சிறுகதை – இன்னா செய்தாரை..!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்

சூரியன் தன் பொற்கிரணங்களை அனுப்பி, அனைவருக்கும் தன் காலை வாழ்த்துகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

போர்வையைத் தலையோடு இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்த சங்கரின் காதில், “சங்கர்...சங்கர்...” என்று கூப்பிடும் குரல் கேட்கவே, “கொஞ்ச நேரம்மா!” என்று நெளிந்தவனுக்கு, டக்கென்று விழிப்பு வந்தது. எதிரே அம்மாவைக் காணாமல் திகைத்தவன், தன் நிலைமை புரியவும், “இதோ வந்துட்டேன் அத்தை” என்றபடி பரபரவென்று எழுந்தான். அவனுக்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது.

அவன் அப்பாவும், அம்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்கள். துக்கம் கேட்க வந்த மாமா, அவனைத் தன்னோடு வைத்துக் கொள்வதாகச் சொன்னபோது, அவருடைய கருணை உள்ளத்தை ஊரே வாழ்த்தியது.

பல பணிகளைச் செய்வதற்காகவே தன்னை அவர்கள் அழைத்து வந்திருந்தார்கள் என்பது சங்கருக்குக்கு பிறகுதான் தெரிந்தது. மாமா, அத்தை இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். காலம் கடந்து அவர்களுக்கு ஒரு பையன் பிறந்திருந்தான். அவனைப் பார்த்துக்கொள் ளவும், எடுபிடி வேலை செய்யவும்தான் சங்கரை  அழைத்து வந்திருந்தார்கள்.

நல்லவேளையாக அவனை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தார்கள். பள்ளிக்குப் போகும்வரை அத்தைக்கு உதவியாக வீட்டு வேலை செய்து, குட்டித் தம்பியைக் குளிக்க வைத்து, ஊட்டிவிட்டு, பக்கத்துக் காப்பகத்தில் விட்டுச் செல்ல வேண்டும். பள்ளிமுடிந்து திரும்பும்போதே குட்டித் தம்பியை அழைத்துக் கொண்டு வந்து, அத்தை வரும்வரை அவனைக் கவனித்து, பின் அத்தைக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கிவர வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல்தான் அவன் பாடங்களைப் படிக்கவே முடியும். இந்த வேலைகளில் ஒன்றைக் குறை வாகச் செய்தால்கூட அத்தையிடம் ஏச்சுக் களையும், அடிகளையும் வாங்க வேண்டியிருக்கும்.

பல் துலக்கி, முகம் கழுவி முடிப்பதற்குள் அத்தை பல தடவை,  “சங்கர்... சங்கர்” என்று கூப்பிட்டுவிட்டாள். “என்னங்கத்தை?” என்றவன் தலையில் “ணங்” என்று குட்டு வைத்தவள், இவ்வளவு நேரமாடா? என்று வரிசையாக வேலை சொல்ல ஆரம்பித்தாள். மாமாவோ கண்டும் காணாதவர்போல் பேப்பரில் மூழ்கிவிட்டார்.

அன்று இரவு நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. “டேய் சங்கர்! போய்ப் பொட்டுக்கடலை அரை கிலோ வாங்கிட்டு வாடா!” என்றார் அத்தை.

“அத்தை, மழை பெய்யுது!” என்றான் சங்கர் தயங்கிய குரலில். “நீ என்ன உப்பா? சக்கரையா? மழையில் கரைந்துவிட? குடையைப் பிடிச்சிட்டுப் போய்ட்டு வாடா” என்று சிடுசிடுத்தார் அத்தை.

மழையில் துளி நனைந்துவிட்டாலும் தன் சேலைத் தலைப்பால் துவட்டிவிடும் அம்மாவின் நினைவில் வந்த கண்ணீர் மழை நீரோடு கலந்தது.

எப்படியோ கொட்டும் மழையில் தட்டுத் தடுமாறிக் கடைக்குப் போய்வந்தவன், “இந்தாங்க அத்தை” என்று பொட்டுக்கடலையை நீட்டும் போதுதான் கவனித்தான். கையில் வைத்திருந்த மீதிப் பணத்தைக் காணவில்லை.

‘ஐயோ!’ என்று மனதுக்குள் துடித்தான்.

“எங்கடா மீதிப் பணம்?” என்ற அத்தையிடம், பணம் காணாததை நடுங்கிக்கொண்டே சொன்னவன் கண்ணில் நீர் வரத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!
ஓவியம்; தமிழ்

“என்னது! பணத்தைக் காணோமா?” என்று கன்னத்தில் அறைந்தவள், கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். “அப்படி என்ன கவனக்குறைவு? வெளியே போடா! விடிய  விடியக் குளிரிலும், மழையிலும் கிடந் தாத்தான் உனக்கெல்லாம் புத்தி வரும்!” என்றபடி அவன் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து, வெளியே தள்ளிக் கதவை மூடினாள். வழக்கம் போல மாமா வாய்மூடி மௌனமாகவே இருந்தார்.

“அத்தை... அத்தை! மன்னிச்சுக்கங்க. இனி கவனமா இருப்பேன். கதவைத் திறங்க” என்று கதறிய அவன் குரல் மழை ஓசையில் யார் காதிலும் விழவில்லை.

“சார்! வரலாமா?” என்ற குரல் கேட்டு தன் நினைவலைகளிலிருந்து மீண்டான் சங்கர். ஆம்! சங்கர்தான்.

அன்று மழைநாளில் அழுதுகொண்டே எங்கே போகிறோம் என்று தெரியாமல் நடந்தான். ‘திக்கற்றவருக்குத் தெய்வமே துணை’ என்பது போல, ஓரிடத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. ‘கருணை இல்லம்’ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து உள்ளே நுழைந்த அவனை அரவணைத்து அழைத்துக்கொண்டார் அந்தக் காப்பகத்து முதியவர். அவர்கள் நடத்திய பள்ளியிலேயே அவனைப் படிக்க வைத்தவர், தனக்குப் பின்னால் அந்தக் காப்பகத்தை நடத்தும் பொறுப்பையும் ஒப்படைத்துச் சென்றார்.

அவர் காட்டிய வழியில் பல நற்பணிகளைச் செய்து வந்தான் சங்கர். அன்று அவர்கள் திருமேல்குடி என்ற கிராமத்துக்கு, ஆதரவற்றோர் உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல இருந்தார்கள். அழைக்க வந்த உதவியாளருடன் புறப்பட்டான் சங்கர்.

வரிசையாக வந்து அவர்களிடம் உதவிப் பொருட்களைப் பெற்று, ‘நன்றி’ எனச் சொல்லிச் சென்றுகொண்டு இருந்தார்கள் அங்கிருந்த ஆதரவற் றவர்கள். அப்போதுதான் கவனித்தான் அந்த வரிசையில் அத்தையும், மாமாவும் நிற்பதை!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்

அவனிடம் வந்து பொருட்களைப் பெற்றவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

“அத்தை! மாமா! அடையாளம் தெரியலையா? நான்தான் சங்கர்” என்றவுடனேயே, கதறி அழ ஆரம்பித்தார்கள். “சங்கர்! உனக்கு நாங்கள் செய்த பாவத்துக்கு தக்க தண்டனை கிடைத்துவிட்ட தப்பா! எங்க மகன் எங்களை வீட்டைவிட்டுத் துரத்தி விட்டான். இப்போது கோயிலில் யாசகம் வாங்கிச் சாப்பிடுகிறோம்” என்றபடி மறுபடியும் அழ ஆரம்பித் தார்கள்.

“அழாதீங்க உங்கள் மகன்போல நான் இருக்கும்போது நீங்க எதுக்கு அழறீங்க! வாங்க என்னோடு. கடைசிவரை நான் உங்களைப் பார்த்துக்கறேன். அன்று ஆதரவற்று நின்ற என்னைக் காப்பாற்றியதற்கு நான் செய்யும் கைமாறு இதுதான்” என்று தழுதழுத்தபடி அவர்கள் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்ட வனைப் பார்க்க முடியாமல் கண்ணீர் வழிந்தது அத்தை மாமா இருவரின் கண்களிலும்.                                       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com