

‘கேடில் விழுச் செல்வம் கல்வி’ என்று தெய்வப் புலவரால் சிறப்பிக்கப்படும் கல்வி, சாதாரணமானதல்ல! கடைநிலையில் இருப்போரையும் முதல் நிலைக்குக் கொண்டு வந்து, முடி சூட வைக்கும் முத்தான சாதனம் அது! அதனால்தான் குட்டீஸ்! இளமையிலேயே அதனை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்பொழுதுதானே வாழ்நாள் முழுவதும் வளம் பெற்று வாழ முடியும்!
கல்விக்குப் பல பரிமாணங்கள் உண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் தானே! அதில் முக்கியப் பரிமாணம் சுருக்கமும், விரிவாக்கமும் என்பது உங்களுக்கும் தெரியுந்தானே!
ஒரு கேள்வி 2 மார்க் பகுதியில் வந்தால், விடை சுருக்கமாக, இரண்டு மூன்று வரிகளில் அமைய வேண்டும். அதே வினா 5 மார்க் பகுதியில் வருகையில், உங்கள் விடை ஐந்தாறு வரிகளில் சற்றே விரிவாக அமைய வேண்டும். அந்தக் கேள்வியே 10 மார்க் பகுதியில் வருமானால், நீங்கள் விரிவான பதிலை, ஒரு பக்க அளவிலாவது எழுதியாக வேண்டும்.
இது ஏதோ பரீட்சைக்கு மட்டும் என்று எண்ணி விடாதீர்கள். வாழ்க்கை பாடமும் இதில் அடங்கி இருக்கிறது. பிரச்னை ஒன்றாகவே இருந்தாலும்கூட, சமய, சந்தர்ப்பங்களைப் பொறுத்து, அதை உடனடியாகவும் தீர்க்கலாம். தேவைப்படின் சற்றே இழுக்கலாம். ஆறப்போட்டுத்தான் முடிவெடுக்க வேண்டுமானால் 10 மார்க் பக்கம் தள்ளி விட்டு விடலாம்.
அணுகும் முறையில்தான் சூட்சுமம் இருக்கிறது. அதற்குத்தான் நம் அறிவு தேவைப்படுகிறது. அதற்கு ஆதாரமாக இருப்பது நம் கல்வி ஒன்றுதான்!
இலக்கியத்திலும், இதிகாசத்திலும் ஆர்வங்கொண்ட அந்த மன்னனுக்குத் திடீரென ஓர் ஆசை வந்து விட்டதாம்! தன் அரசவையில் புலவர்களைக் கூட்டி, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாராம். நக்கீரர், தருமி போன்ற பலநிலைப் புலவர்களும் ஒன்று கூடி விட்டார்களாம். மன்னர் மகிழ்வுடன் போட்டியை அறிவிக்கச் செய்கிறார்.
ஆஸ்தானப் புலவர் அறிவிக்கிறார். “உங்கள் அனைவருக்கும் கையில் ஓர் எலுமிச்சம் பழம் தரப்படும். அந்தப் பழத்தை மேலே தூக்கிப் போட்டு விட்டு, அதை மீண்டும் பிடிக்கும் முன்னால் இராமாயணத்தைச் சொல்லி முடிக்க வேண்டும். இதுதான் போட்டி! உங்களின் சுருக்கும் தன்மைக்கு இது ஒரு சவால்! ஆரம்பியுங்கள்!” என்று கூறிவிட்டு அமர்ந்து விட்டார் ஆஸ்தானப் புலவர்!
மேலிருந்து விழும் எள்ளின் ஓசை கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி! அதைத்தான் இப்பொழுது பின் ட்ராப் சைலன்ஸ் (Pin drop silence) என்கிறோம். சில புலவர்கள் கண்மூடி யோசிக்கிறார்கள். சிலர் ‘வந்து சிக்கிக் கொண்டோமே’ என்று பயந்து அமர்ந்திருக்கிறார்கள். சில வயதான புலவர்கள் ‘போட்டி ரொம்பவும் புதுமையாக இருக்கிறதே’ என்று எண்ணியபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஓர் இளம் புலவர் எழுந்தார்; கையில் எலுமிச்சம் பழத்தை எடுத்தார்; மேலே தூக்கிப் போட்டு விட்டு, "ராமன் பிறந்தான்! ராவணன் இறந்தான்!" என்று சொல்லி விட்டு, மேலிருந்து இறங்கிய பழத்தைக் கையில் பிடித்தார்!
அவ்வளவுதான்! மன்னரிலிருந்து அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்! ஸ்டேண்டிங் ஒவேஷன் (Standing ovation).
இப்போது புரிகிறதா குட்டீஸ்? - அணுகும் முறையில்தான் சூட்சுமம் இருக்கிறது. அதற்குத்தான் நம் அறிவு தேவைப்படுகிறது. அதற்கு ஆதாரமாக இருப்பது நம் கல்வி ஒன்றுதான்!