
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இருநூறு வகையான குரங்குகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அளவில் மிகச்சிறிய பிக்மி மார்மோசெட் முதல் மிக அதிகமான எடை உடைய மாண்ட்ரில் வரை வகைகள் அடங்கும். இப்படியாக பலவகையான குரங்கு இனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பதிவில் நாம் மிகச்சிறிய குரங்காகக் கருதப்படும் பிக்மி மார்மோசெட் என்ற குரங்கைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
விரல் குரங்கு (Finger Monkey) என அழைக்கப்படும் பிக்மி மார்மோசெட் குரங்கு இனத்தில் மிகச்சிறிய உயிரினமாகக் கருதப்படுகிறது. தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் மழைக்காடுகளைத் தங்கள் பூர்விகமாகக் கொண்டவை. மேலும் இவை பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் பொலிவியாவில் காணப்படுகின்றன.
'மார்மோசெட்' என்ற வார்த்தை 'மார்மவுசெட்' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது. 'குள்ளமான' என்பது இதன் பொருள். இவை மிகவும் சுறுசுறுப்பான விலங்காகும். தங்கள் தலையை 180 டிகிரி வரை சுழற்றும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை மரக்கிளைகளில் மிகச்சிறிய துளைகளை உருவாக்கி அதில் ஒளிந்து கொண்டு எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுகின்றன.
பிக்மி மார்மோசெட் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும் வேகமாக தாவி ஓடும் ஆற்றலைப் பெற்றுள்ளது. மணிக்கு நாற்பது கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இவை ஐந்து முதல் ஆறு அங்குல அளவிற்கே வளர்கின்றன. இவற்றின் எடை அதிகபட்சமாக நூறு கிராம்களாகும்.
பிக்மி மார்மோசெட் பழுப்பு நிற ரோமங்களையும், அணிலுக்கு இருப்பதைப் போன்ற அடர்த்தியான மற்றும் நீளமான வாலையும் கொண்டுள்ளது. இதன் வால் கருப்பு வளையங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இவற்றின் வாலானது உடலை விட நீளமாகக் காணப்படுகிறது. வாலானது கிளைகளில் தாவும்போது தங்கள் உடலை சமநிலைப்படுத்திக் கொள்ள உதவுகிறது. பொதுவாக பிக்மி மார்மோசெட்டின் நடவடிக்கைகள் அணிலைப் போலவே உள்ளன. இவை இரண்டு முதல் ஒன்பது எண்ணிக்கையில் குழுக்களாக வாழும் இயல்புடையவை.
பிக்மி மார்மோசெட்கள் பசை உண்ணிகளாகும். அதாவது மரச்சாறே இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவாகும். தங்கள் கூர்மையான கீழ் கோரைப் பற்களின் உதவியோடு மரப்பட்டைகளைத் துளைத்து மரச்சாற்றை உறிஞ்சிப் பெறுகின்றன. எனினும் காய்கள், இலைகள், தேன், பூச்சிகள் முதலானவற்றையும் அவ்வப்போது சாப்பிடுகின்றன.
பிக்மி மார்மோசெட்கள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை வயிற்றில் குட்டிகளைச் சுமந்து ஈனுகின்றன. ஒரு சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளை ஆண் பிக்மி தனது முதுகில் சுமந்து செல்லும். பிக்மி மார்மோசெட் குரங்குகள் பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.