குட்டிக் கதை - வீம்புப் பேச்சு விபரீதத்தில் முடியும்!

குட்டிக் கதை...
குட்டிக் கதை...Image credit - facebook.com
Published on
gokulam strip
gokulam strip

-தா சரவணா,

ன்னருக்கு மீன் கொண்டு வந்த ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.'

'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.

'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன், ஆனா, பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன்தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள்.

அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை. இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால்தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன்' என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான்.

மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'.

இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம்; நீங்கள் மட்டுமே காரணம்!
குட்டிக் கதை...

இந்த குட்டி கதை நமக்கு உணர்த்தும் நீதி என்னவென்றால் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதாகும். சாதாரண மீனவன்தானே, அவனிடம் சற்று விவரமான கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல மாட்டான் என்று நினைத்த மகாராணிக்கு 15 ஆயிரம் தங்க நாணயங்கள் நஷ்டமாகிப் போனது. அதே நேரம் மன்னரின் மனதில் அந்த மீனவன் குறித்த நம்பிக்கை உயர்ந்து காணப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் மகாராணியின் வீம்பு பேச்சு தானே! அவர் முதலிலேயே கேள்வி ஏதும் கேட்காமல் விட்டிருந்தால் ஐந்தாயிரம் தங்க காசுகளுடன் போயிருக்கும். நம்மில் பலரும் இப்படித்தான் தேவையற்ற இடங்களில், தேவையற்ற ஆட்களிடம் வீணாக பேசி வாங்கி கட்டிக் கொள்கிறோம். அதனால் அதிகம் பேசாமல் காரியத்தை செய்வதில் மட்டும்தான் நாம் குறியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சிறுகதை நமக்கு விளக்குகிறது குட்டீஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com