

கோடைகாலத்தில் நம் வீட்டில் மண்பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து பார்த்திருக்கிறீர்களா? எல்லோர் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்காது; அதனால் தான் மண்பானயில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்.
மண்பானை தண்ணீர் கோடைகாலத்தில் ஜில்லுனு இருப்பதற்கு காரணம் இருக்கிறது.
மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதன் அறிவியல் ரகசியம்:
மண்பானைகளில் நுண்துணைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்து இருப்பது போன்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
மண்பானையில் உள்ள சிறிய நுண்துளைகள் வழியே தான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும். பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
எனவே, நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. வெளிப்புற காற்றின் தன்மையை பொறுத்தும் நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையை சுற்றிலும் அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால் அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.
ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.
மண்பானையில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் வெளியில் வெயில் பட்டையை கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிர செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்திருக்கும்.
மண்பானை தண்ணீர் தரும் அற்புதமான நன்மைகள்:
கடும் கோடையில் உடலுக்கு இதமாக ஒரு மண்பானை நீரை நன்றாக குளிர் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். நாம் பிரிட்ஜ் மூலம் குளிர்ந்த நீர் குடிப்பதெல்லாம் உடலுக்கு கெடுதலைத்தான் தருகிறது மண்பானையில் குளிர வைத்து குடிக்கும் பொழுது அதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த போது உடல் நலன் மேம்பட்டு இருந்தது. இன்றைக்கு இருக்கும் பல்வேறு நோய்கள் அன்றைக்கு இல்லை.
மனிதன் பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து கிடைத்த பொருட்களாக இருந்தன. குறிப்பாக உடலுக்கு உயிர் ஆதாரமான தண்ணீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடித்து வந்தனர். மண்பானை என்பது சுட்ட களிமண் கொண்டு உருவாக்கப்பட்டது.
இது காணப்படும் நுண்துளைகள் வழியாக காற்று ஊடுருவி மண்பானையில் இருக்கும் தண்ணீரை ஆவியாக ஆக்குவதால் தண்ணீர் குளிர்ச்சி அடைகிறது.
மண்பானை தண்ணீர் வயிற்றுக்குள் செல்லும் போது ஒரு மென்மையும் குளிர்ச்சியும் நிறைந்த உணர்வை அளிக்கிறது. களிமண் என்பதை இயற்கையாகவே காரத்தன்மையைக் கொண்டது.
மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் பானையின் களிமண்ணிலிருந்து மெக்னீசியம் போன்ற சிறிய அளவிலான போன்ற இயற்கை தாதுக்களை உறிஞ்சும். இதனால் மண்பானையில் இயற்கையான குளிர்ச்சி மற்றும் அந்த பாணியில் இருந்து கிடைக்கும் தனிமங்களின் கலவையும் மனித உடலில் ஒட்டுமொத்த செரிமான அமைப்புக்கும் புத்துணர்வு தருகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கும். ஆனால், மண்பானையில் இருக்கும் தண்ணீர் நச்சு ரசாயனங்களை கூட வடிகட்டி எடுத்துவிட்டு தூய நீரை நமக்கு வழங்குகிறது.
மண்பானை தண்ணீரை குடிப்பது உடலின் தண்ணீர் அளவு சீராக இருக்க உதவும்.
புதிதாக மண்பானை வாங்கி தண்ணீரை ஊற்று முன், நன்றாக நீரில் மூழ்க வைத்து அப்படியே விட்டுவிட வேண்டும்.
பின்னர் ஒரு வாரத்திற்கு தண்ணீரை மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர் தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.
முடிந்தால் அரிசி கழுவிய நீரையும் ஊற்றி வைக்கலாம். மண்பானை வைக்கும் இடத்தை தேர்வு செய்துவிட்டு சிறிது ஆற்று மணலை பரப்பிக் கொள்ள வேண்டும்.
அதன்மேல் மண்பானையை வைத்து நீர் ஊற்றி வைக்க சரியாக இரண்டு மணி நேரத்தில் நீர் குளிர்ச்சி அடைந்து விடும். மேலும் பானையில் இருக்கும் நீர் தீர்ந்து விடுவதற்கு முன் மீண்டும் பானையை நிரப்பி வைத்து விட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் முழு பானை நீரும் ஜில்லென்று நமக்கு கிடைக்கும். மண்பானை தண்ணீர் தொண்டைக்கு இதமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
மண்பானை தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஆல்கலைன் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது .
என்ன குட்டீஸ்களா உங்கள் வீட்டில் மண்பானையை வாங்க சொல்லி அதில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்க தயாராகி விட்டீர்களா?
இந்த கோடையை மண்பானை தண்ணீரை உபயோகப்படுத்தி குடித்து ஜில்லென்று தண்ணீர் குடித்து திருப்தியை பெறுங்கள். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து அந்த பிரிட்ஜ் தண்ணீரை குடித்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதை விட இந்த மண்பானை தண்ணீர் நமக்கு எவ்வளவு அற்புதமான இயற்கை தந்த வரப்பிரசாதம் என தெரிந்து கொண்டீர்களா?
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference