சிறுகதை - திறமைக்கேற்ற பலன்!

சிறுகதை - திறமைக்கேற்ற பலன்!

பிரகாஷ் கொலு பொம்மைகளைத் தயாரித்து, விற்கும் தொழிலைச் செய்துவந்தான். பொம்மைகளைத் தயாரிப்பதில் வல்லவன். தயாரித்த பொம்மைகளை கூடையில் அடுக்கிவைத்து, சந்தையில் விற்பதற்காக சைக்கிளில் டவுனுக்கு வந்தான். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தேநீர் அருந்திக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு சிறுமி தன் தந்தையுடன் வந்து கூடையில் இருக்கும் பொம்மைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிறுமி பிரகாஷிடம், “நீங்கள்தான் இந்த எல்லாப் பொம்மைகளையும் செஞ்சிங்களா?” என்று கேட்டாள்.

அதற்கு பிரகாஷ், “ஆமாம். நான்தான்… உனக்கு எந்தப் பொம்மை வேண்டும்?” என்று கேட்க, அதை விற்று, காசு வாங்கிவிட்டு, மீண்டும் தேநீர் கடைக்குப் போய் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அந்நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக ஓடி வந்தனர். அதில் ஒருவன் நிலை தடுமாறி, பிரகாஷ் சைக்கிளில் இடித்தான்.  அதில் சைக்கிள் கீழே சரிந்து, கூடையில் இருந்த பொம்மைகளெல்லாம் நொறுங்கிப்போனது.

இதைக் கண்ட பிரகாஷ் கோபம்கொண்டு, அந்த நபரை துரத்திச் சென்றான். சிறிது தூரத்தில் அவன் பிடிபட்டான். அவன் சட்டையைப் பிடித்து, “என் பொம்மைகள் உடைத்ததற்கான பணத்தைத் தா?“ என்றான்.

அந்த நபரோ “காசாவது... பணமாவது... போடா“ என்று சொல்லி, தள்ளிவிட்டு ஓடினான்.  பிரகாஷும் மிகுந்த கோபம்கொண்டு மறுபடியும் அவனைத் துரத்தினான். அந்த நபர் நேராக பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே பிரகாஷும் பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த நபர் பஞ்சாயத்து தலைவரிடம், “இவன் என்னைத் தேவையில்லாமல் அடித்தான் தலைவரே” என்றான்.

பிரகாஷ் “நான் ஒன்றும் செய்யவில்லை. இவன்தான் என் பொம்மைகளை உடைத்தான். அதனால்தான் நான் இவனைத் துரத்தினேன்” என்றான்.

உடனே தலைவர், பிரகாஷை பார்த்து, “முதலில் நீ யார்?” என்று கேட்டார்.

“நான் பக்கத்து ஊரிலிருந்து பொம்மை செய்து, அதை விற்க வந்தவன்.”

உடனே தலைவர் “எங்கே இப்போ ஒரு பொம்மையைச் செய்துகாட்டு... பார்ப்போம்” என்றார்.

பக்கத்தில் தரை ஓடுதான் இருந்தது. எந்த ஒரு மணலும் இல்லை. அதனால் பிரகாஷ், “முடியாது” என்று சொல்ல, பொம்மைகளைத் தள்ளிவிட்டவன் அழுவதுபோல் நடிக்க, அதை நம்பி, பிரகாஷிடம் “அவன் என்கூட இருப்பவன். தவறு செய்யமாட்டான். நீ எப்படி அவன் மேல் கை வைக்கலாம். உன் மேல்தான் தவறு உள்ளது” என்று சொல்லி, பிரகாஷை போலீசிடம் ஒப்படைக்கக் கூட்டிச் சென்றார்.

போகும் வழியில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வாகனம் போவதில் சிரமம் இருந்தது. பிரகாஷும் வருத்தத்தோடு தலை குனிந்தவாறு காரில் இருந்தான். அப்போது காரின் ஜன்னல் வழியே ஒரு கை பிரகாஷ் முகத்தில் பட்டது. அது பிரகாஷிடம் பொம்மை வாங்கிய சிறுமி.

இதையும் படியுங்கள்:
பயத்தை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
சிறுகதை - திறமைக்கேற்ற பலன்!

“மாமா வாருங்கள். உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது. சீக்கிரம்” என்று சொல்லி கார் கதவை திறந்து, அவனை இறக்கிவிட்டாள் அச்சிறுமி.

பின் தலைவரும் “எங்கடா போற?” என்று பின்தொடர்ந்தார்.

அந்த சிறுமி நேராக கோயிலில் உள்ள ஒரு விநாயகர் சிலைக்கு அருகில் கூட்டிச் சென்று, ”மாமா விநாயகர் தும்பிக்கை சிதைந்துவிட்டது. சரிசெய்து தாருங்கள்” என்றாள்.

உடனே பிரகாஷ் பக்கத்தில் இருந்த மண்ணை எடுத்து தும்பிக்கையை உருவாக்கி, நிறம் அடித்து சிலையில் பொருத்தினான். விநாயகர் சிலை மிக தத்ரூபமாக அமைந்துவிட்டது.

இதை ஆச்சரியமாக பார்த்த பஞ்சாயத்து தலைவர் 'ஒரு பொய்யை நம்பி வீணாக சந்தேகப்பட்டோமே’ என மனதுக்குள் வருந்தி, பிரகாஷுக்கு உடைந்த பொம்மைகளுக்கான பணத்தையும் கொடுத்து, அந்தக் கோயிலில் வைக்கவேண்டிய மற்ற சிலைகளையும் செய்வதற்கான ஒப்பந்தத்தையும் தந்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com