சிறுகதை - அம்மா சமையல்!

Mom's Cooking!
Mom's Cooking!Image credit - pixabay.com
Published on

-பாரதிமணியன்

"என்ன தம்பி ரொம்ப வருத்தமாக இருக்கீங்க!? புதுசா ஹாஸ்டலில் சேர்ந்து இருக்கீங்களா?"

அந்தப் பள்ளியினுடைய 'கேண்டீன்' வாசலில் இருந்த நீளமான சிமெண்ட் பெஞ்சில் கவலையோடு சோகமா உட்கார்ந்திருந்த அருணை பார்த்துக் கேட்டார் அந்தப் பெரியவர்.

அன்போடு அவனிடம் பேசிய அந்தப் பெரியவரைப் பார்த்தால்... அவனுக்கு அவன் தாத்தாவின் ஞாபகம் வந்தது.

அவன் தாத்தாவும் இப்படித்தான். அவன் கொஞ்சம் சோர்ந்து இருப்பதை பார்த்துவிட்டால் போதும், உடனே...

"என்னாச்சுப்பா... ஏதாவது வேணுமா?! அப்பா திட்டிட்டானா? ஸ்கூல்ல நிறைய ஹோம் ஒர்க் கொடுத்துட்டாங்களா?! டீச்சர் திட்டிட்டாங்களா?!" என்று பல கேள்விகளைக் கேட்பார்.

தாத்தவின் அன்பு மிகுந்த கேள்விகளுக்கு, அருண் எப்போதும் பொறுமையாகப் பதில் பேச மாட்டான்.

ஒரு சலிப்போடு, சிடுசிடுவென்றுதான் பதில் சொல்லுவான்.

அப்போதெல்லாம் அவருடைய அன்பு அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் பிரியமாக அக்கறையோடு பேசும் தாத்தா, பாட்டி, அம்மாவின் அன்பை... ஒரு பெரிய விஷயமா நினைக்காம இருந்தவனுக்கு, இந்த  ஹாஸ்டல் வந்த கொஞ்சநாளிலே அது ஒரு பெரிய இழப்பாகத் தெரிகிறது.

எந்த பதிலும் பேசாமல், அழுது கண்கள் சிவந்த கண்களோடு, அவரையே பார்த்துக்கொண்டிருந்த அருணிடம், அந்தப் பெரியவர் திரும்பவும் கேட்டார்.

"ஏன் தம்பி, வீட்டு ஞாபகம் வந்துடுச்சா. புதுசா ஹாஸ்டலில் சேர்ந்த புள்ளைங்க எல்லாருக்குமே முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் இங்க இருக்கிற பசங்ககூட சேர்ந்து பழகினபிறகு சரியாயிடும். கவலைப்படாம, உள்ள போய் சாப்பிடுங்க.

இந்த ஸ்கூலுக்குன்னு மிகவும் நல்ல பேர் இருக்கிறதால, பல ஊர்களிருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே படித்தால் நல்லது என்று, ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள்.

அப்படி வந்து சேர்ந்த பிள்ளைகள்… ஆரம்பத்தில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, பிறகு அந்த இடம் பழகி போகும் வரை அழுகையும் சோகமுமாகவே இருப்பார்கள். "

"ஒண்ணுமில்ல தாத்தா, எனக்குப் பசிக்கவே இல்லை... அதான்..."

அவரிடம் அவன் பசியில்லை என்று சொன்னாலும், உண்மையில் அவனுக்கு நல்ல பசி. ஆனால், இந்த ஹாஸ்டல் சாப்பாடு அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இங்கே ஹாஸ்டலுக்கு வந்தபிறகு, இதை அவன் அப்பாவிடம் போனில் சொல்லி புலம்பினான்.

ஆனால், அவரோ... "உனக்கு போகப்போக பழகிவிடும்" என்று சொல்லிவிட்டார்.

அவன் அம்மாவும்கூட... "அந்த ஊர்லேயே ஒரு வீட்டைப் பாருங்க, நான்வேணா அவன்கூட போய் இருந்துகிறேன்" என்று சொல்லி பார்த்தாள்.

"இவன் ஒருத்தனுக்காக நீ அங்க போறதா... நல்ல வேடிக்கை. இங்கே எனக்கு, நம்ம பொண்ணுக்கு, எங்க அப்பாவுக்கு இப்படி எல்லோருக்கும் யாரு சமைக்கிறதாம்?" என்று கோபப்பட்டார்.

வனிடம் தானாக வந்து பேசியவரிடம், இந்தச் சந்தேகத்தைக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோணிற்று.

"ஏன் தாத்தா, இங்க எல்லாரும் இந்தக் கேண்டீன்ல சாப்பிடும்போது, எனக்கு மட்டும் இந்தச் சாப்பாடு பிடிக்கமாட்டேங்குது?! இந்தச் சாப்பாடு, எங்க அம்மா செஞ்சு தர்ற மாதிரி 'டேஸ்டா' இருக்க மாட்டேங்குது. அதான் எனக்கு அம்மா நினைப்பாகவே இருக்கு..."

பேசப்பேச... அவன் கண்கள் கண்ணீரைச் சிந்த ஆரம்பித்தது.

"அடடா... தம்பி, ஏன் அழற? அழாதே... இங்க என்னைப் பாரு."

