கண்ணாடி கிரகத்தின் கவலை!

(அறிவியல் அனுபவங்கள்)
Scientific experiences!
Scientific experiences!

ந்தப் பிரபஞ்சத்தின் நம்பர் ஒன் கிரகம் கண்ணாடி கிரகம். அதன் நம்பர் ஒன் தலைவர் மாரோ. அவருக்கு ஒரு பெரிய கவலை இருந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே அவரிடம் இருக்கிறது. ஒன்றைத் தவிர! அதைத்தான் அவர் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் கண்ணாடி கிரகமும் அதைத் தேடிக்கொண்டிருந்தது! ஆனால் இதுவரை பலனில்லை.

அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் இந்தக் கிரகத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிடலாம். கண்ணாடி கிரகம் என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. அங்கே அது மட்டும்தான் கிடைக்கும் என்பதால் எல்லாமே கண்ணாடியால் உரு வாக்கப்பட்டிருந்தன. பல் தேய்க்கும் பிரஷ், பூ, மரம், பழம், கம்ப்யூட்டர், வீடு, கார், ஏன் அந்தக் கார் ஓடும் சாலைகூடக் கண்ணாடிதான். கண்ணாடித் தட்டில் கண்ணாடி பிரட், ஜாம். தண்ணீரும் கண்ணாடி. சோப்பு, சீப்பு, டிரஸ் எல்லாமே கண்ணாடி, கண்ணாடி, கண்ணாடி மட்டுமே!

பொருட்கள் மட்டுமா? பேப்பர் போடுபவர், அதைப் படிப்பவர், பள்ளிக்கூட வாத்தியார், வேலைக்குச் செல்பவர், வீட்டில் இருப்பவர், வயதானவர், அப்பா, அம்மா, குழந்தை எல்லாருமே கண்ணாடியால் உருவானவர்கள்தாம். ஆமாம், கிரகத்தின் தலைவர் மாரோவும்கூட ஒரு கண்ணாடி மனிதர்தான். பார்ப்பதற்கு அசப்பில் ரோபோ மாதிரி இருப்பார்.

சூரியன் தெரியும் அல்லவா? அங்கிருந்து வலது பக்கம் திரும்பி இரண்டரை லட்சம் மணி நேரம் போனால் கண்ணாடி கிரகம் தெரியும். தூரத்தில் வரும் போதே ‘ஜக ஜக’ என்று டால் அடிக்கும். அங்கிருந்து இடது பக்கம் திரும்பி, இரண்டு லட்சம் மணி நேரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தைக் கடந்து வலது பக்கம் செல்லும் குறுகலான பாதை வழியாக மேலும் ஒரு லட்சம் மணி நேரம் போனால் நிலா.

கண்ணாடி கிரகம் போலவே கொஞ்சம் தள்ளிப் போனால் பாறை கிரகம். இங்கே பாறை மனிதர்கள் இருப்பார்கள்.

அடிக்கடி நிலாவுக்கும் சூரியனுக்கும் போக வேண்டி வரும் என்பதால் போன வாரம் சூப்பர் வேக பிளேன் ஒன்றை மாரோ இறக்குமதி செய்திருந்தார். அதற்கு பைலட் எல்லாம் தேவையில்லை. ஏறி உட்கார்ந்து சுவிட்ச் போட்டு, நிலா என்று சொல்லிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நிலா வந்தவுடன் அதுவே எழுப்பிவிடும். பாறை கிரகம் போகவேண்டும் என்றால் பாறை என்று சொன்னால் போதும்.

ஹும், இவ்வளவு வசதி இருந்து என்ன பிரயோ ஜனம்? மாரோவின் கவலை தீரவில்லையே! இன்றாவது நல்ல செய்தி வருமா? ஏக்கத்துடன் தனது அலுவல கத்துக்குச் சென்றார்.

அவரைக் கண்டதும் கண்ணாடி உதவியாளர் அசைந்து அசைந்து வந்தார்.

‘என்ன இன்றாவது கிடைத்ததா?’

உதவியாளர் தலை குனிந்து நின்றார்.

