சிறுகதை - ‘தீபாவலி...’

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை
gokulam strip
gokulam strip
Deepavali 2023
Deepavali 2023

ந்தத் தடவை தீபாவளியை பாட்டி வீட்டுக்குப் போய் கொண்டாடலாம் என்று குழந்தைகள் நச்சரிக்க ரமேஷும் மாலாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். காரணம் போன தீபாவளிக்கு எங்கும் போகவில்லை.

நான்கு நாட்களுக்குத் தேவையான துணிமணிகள் நகை, பணம் இத்யாதி இத்யாதிகளை எடுத்து அடுக்கிக் கொண்டாள் மாலா. குழந்தைகள் அவர்களது பங்கிற்கு தங்களது விளையாட்டுச் சாமான்களையும் பட்டாசுக்களையும் எடுத்து வைத்தனர்.

சூட் கேஸ், ட்ராலி பேக், தோள்பை, அட்டைப்பெட்டி என்று நிறைய சேர்ந்துவிட்டன. லக்கேஜ்களை எண்ணிப் பார்த்துவிட்டு ரமேஷ் கோபப் பட்டான், “நாம என்ன வீடு ஷிஃப்ட்டிங்கா பண்றோம்... ஏன் இத்தனை லக்கேஜ்...” என்றுவிட்டு, “இதென்ன கூட ஒரு அட்டைப் பெட்டி” என்றான்.

பாபு முந்திக்கொண்டு சொன்னான், “அப்பா போன தடவை வாங்கின பட்டாசு கொஞ்சம் மீதம் இருந்ததில்லையா... அதைதான் அட்டைப் பெட்டில வச்சிருக்கோம். தீபா அதையெல்லாம் கொண்டுபோய் பாட்டி வீட்டிலே வச்சி வெடிக்கலாம்னு எடுத்து வச்சிருக்கா...“ என்றான்.

மாலா தனது பங்கிற்கு ஒத்து ஊதினாள், “ஏங்க... நாம நாலு பேரு. ஒரு நாளைக்கு ரெண்டு செட் துணிமணி வேணும். இரண்டு நாட்கள் உங்கள் அம்மா அப்பாவுடன் திருச்சியில். அடுத்து இரண்டு நாட்கள் லால்குடியில் என் அம்மா அப்பாவுடன்... போற நாள், வர்ற நாள் சேர்த்து ஆறு நாள் ஆகுது. மொத்தம் நாற்பத்தெட்டு செட். ஒரு செட்டுனா உங்களுக்கு ஒரு பேண்ட், சர்ட், பனியன் ஜட்டி. எனக்கு சேலை, பாவாடை, ரவிக்கை” குறுக்கிட்ட ரமேஷ் “போதும்... போதும்... தலையை சுத்துது” என்றான்...

அவனைக் குறுக்கிட்ட மாலா, “கொஞ்சம் இருங்க... அதில்லாம எங்கம்மாவுக்கு உங்க அப்பாவுக்கு உங்க அம்மாவுக்கு புதுத்துணிகள், அதோட தீபாவளிக்கு நமக்கு எடுத்த துணிகளும் சேர்த்து மொத்தம் ஆறு பெட்டிகள். அப்புறம் ஆளுக்கு ரெண்டு ஜோடி செருப்பு, சாக்ஸ், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான், பத்தாக்குறைக்கு பட்டாசு பெட்டி...” என்றுவிட்டு பெரிதாக மூச்சு விட்டாள்.

தானும் தன் பங்குக்கு ஒரு பெருமூச்சு விட்டபடி, “இப்படி லக்கேஜ் ஏத்தினா அடுத்த தீபாவளிக்கு நான் லாரிதான் வாங்கணும்” என்று எரிந்துவிழுந்தான் ரமேஷ்.

“ஹை. அப்பா லாரி வாங்கப் போறார்...” என்று குதித்தான் பாபு. விவரம் புரியாமல்.

ஒரு வழியாக ஊருக்கு கிளம்பிவிட்டார்கள்.

திருச்சிக்குப் போய் இறங்கியவுடன் குழந்தைகள், “ஹாய் பாட்டி” என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டார்கள். அவளும் குழந்தைகளுக்கென்று தான் வாங்கிவைத்திருந்த  விளையாட்டுச்சாமான்களைக் கொடுத்து அவர்களது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டாள்.

குழந்தைகளுக்கு பாட்டி வீடு என்றால் அலாதி பிரியம்.  குறிப்பாக பண்ணைத் தோட்டத்திற்கு போனால்,  இளநீர் வெட்டிக்கொடுக்கச் சொல்லி குடிக்கலாம். மோட்டார் போடச்சொல்லி தொட்டிக்குள் நீச்சல் அடிக்கலாம். இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று வயல்கள் இருக்க இடைப்பட்ட வரப்பில் ஜாலியாக நடக்கலாம். சிலசமயம் நண்டுகள் ஓடும்.  குழந்தைகள் எதற்கும் அஞ்சுவதில்லை.

short story - deepavali...
short story - deepavali...

