

அன்று பெருமழை கொட்டித்தீர்த்தது. காடு முழுதும் நீர். காட்டாங்குளம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே இருந்த தவளைகள் மிகுந்த ஆர்வமுடன் ஒன்று கூடின. "இந்த குளத்தில் குதித்து ஒரு நாட்டியம் போடவேண்டும். அப்படியே நம் கராரி ராகத்தில் பெரும் இனிமை குரலில் பாட்டும் பாடவேண்டும்," என்று கூடிப்பேசி பின் ஒவ்வொன்றாக குளத்தை நோக்கி சென்றன. பெரிய தவளை முன் செல்ல அனைத்தும் பின்னால் ஒரு ரயிலைப்போல் தொடர்ந்து சென்றன.
அவ்வளவுதான்... வந்தாரையா வந்தாரு. பெரும் பாம்புதானே வந்தாரு!
இதை கவனித்த ஒரு குட்டி தவளை உடனே தன் முன் உள்ள தவளையிடம் கூற, அது தனக்கு முன் உள்ள தவளையிடம் கூற இப்படியே செய்தி அவரச்செய்தியாக தலைமை தாங்கி செல்லும் பெரிய தவளைக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனே பெரும் கவலை கொண்டது தலைவர் தவளை. அனைவரையும் காப்பாற்ற வேண்டுமே என்ற ஒரு அச்சத்துடன் ஆனால், அதே சமயம் நிதானம் இழக்காமல் ஒரு மனோதிடத்துடன் அண்ணாந்து வானத்தை பார்த்தது. அதற்கு ஒரு தெளிவு கிடைத்தது.
"சரி.. எல்லோரும் வாங்க.." என்ற தலைவர் வேகமாக ஒரு சரியான கணிப்புடன் வானை நோக்கி சென்று கொண்டே இருந்தது. பாம்பும் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
"தலைவா எங்க போறீங்க? குளம் தாண்டிருச்சு.." என்றது ஒரு தவளை.
"சரிடா தம்பி.. நாம உயிர் பிழைக்க வேணாமா?"
"அப்ப நாம எங்க போறோம்."
"நான் போகும் இடமெல்லாம் நீயும் வரணும் வா.. வா.. வா.." என்றார் தலைவர்.
ஒரு இடத்தில் நல்ல வெயில்.
அனைவரும் தலைவர் சொல்படி அங்கேயே நின்றனர்.
"ஏன் தலைவா வானத்தையே பார்க்கிறீர்கள்? சூரியன் நன்றாக உதித்து விட்டானே!" - ஒரு குட்டி கேட்டது.
"உனக்கு காரணம் புரியாது. இப்ப எல்லோரும் கராரி ராகத்துல பாடுங்க பார்ப்போம்."
அவ்வளவுதான் படு வேகமாக உரத்த குரலில் பாம்புக்கு பயந்து தலைவர் ஆணைக்கு இணங்க, அனைத்தும் பாட ஆரம்பித்தன.
தலைவர் வானத்தையே பார்த்தது.
"இன்னும் சற்று தள்ளி போய் பாடுவோம்; வாருங்கள்" என்றதும்
"என்னடா தலைவரு வானத்தை பாக்குறாரு. நமக்கு கட்டளை கொடுக்கறாரு. ஒண்ணுமே புரியலியே" என்பதற்குள் பாம்பு வேகமாக வந்து கொண்டிருந்தது.
அனைத்தும் அச்சத்துடன் தலைவர் பின் நோக்கி நகர்ந்து செல்லவும், வானத்தை பார்த்த தலைவர் நின்றார். "பாடுங்கள்.." என்று சைகை காட்டினார்.
அவ்வளவுதான் பாம்பு கிட்டே வந்து ஒரு தவளையை கவ்வும் நேரமும், தலைவர் கணிப்பும் சரியாக இருந்ததால் பறந்து வந்த கழுகு, அந்த பாம்பை காலில் கவ்வி சென்று விட்டது.
"இப்ப பாடுங்க தம்பிங்களா. பாடிக்கிட்டே காட்டாங்குளத்துல குதித்து நீந்துவோம்," என்று கூற அனைத்தும் சென்று வெள்ளமாய் நிரம்பி வழிந்த காட்டாங்குளத்தில் குதித்து ஆனந்தமாய் மீண்டும் ஒரு கரகரப்பிரியா ராகத்தில் ஒரு பாட்டை பாடின. ஆனால் இம்முறை தைரியத்துடன்.
ஒரு குட்டி தலைவரை பார்த்து, "ஏன் தலைவா வானத்தையே பார்த்து வந்து எங்களை வழி நடத்தினீர்கள்?" என்று கேட்டது.
"அதுவா... வானத்தில் இந்த பாம்பைப் பிடிக்கும் பறவைகள் பறந்தனவா என்று பார்த்தேன். வெறும் குருவிகளும் காக்கைகளுமே பறந்தன. அதனால், சற்று தள்ளி வந்தேன். நல்ல வேளையாக ஒரு கழுகு பறப்பதை கண்டேன். அதன் கண்ணில் தென்படும்படியா உங்களை கூட்டமாக அழைத்து சற்று வெயில் நிறைந்த இடத்தில் பாட செய்ததால் கழுகின் பார்வை நம்மீது பட்டது. உடன் அது கீழே இறங்கவும் பாம்பு நம்மில் ஒருவரை விழுங்க தயாராகவும், சரியாக அந்த கழுகு பாம்பை கால்களில் கவ்விக்கொண்டு பறந்தது. அதனாலேதான் நாம் தப்பினோம். இல்லை என்றால் இந்நேரம் நம்மில் பாதிபோரை அந்த பொல்லா பெரும் பாம்பு விழுங்கியிருக்கும்," என்று கூறி குட்டியுடன் சேர்ந்து நீரில் குதித்து ஒரு ஆட்டம் போட்டது.
நீதி: நல்ல தலைமை தக்க சமயத்தில் மக்கள் தலை காக்கும்.