‘எப்போதுதான் கண்டுபிடிப்பீர்கள்?’

உதவியாளர் தயங்கியபடி பேசினார். ‘எனக்குத் தெரிந்து எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன் தலைவா! செவ்வாய், புதன், வியாழன் என்று எல்லாக் கிரகங்களுக்கும் ஆட்கள் அனுப்பியாகி விட்டது. பாறை கிரகம், பனிக் கிரகம் இரண்டையும்கூட சல்லடை போட்டுத் தேடிவிட்டேன்.’

‘நம்முடைய சூப்பர் கம்ப்யூட்டரைக் கேட்டீர்களா?’

‘இதுவரை அப்படியொரு வார்த்தையையே அது கேள்விப்பட்டதில் லையாம்.’

‘அப்பா’ என்று கத்தியபடி மாரோவின் மகள் சிவி உள்ளே ஓடிவந்தாள். மஞ்சள் ஃபிராக் அணிந்த அழகான கண்ணாடிக் குழந்தை!

 ‘சிவி! நீ போய்த் தோட்டத்தில் ரோபோவோடு விளையாடு. அப்பா வுக்கு இங்கே நிறைய வேலைகள் இருக்கு.’

 ‘அப்படி என்னப்பா எப்பொழுதும் ஓயாத வேலை?’

‘சிவி! நான் பல ஆண்டுகளாக ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது கிடைத்தால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்.’

‘சொல்லுங்கள், நானும் தேடுகிறேன்.’

‘அதன் பெயர் கதை.’

சிவி விழித்தாள். ‘கதையா?’

இதையும் படியுங்கள்:
மனிதனின் சாஃப்ட்வேர் மூளை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Scientific experiences!

‘ஆமாம். அது ஒரு அற்புதமான, சுவாரஸ்யமான விஷயம் என்று சொல்கிறார்கள். அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று கூட ஒருவருக்கும் தெரியாது. உன் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து கண்ணாடி கிரகம் கதையைத் தேடிக்கொண் டிருக்கிறது.’

‘இதுவரை யாருமே கண்டுபிடிக்கவில்லையா?’

‘இல்லை. சிலர் அது நம்மைப் போல் கண்ணாடி வடிவில் இருக்கும் என்கிறார்கள். சிலர் அது ஒரு விநோத விலங்கு என்கிறார்கள். உன் தாத்தா ஒருமுறை கனவில் ஒரு கதையைப் பார்த்தாராம். அதற்கு நீள நீளமாகக் கை, கால் எல்லாம் இருந்ததாம். பேசவும் செய்ததாம்.’

‘ஓ, கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறதே.’

‘ஆமாம்! அதனால்தான் நானும் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.’

‘அந்தக் கதை தாத்தாவிடம் என்ன பேசியது?’

‘என்ன என்று தெரியவில்லை.’

‘சொல்லுங்க அப்பா. அந்தக் கதை என்ன சொன்னது? தாத்தா அதற்குப் பதில் சொன்னாரா? அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் இருந்ததா?’

மாரோ யோசித்தார். படிப்பு, பள்ளிக்கூடம், விளையாட்டு எதிலும் ஆர்வம் காட்டாத சிவி இதை மட்டும் எப்படித் துருவித் துருவிக் கேட்கிறாள்? இது விநோதமாக அல்லவா இருக்கிறது?

‘அப்பா, என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? சீக்கிரம் கதை சொல்லுங்கள்.’

‘என்ன! என்ன! இப்போது என்னசொன்னாய்?’

‘கதை சொல்லுங்கள் என்று கேட்டேன்.’

‘ஆ’ என்று சத்தம் போட்டு ஆச்சரியப்பட்டார் மாரோ. இதுதானா அது? இதுதான் கதையா? இதைத்தானா நான் இவ்வளவு காலம் தேடிக்கொண்டிருந்தேன்? மாரோ மகிழ்ச்சியுடன் தாவி வந்து சிவியைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

அந்த நொடியில் கண்ணாடி கிரகத்தின் கவலை தீர்ந்துபோனது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com