அடுத்தநாள் விடிந்ததுமே குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பண்ணைத் தோட்டத்திற்கு கிளம்பி விட்டான் ரமேஷ்.  முந்தின நாளே பண்ணையாளிடம் கூப்பிட்டு சொல்லிவிட்டாள் மல்லிகா பாட்டி, குழந்தைகளின் சந்தோஷமே தனது சந்தோஷம் என்று.

மாங்காய் பறித்து தின்றார்கள், இளநீர் குடித்தார்கள். வெள்ளைக் கரும்பு ஒடித்து எடுத்து கடித்தார்கள்.  ஆனால், தொட்டியில் மட்டும் குளிக்க முடியவில்லை. பாசான் பிடித்திருக்கிறது, உடம்புக்கு நல்லதில்லை என்று சொல்லிவிட்டான் பண்ணையாள். ஆனாலும் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குற்றால அருவி மாதிரி கொட்டியதால், அதில் குளித்து மகிழ்ந்தனர்.

அன்று கிராமத்து வாரச் சந்தை.  சந்தைக்குள் ஓடியாடி மகிழ்ந்தனர் குழந்தைகள்.  விடிந்ததும் தீபாவளி.

எண்ணெய்த் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்திகொண்டு பட்டாசு வெடிக்க மொட்டை மாடிக்கு போய்விட்டனர். பண்ணையாளிடம் சொல்லி குழந்தைகளுக்காக நிறைய பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தாள் பாட்டி. ரமேஷும் தன் பங்குக்கு கொஞ்சம் வாங்கி வந்திருந்தான். புது பட்டாசுகளை முதலில் வெடிக்கச் சொல்லியும் ஊரிலிருந்து கொண்டு வந்த பெட்டியை மத்தியானம் திறந்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டாள் பாட்டி. அவள் வாங்கியதை முதலில் வெடித்து மகிழவேண்டும் குழந்தைகள் என்பது அவளது ஆசை.

பட்டாசு வெடித்து மகிழ்ந்து பிறகு கீழே இறங்கி வந்து, இட்லி தோசை பலகாரமெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஊருக்குள் ஒரு ரவுண்டு கிளம்பிவிட்டார்கள்.

மதியம் அட்டைப் பெட்டியைத் திறந்து போனவருட பட்டாசுகளை வகைப்படுத்தினர். தீபா பென்சில் மத்தாப்புதான் பிடிப்பேன் என்று அடம் பிடித்தாள்.  “ஏ... அது நைட்ல பிடிக்கறதுடி மண்டு...  நீ ஊசிப் பட்டாசு வெடி... அதுதான் பயமா இருக்காது...” என்றான் பாபு.  “எனக்கொண்ணும் பயமில்லை” என்றபடி அவன் சொல்வதைக் கேட்காமல் பென்சில் மத்தாப்பை எடுத்து பொருத்தினாள். அது தீப்பற்ற மறுத்து... பிறகு புஸ் என்று பற்றியது.

‘டமார்...’

பென்சிலிலிருந்து தீப்பொறி விழுவதற்குப் பதிலாக வெடித்துவிட்டது. தீபா கையை உதறிக்கொண்டு கதறினாள். உள்ளங்கை முழுதும் கருப்பாகி விட்டது.  எரிச்சல், வலி தாங்கமுடியாமல் அலறினாள்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகளைப் போக்கும் ஸ்ரீ பாலாம்பிகை!
ஓவியம்: பிள்ளை

“சரி கிளம்பு டாக்டர்கிட்டே போகலாம்...”  என்று துரிதப்படுத்தினான் ரமேஷ். பண்ணையாள் குறுக்கே ஓடிவந்து, “அய்யா... இது கிராமம். அஞ்சு கிலோமீட்டர் போனாத்தான் டாக்டரைப் பார்க்கமுடியும். அதுக்குள்ளே நான் ஒரு சின்ன வைத்தியம் செய்யறேன். கவலையேப் படாதீங்க. அப்புறமா டாக்டர்கிட்டே போய்க்கலாம்” என்றுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் ஓடிப்போய் மோட்டார் தொட்டியில் மண்டியிருந்த பாசானை அள்ளிக்கொண்டு வந்து தீபாவின் கையில் வைத்து வெள்ளைத் துணியால் கட்டினான்.

அழுது ஆர்ப்பாட்டம் போட்டுக்கொண்டிருந்த தீபா, நேரம் ஆக ஆக அழுகையை குறைத்தாள். எரிச்சலும் வலியும் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாள். ஆனாலும் அவளைத் தூக்கி காரில் உட்கார வைத்துக்கொண்டு பக்கத்து டவுனுக்கு ஓடினான் ரமேஷ். டாக்டர் பரிசோதித்துவிட்டு பாசான் வைத்து கட்டியதால் பயமில்லை என்றுவிட்டு மாத்திரைகள் மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அதற்குப் பிறகு தீபா பட்டாசு பக்கமே போகவில்லை. மறுநாள் லால்குடிக்கு கிளம்பிப் போய் அதற்கடுத்த மூன்று நாட்களில் சென்னைக்கும் திரும்பி... எல்லாமே அனிச்சையாக நடந்துமுடிந்தன. தீபா மட்டும் தன் உள்ளங்கையை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com