

இவர் நயாத் என்னும் ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்தார். அவர் வகுப்பு ஆசிரியர் தம் ஆசிரியத் தோழியோடு பள்ளி மாணவருக்குரிய புத்தகம், நோட்டு புத்தகம், பென்சில் போன்ற பொருட்களையும் வியாபாரம் செய்து வந்தார். அவர் தம்மிடம் உள்ள பொருட்களையே வாங்க வேண்டும் என மாணவர்களை வலியுறுத்தியும் அச்சுறுத்தியும் இந்த வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒருமுறை பட்டேல் தமக்கு தேவைப்பட்ட நோட்டு புத்தகம் ஒன்றை கடைவீதியில் இருந்து வாங்கி வந்தார். இதை அறிந்த வகுப்பாசிரியருக்கு கோபம் பொங்கிவிட்டது. ஆசிரியர் பட்டேலை கூப்பிட்டு இந்த செயலுக்கு அவரை கண்டித்தார். ஆசிரியரின் இந்த போக்கு மாணவர் பட்டேலிடம் ஆத்திர உணர்ச்சியைக் கிளப்பியது. இது தங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது போல் பட்டேலுக்குப் பட்டது.
மற்றுமொரு முறை பட்டேல் கடைவீதிக்கு சென்று வேறு ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொண்டு வந்தார். இதை அறிந்த ஆசிரியர் பட்டேலை அழைத்து, "இனி உனக்கு தேவைப்படும் பொருட்களை என்னிடமே வாங்கி கொள்ள வேண்டும். கடைவீதிக்கு சென்று வாங்கவே கூடாது. இது என் கண்டிப்பான கட்டளை" என்று கூறி, மேலும், அவருக்கு வசைச் சொற்கள் வழங்கினார்.
இதைக் கேட்ட மாணவர் பட்டேலுக்கு அமைதியாக இருந்து கொள்ள முடியவில்லை. ஆத்திர உணர்ச்சி மேலிட்டு, "உங்களிடம் தான் வாங்க வேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? இது போன்ற வழக்கம் வேறு எந்த பள்ளிக்கூடத்திலாவது உண்டா?" என்று கேட்டார்.
இவ்வாறு, ஆசிரியரிடம் பட்டேல் எதிர்த்து பேசியதை கேட்டு மாணவர் கூட்டம் திகைப்பிலும் வியப்பிலும் மூழ்கியிருந்தது. ஆசிரியரிடமோ ஆத்திரம் உணர்ச்சி மேலோங்கி நின்றது. அவர் அடக்கத்தை இழந்த நிலையில் பட்டேலை பார்த்து, "இந்த பள்ளியில் அந்தச் சட்டம் உண்டு. நீ இங்கே படிக்க வேண்டுமானால் என்னிடம் பொருள்கள் வாங்கியே ஆக வேண்டும்" என்று முழங்கினார்.
இதைக் கேட்ட பட்டேல் மீண்டும் ஆசிரியை நோக்கி, "ஐயா..! நீங்கள் பாடம் கற்பிக்கவே இங்கு அமர்த்தப்பட்டு இருக்கிறீர்கள். வியாபாரம் நடத்துவதற்கு அல்ல; இந்த வியாபார தொழிலை நிறுத்திவிட்டு கருத்தாக எங்களுக்கு பாடம் கற்பியுங்கள். நாளையிலிருந்து நாங்கள் பள்ளிக்கூடம் வரப்போவதில்லை. இந்த வியாபாரத்தை நீங்கள் நிறுத்திய பிறகு தான் மீண்டும் இங்கே வருவோம்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
மாணவர்கள் அனைவரும் பட்டேலுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒருவராது பள்ளிக்குச் செல்லவில்லை. வகுப்பறைகள் அனைத்தும் வெறுமையாக காட்சியளித்தன.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் பள்ளிக்கூடமே மூடப்பட்டது. ஆசிரியர் தம் பிழையை உணர்ந்து திருந்திக் கொண்டார். இதன் பின்னரே மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். பட்டேலின் சுதந்திர உணர்ச்சியும் திண்மையான உள்ளமும் மாணவர்களிடம் அவருக்கு பெருமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. பிற்காலம் இவர் சிறந்த தலைவராக திகழ்வார் என்பதை அவரது இளமைக்கால வாழ்க்கை நிகழ்ச்சிகளே மெய்ப்பித்து காட்டின.