
ஒரு பெரிய நகரம் பக்கத்துல ஒரு பெரிய மரம் இருந்துச்சு. அதுல ஒரு காக்கா வாழ்ந்து வந்துச்சு. பக்கத்துல இருக்கிற பார்க்குல போய் தனக்கு தேவையான உணவு எடுத்து சாப்டுட்டு, அடுத்து வர்ற காலங்களுக்கு உணவு தேட முடியாத நிலை வந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு, நிறைய உணவுகளை எடுத்துட்டு வந்து தன்னோட பொந்துல சேமிச்சு வைக்கும்.
ஒரு நாள் அந்த காக்கா உணவு தேடிக்கிட்டு இருந்தப்ப, அது கண்ணுல ஒரு ஸ்மார்ட் போன் பட்டுச்சு.
அது யாருதுன்னு சுற்றும் முற்றும் பாத்துச்சு. ஆனா அங்க யாருமே இல்ல. சரி, இதை எடுத்துட்டு போயி நாளைக்கு இந்த பார்க்குக்கு வர்றவங்க கண்ணுல படற மாதிரி வைப்போம்.
அப்படி செஞ்சா அந்த போனுக்கு உரியவங்க கையில போயி கிடைக்கும்னு நினைச்சு தன்னோட பொந்துல கொண்டு போயி வச்சுது. உடனே திடீர்னு அந்த ஸ்மார்ட் போன்ல இருந்த ஆப் தொறந்துச்சு. அதுல பறவைகள் டான்ஸ் ஆடுற வீடியோ ஓடுச்சு.
அதப் பார்த்து ஆச்சரியப்பட்ட காக்கா தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்க்க ஆரம்பிச்சு, அன்றிலிருந்து உணவு தேட கூட வெளியே போகாம பொந்துலேயே இருந்து ரீல்ஸ் வீடியோ பார்த்து நேரத்தை வீணடிச்சுது.
ரெண்டு மூணு நாள் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்த்ததால சார்ஜ் இல்லாம போன் வேல செய்யலை. அப்பதான் காக்காவுக்கு புரிந்தது.
தான் ரெண்டு மூணு நாளா எதுவும் சாப்பிடாம உணவு தேடாம, உணவு சேமிக்காம தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்த்து நேரத்தை வீணடிச்சு இருந்துட்டோமேன்னு கவலைப் பட்டுச்சு.
ரொம்ப பசி எடுத்ததால காக்கா உணவு தேடலாம்னு கிளம்புச்சு. தொடர்ந்து பொந்துல சாப்பிடாம போன் பார்த்ததால உடம்புல பறக்க கூட தெம்பு இல்லாம போச்சு.
உடனே, பக்கத்துல இருந்த காக்கா சிறிது உணவு கொடுக்க, தெம்பு வந்தது.
அப்புறம் தான் ஸ்மார்ட் போன் பார்த்து நேரத்தை வீணடிச்சிட்டோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டுது.
அதன் பின் பார்க்குக்கு வர்ற குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தறத பார்த்தா உடனே போயி அத தட்டி விட ஆரம்பிச்சுச்சு காக்கா.
அதனால இப்ப வர்ற குழந்தைகள் செல்போன் பாக்காம ஓடி, ஆடி, ஊஞ்சல், சறுக்கு என விளையாடி மனசையும் உடம்பையும் நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க.
நீதி: குழந்தைகளே காக்கா மாதிரி செல்போன் பார்த்து சோம்பேறியாகாமல், விளையாடி, நன்றாக படித்து சுறு சுறுப்பாக இருங்கள்.