சிறுகதை - ஜல்லிக்கட்டுக் காளை!

ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளை

“குருவே! நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது! நீங்கள் கை நிறையச் சம்பாதிக்கப் போகிறீர்கள்!” என்று மகிழ்ச்சியாக ஓடிவந்தான், மண்டு.

“ஆஹா! உங்கள் சப்பைத் தொப்பைக்கு, ‘குட்பை’ சொல்லிவிட வேண்டியதுதான்! இனி, பழையபடி பானைபோல் ஆகிவிடும்” - சந்தோஷத்தில் மண்ணில் விழுந்து புரண்டான், மூடன்.

“ஆமாம் குருஜி! இனிமேல் நாம் எதற்காகவும் கஷ்டப்பட வேண்டாம். இதோ பாருங்கள்...” என்றபடி, செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பரமார்த்தரிடம் காண்பித்தான் முட்டாள்.

“பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியாம்... சும்மா போனால் வேலை கிடைக்காதாம். பெரிய பட்டமா இருந்தால்தான் தருவார்களாம்” என்றான் மட்டி.

“குருவே! மூணு வயசிலேயே ஏரிக்கரை மேல் ஏறி, பட்டம் விட்ட வரலாறு உங்களுக்கு உண்டு! ‘பட்டம் விட்டு, எதிரியின் கொட்டம் அடக்கிய குரு’ நீங்க மட்டும்தான்! அதனால், இப்பவே பெரிய பட்டம் ஒண்ணு தயார் செய்யுங்கள்” என்றான், மடையன்.

உடனே பரமார்த்த குரு, நீளமான வாலுடன் பெரிய பட்டம் ஒன்றைச் செய்தார்! பட்டத்தில் தன் படத்தையும், வாலில் சீடர்களின் படத்தையும் வரைந்தார்!

பரமார்த்தர், பட்டத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டார். சீடர்கள் ஐவரும், தரையில் விழாதபடி ஆளுக்குக் கொஞ்சம் வாலைப் பிடித்துக் கொண்டு, கணினி நிறுவனத்துக்குச் சென்றனர்! அலுவலகத்தின் எதிரே நின்றுகொண்டு, “இந்தப்பட்டம் போதுமா? இன்னும் பெருசா வேணுமா?” என்று முழக்கம் செய்தனர்!

சப்தம் கேட்டு வெளியே வந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேலாளர், “உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.

“இவர்தான் எங்கள் குரு. அமெரிக்க அதிபருக்கே பட்டம் விடுவதற்குக் கற்றுத் தந்தவர்! இந்தப் பெரிய பட்டத்தின் சொந்தக்காரர். விளம்பரம் செய்தபடி வேலை கொடுங்கள்!” என்றனர் சீடர்கள்.

“இவரைப் பார்த்தால், பட்டத்து யானை மாதிரி அல்லவா இருக்கிறார்! படித்துப் பட்டம் பெற்றவர் மாதிரி இல்லையே...” என்றார், மேனேஜர்.

“ஞானசம்பந்தர், மூணு வயசுல ஞானப்பால் குடிச்சுட்டுப் பாடினார். ஆனால் எங்க குருஜி கழுதைப்பால் குடித்தார்! அவ்வளவுதான் வித்தியாசம்! - சீடர்கள் இப்படிச் சொன்னதும்,

“இவருக்கு கம்ப்யூட்டர் பற்றி என்ன தெரியும்? கீ போர்டு என்றால் என்ன?” என்று கேட்டார், மேனேஜர்.

“கீ என்றால் சாவி! சைக்கிள் சாவி, பீரோ சாவி, பெட்ரூம் சாவி... இப்படி எல்லா சாவிகளையும் ஒரு போர்டில் மாட்டி வைத்தால், அதுதான் கீ போர்டு!” - இப்படிப் பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள், “பலே,பலே” என்று கை தட்டினர்!

அடுத்த கேள்வி கேட்கப்பட்டது - “சாஃப்ட்வேர் என்றால் என்ன?”

“அண்டர்வேர் என்றால் உள்ளாடை. சாஃப்ட்வேர் என்றால் மென்மையான ஆடை!” - பரமார்த்தரின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபம்கொண்டார், கணினி மேலாளர். “தடிமாடுகளா! இப்போதே ஓடிவிடுங்கள்... இல்லை யென்றால், போலீஸைக் கூப்பிடுவேன்” என்றார்.

அவ்வளவுதான்! “ஐயையோ! மறுபடி போலீஸா?” என்று அலறியவாறு பரமார்த்த குருவும் சீடர்களும் ஓட்டம் பிடித்தனர்.