அந்தப் பெரியவர் அவனைச் சமாதானபடுத்தியபடி அவன் அருகில் உட்கார்ந்தார்.

"நீ அழாம இருந்தா... உன் அம்மா சமையல் மட்டும் ஏன் ருசியாக இருக்குதுங்கற ரகசியத்தைச் சொல்வேன்."

அவனுடைய கவனத்தை மாற்றி சந்தோஷப்படுத்தவே, அவர் அப்படி பேச்சை ஆரம்பித்தார்.

அவனுக்கும் அவர் சொன்ன விதம் பிடித்து இருந்தது. அம்மா சமையலில் ஏதோ ரகசியம் இருக்கு என்று அவனும் நம்பினான்.

உடனே அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளும் ஆவலில், அவர் முகத்தைப் பார்த்தான்.

"சரி. சொல்லுங்க தாத்தா..."

அருண் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"தம்பி, பேரு என்ன?"

"அருண்..."

"உன் பெயர் ரொம்ப அழகா இருக்கு அருண். அம்மா சமையல் ருசியா இருக்க, இந்த ரெண்டு முக்கியமான விஷயத்தைச் சமையல்ல சேர்க்கணும். மொதல்ல அந்த ரெண்டு விஷயத்தை பத்தி நாம தெரிஞ்சிக்கணும்" என்று அவர் மேலும் சுவாரஸ்யமாக பேச…

இதையும் படியுங்கள்:
சுருளிமலை சுருளி ஆண்டவர் பற்றி தெரியுமா?
Mom's Cooking!

அருண் முக மலர்ச்சியோடு ஆர்வம் பொங்கக் கேட்டான்.

"அது என்ன ரெண்டு விஷயம்?!"

"நீ உன் வகுப்பில முதல் ரேங்க் வாங்கணுமுன்னா என்ன பண்ணுவே?!”

“பாடங்களை நல்லா கவனிக்கணும். அப்புறம் நல்லா படிக்கணும்.”

அவருடைய கேள்விக்குச் சட்டென்று அவன் பதில் சொன்னான்.

“ரொம்ப சரி. நல்லா படிக்கிறவங்க எல்லாம் பாஸ் மார்க் வாங்கிடலாம். ஆனா படிக்கிற எல்லாருமே முதல் ரேங்க் வாங்க முடியறதில்லையே. அது ஏன்?!“

“ஏன்?!“

அவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆர்வத்தில் பரபரப்பாக இருந்தான் அருண். 

அதுக்கு பாடங்களை ஆழமாப் படிக்கிறதோட, ஆர்வமாவும் படிக்கணும்."

"ஆமா ஆமா..." என்று தலையை ஆட்டினான் அருண்.

"அதுமாதிரி அம்மா சமைக்கும்போதே, அதை சாப்பிடப் போறவங்க எல்லாம் வயிறாரச் சாப்பிடணும். அதுக்கு அந்த சமையல் ருசியோடு இருக்கணுங்கற எண்ணத்தோடு, ஆர்வமா சமைப்பாங்க. ஆர்வமா செய்றபோதுதான் நமக்கு செய்கிற வேலையில முழுமையான ஈடுபாடு வரும். ஒரு சமையல் நல்லா இருக்க சேர்க்க வேண்டிய முதல் விஷயம் – ‘முழு ஈடுபாடு’."

"ஓஒ... அப்ப அந்த ரெண்டாவது விஷயம்..."

அவசரமாக விஷயத்தைக் கேட்க துடித்த அருணை ரசித்தபடியே, அவர் தொடர்ந்து பேசினார்.

"அந்த இரண்டாவது விசயம் வேறென்ன! அது அம்மாகிட்ட மட்டுமே இருக்கக்கூடிய ‘அன்பு‘தான். அன்பை சேர்த்து யார் எதைச் செய்தாலும், அது ரசிக்கும்படியாக இருக்கும். அந்த அன்போடு சேர்த்து அம்மா சமையல் செய்யும்போது, அந்த சமையல் ருசியாகவும் இருக்கும் ."

அவர் சொன்ன விளக்கம் அருணுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அன்புன்னா அம்மாதான்னு யாரும் சொல்ல வேண்டியதில்லையே.

ஏன்னா அருணுக்கு அவன் அம்மாவை மிகவும் பிடிக்கும்.

அவனுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்ததும்...
"நீ அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை. உன் வயிறு காய்ந்தா அவங்க  மனசு தாங்காது. நீ இங்க சாப்பிடாம இருந்து, உனக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சுனா, அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க. அதனால் நீ இப்ப சாப்பிடணும்.

இங்க நான்தான் சமையல் செய்துகிட்டு இருந்தேன். இந்த லீவுல சொந்த ஊருக்குப் போய் இருந்தேன். இனிமே நீ என்னோட சமையலைச் சாப்பிடலாம். என்னால முடிஞ்சவரைக்கும் உன் அம்மா மாதிரி அன்பு கலந்து சமைத்துத் தரேன். சரியா அருண் தம்பி?" என்றார் பெரியவர்.

அவருடைய அன்பான பேச்சை கேட்டு, அருண் மனசு சமாதானம் ஆனது. அவன் கேண்டீனில் சாப்பிட மகிழ்ச்சியோடு எழுந்து சென்றான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com