குள்ள ஆழ்ந்த நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் கூட்டத்தில் இந்த ஊரில் உள்ள சிறுமி ஒருத்தி எனக்கு கடிதம் எழுதி இருந்தாள். எனது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கு அவளே காரணம். அவள் இங்கே வந்திருந்தால் என் பக்கம் வரலாம் என்று அழைத்தார்.

"அவள் பெயர் என்ன?" என கூட்டத்தினர் ஆரவாரத்தோடு கேட்டார்கள்.

"கிரேஸ் பெடல்" என்றார் லிங்கன். தனது புதல்வியை லிங்கன் பக்கமாக அழைத்துச் சென்றார் கிரேஸ் பெட்லின் தந்தை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய அந்த கூட்டத்தில் தந்தையும் மகளும் லிங்கன் பக்கம் சென்றனர். அனைவரும் அவர்கள் மீது பார்வையைச் செலுத்தினர்.

லிங்கன் கிரேஸியை அன்புடன் வாரி எடுத்து முத்தங்கள் கொடுத்தார். "எனது புதிய தோற்றத்திற்கு இந்தச் சிறுமியே காரணம்" என்றும், அந்தக் கூட்டத்தினரிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தார். அனைவரிடமும் நன்றி உணர்ச்சியுடன் விடைபெற்று, வாஷிங்டன் பயணப்பட்டார். 

(ஸ்பிரிங் பீல்டிலுள்ள ஆபிரகாம் லிங்கன் இல்லத்தில் காணப்படும் ஒரு அறையில் இன்றும் கிரேஸியின் கடிதத்தை பார்க்கலாம்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com