மடத்தின் திண்ணையில் சோகமாக உட்கார்ந்திருந்தார், பரமார்த்தர்.

இதையும் படியுங்கள்:
முதுமையைத் தள்ளிப்போட உதவும் 7 உணவுகள்!
ஓவியம்; பிள்ளை

“பூகம்பமே வந்தாலும் புன்னகை பூக்கின்ற நீங்கள், இப்படிக் கவலைப் படலாமா?” என்றான், முட்டாள்.

“எரிமலை வெடிக்கும்போதும் பொரி உருண்டை கொறிக்கிற நீங்கள், இப்படிக் கண்ணீர் விடலாமா?” என்றான், மடையன்.

“குருவே! கவலையில்லை, கவலையில்லை! உங்கள் தொப்பை மீது வான் இடிந்து வீழ்ந்தபோதும், கவலையில்லை!” என்று பாடினான், மூடன்.

“சீடர்களே! என் புதிய திட்டம் தயாராகிவிட்டது” - பரமார்த்தர் இப்படிச் சொன்னதும், “என்ன அது? சீக்கிரம் சொல்லுங்கள்” என்றான், மட்டி.

“அந்த கம்ப்யூட்டர் மேனேஜர் நம்மைத் ‘தடிமாடுகள்’ என்று இழிவுபடுத்திவிட்டான்! அதனால், ஒரு ஜல்லிக்கட்டுக் காளை மாடு அவனை முட்டப்போகிறது பாருங்கள்” என்றார், குரு.

“ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் தடை போட்டு விட்டதே” என்று நினைவுபடுத்தினான், மண்டு.

“உண்மையான காளை மாட்டுக்குத்தானே தடை? நானே ஜல்லிக்கட்டுக் காளையாகி அவனை முட்டப் போகிறேன்!” - பரமார்த்தர் இப்படிச் சொன்னதும், “சபாஷ் குருவே! இப்போதே உங்களைக் காளை மாடாக மாற்றுகிறோம்!” என்ற சீடர்கள், மகிழ்ச்சியில் கன்றுக் குட்டிகளாய்த் துள்ளிக் குதித்தனர்.

மாட்டின் முகத்தைப் படமாக வரைந்தான், முட்டாள். அதைக் கத்தரித்து எடுத்து வந்து, பரமார்த்தரின் முகத்தில் மாட்டினான். அறுந்துபோன பட்டத்து வாலை எடுத்து வந்து, பரமார்த்தரின் முதுகில் ஒட்டினான், மடையன்

பரமார்த்தரின் கொண்டைக்கும் தாடிக்கும் பெயிண்ட் அடித்தான், மண்டு. அந்தக் கொண்டையில் பலூன்களைக் கட்டினான், மட்டி! “குருவே! இனிமேல், இவைதான் உங்கள் கொம்புகள்! கொண்டை கொண்டு சண்டை போடுங்கள். எதிரியைக் குத்துங்கள்” என்றான்.

“குருவே! இப்போது நீங்கள், தாடி வைத்த வாடிவாசல் காளை போலக் காட்சி தருகிறீர்கள். இனிமேல் நீங்கள் எந்த மொழியிலும் பேசக் கூடாது. ‘ம்மா...’ என்று காளைபோலக் கத்த வேண்டும்” என்றான், மூடன். பரமார்த்தரும் ஒருமுறை மாடு போலக் கத்திப்பார்த்தார்!

“வாருங்கள்... இப்போதே சென்று அந்த மேனே ஜரைப் பழிக்குப் பழி வாங்குவோம்” என்றபடி, குருவும் சீடர்களும் கம்ப்யூட்டர் கம்பெனிக்குப் புறப்பட்டனர். போகும் வழியில் நிஜமான காளை மாடு ஒன்று கோபத்துடன் ஓடிவந்தது!

“ஐயோ, குருவே! மோசம் போனோம்! காளை மாட்டு வேஷம் இப்படிக் காலை வாரி விட்டுடுச்சே! அதோட நிஜமான கொம்பு குத்தி, உங்க உடல்ல இருக்குற குடலெல்லாம் வெளியே வரப்போகுது!” - சீடர்கள்  ஐந்து பேரும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

பரமார்த்தர், நிஜக்காளையின் முன்பு மண்டியிட்டு வணங்கினார். ஏ, காளை! இன்றுபோய் வா நாளை!” என்று கெஞ்சினார்! ‘அட! மாடு, மனுஷன் மாதிரி பேசுதே’ என்று ஆச்சரியத்துடன் போய்விட்டது காளை.

மாட்டு முகமூடியைக் கழற்றிவிட்டு, வாலை அறுத்து எறிந்துவிட்டு, ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று மடத்தை நோக்கி ஓடினார், பரமார்த்தர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com